இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான பயிற்றுவிப்பாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் பிரெண்டன் மெக்கலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் சபை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கென இரண்டு தனித்தனி பயிற்றுவிப்பாளர்களை நியமித்திருந்தது.
>>நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்தம் அறிவிப்பு!
அதன்படி பிரெண்டன் மெக்கலம் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கடந்த இரண்டு ஆண்டுகளாக செயற்பட்டு வருகின்றார்.
அதேநேரம் 2022ம் ஆண்டிலிருந்து மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவந்த மெதிவ் மோட் பதவியிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து புதிய பயிற்றுவிப்பாளர் ஒருவரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
குறித்த இந்த பதவிக்காக புதிய பயிற்றுவிப்பாளர் ஒருவரை நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும், டெஸ்ட் அணியின் பயிற்றுவிப்பாளர் பிரெண்டன் மெக்கலம் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளின் பயிற்றுவிப்பாளராகவும் செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே எதிர்வரும் 2027ம் ஆண்டுவரை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக பிரெண்டன் மெக்கலம் செயற்படுவார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி அடுத்ததாக அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. குறித்த தொடர்களுக்காக தற்காலிக பயிற்றுவிப்பாளராக தற்போதைய உதவி பயிற்றுவிப்பாளர் மார்கஸ் ட்ரெஸ்கோதிக்ஸ் செயற்படவுள்ளார்.
அதனை தொடர்ந்து நடைபெறவுள்ள பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து தொடர்களின் போது தலைமை பயிற்றுவிப்பாளராக பிரெண்டன் மெக்கலம் செயற்படுவார் எனவும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<