இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், அதிரடி ஆட்டக்காரருமான பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை பிரண்டன் மெக்கல்லத்துடன் கடந்த சில தினங்களாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்ததாகவும், இறுதிக்கட்ட இணக்கப்பாட்டுக்கு இரு தரப்பினரும் வந்திருப்பதாகவும் Cricbuzz இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வருகின்ற பிரண்டன் மெக்கல்லமை இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய நிர்வாக இயக்குநரான ரொப் கீ, தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது, இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக செயல்படுவதில் பிரண்டன் மெக்கல்லம் ஆர்வமாக இருப்பதாகவும், இதற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இந்த வாரம் எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- மழையினால் கைவிடப்பட்ட இலங்கை டெஸ்ட் அணியின் பயிற்சிப் போட்டி
- இலங்கைக்கெதிரான முதல் டெஸ்டிலிருந்து வெளியேறும் சகீப்
- இங்கிலாந்தில் இரட்டைச் சதமடித்த இலங்கையின் இளம் வீரர்
இதுதொடர்பில் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ”இந்த தருணத்தில் எம்மால் எதுவும் சொல்ல முடியாது. பயிற்சியாளர் தேர்வு செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது. இந்த வார இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும்” என்று Cricbuzz இடம் கூறினார்.
இந்த ஆண்டு முற்பகுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என இங்கிலாந்து அணி பறிகொடுத்தது. இதனையடுத்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வூட் அதிரடியாக பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதனையடுத்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை டெஸ்ட் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் இரண்டிற்கும் தனித்தனியாக பயிற்சியாளர்களுக்கு விண்ணப்பங்களை கோரியது.
40 வயதான பிரண்டன் மெக்கல்லம், நியூசிலாந்து அணிக்காக 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2016 இல் கிறைஸ்ட்சேர்ச்சில் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார். டெஸ்ட் அரங்கில் 12 சதங்கள் மற்றும் 31 அரைச்சதங்கள் உட்பட 6,453 ஓட்டங்களை அவர் குவித்துள்ளார்.
ஒருவேளை, பிரண்டன் மெக்கல்லம் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால், அவரது முதல் தொடராக நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் அமையவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் லோர்ட்ஸ், நொட்டிங்ஹாம் மற்றும் லீட்ஸ் ஆகிய மைதானங்களில் எதிர்வரும் ஜூன் 2ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.
முன்னதாக, கடந்த மாதம் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டார். இவரும் நியூசிலாந்தில் பிறந்தவர் என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<