பிரண்டன் டெய்லருக்கு தடைக்காலத்தினை வழங்கிய ICC

423

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், துடுப்பாட்டவீரருமான பிரண்டன் டெய்லருக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC), அடுத்த மூன்றரை ஆண்டுகளுக்கு கிரிக்கெட் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு தடை உத்தரவினை வழங்கியிருக்கின்றது.

T20i கிரிக்கெட்டிற்கு தற்காலிக விடைகொடுக்கும் தமிம் இக்பால்

அண்மையில் பிரண்டன் டெய்லர் இந்தியாவினைச் சேர்ந்த சூதாட்ட தரகர்கள் தன்னை அணுகியதாக தன்னுடைய உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கின் வாயிலாக குறிப்பிட்டு அனைவருக்கும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தார்.

சூதாட்ட தரகர்கள் டெய்லரினை அணுகிய விடயம் பூதாகரமானதாக மாறியிருந்ததோடு, அதனையடுத்து அவருக்கு ஆதாரகவும், எதிராகவும் கருத்துக்கள் வெளியாகியிருந்தன.

எனினும் இந்த விடயம் தொடர்பில் அப்போது மௌனம் காத்த ICC, தற்போது இது தொடர்பிலான தமது தீர்மானத்தினை வெளியிட்டிருக்கின்றது. அதன்படி, பிரண்டன் டெய்லர் ICC இன் ஊழல் தடுப்பு விதிமுறைகளை நான்கு பிரிவுகளில் மீறியதாகவும், ICC இன் ஊக்க மருந்து தொடர்பிலான விதிமுறைகளை ஒரு பிரிவில் மீறியதாகவும் குற்றவாளியாக இனம் காணப்பட்டிருக்கின்றார்.

இந்த விதிமுறைகளை மீறியதன் அடிப்படையிலேயே பிரண்டன் டெய்லருக்கு தடைக்காலம் வழங்கப்பட்டிருக்கின்றது. பிரண்டன் டெய்லரும் தனது குற்றங்களை மறுப்பின்றி ஒப்புக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உபாதையினால் மே.இ.தீவுகள் தொடரிலிருந்து வெளியேறும் மோர்கன்

பிரண்டன் டெய்லர் தன்னை சூதாட்ட தரகர்கள் ஜிம்பாப்வேயில் கிரிக்கெட் தொடர் ஒன்றினை ஏற்பாடு செய்வதாக கூறியே சந்திந்திருந்ததாக கூறியிருந்ததோடு, அதற்காக 15,000 அமெரிக்க டொலர்களை அவருக்கு வழங்குவதற்கு முன் வந்ததாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன் டெய்லர் அவருக்கு வற்புறுத்தலின் அடிப்படையில் போதை மருந்து வழங்கப்பட்டு, அவரினை சூதாட்ட தரகர்கள் மிரட்டியதாகவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்டவீரர்களில் ஒருவராக இருந்த 35 வயது நிரம்பிய பிரண்டன் டெய்லர் கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் ஓய்வினை அறிவித்திருந்ததோடு, ஓய்வு பெறுவதற்கு முன்னர் அவர் சர்வதேச போட்டிகளில் 9,500 ஓட்டங்கள் வரை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<