ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான பிரண்டன் டெய்லர், இந்தியாவில் வைத்து ஆட்ட நிர்ணயத்தில் (Spot Fixing) ஈடுபட சூதாட்ட தரகர்கள் தன்னை அணுகியதனை ஒப்புக்கொள்வதாக குறிப்பிட்டிருக்கின்றார்.
>>பொதுநலவாய விளையாட்டு விழாவிற்கு தகுதி பெற்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி
அந்தவகையில் தனது ட்விட்டர் கணக்கு மூலமாக இந்த ஆட்ட நிர்ணய விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரண்டன் டெய்லர், இந்திய வியாபாரி ஒருவர் ஆட்ட நிர்ணயத்திற்காக தன்னை அழைத்த விடயத்தினை சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் (ICC) முறைப்பாடு செய்யத் தவறியது தனக்கு பல்வேறு ஆண்டுகள் வரை நீடிக்க கூடிய தடைக்காலத்தினை ஏற்படுத்தக்கூடிய விடயமாக இருக்கும் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.
கடந்த 2019ஆம் ஆண்டு அனுசரணை என்ற பெயரில் ஜிம்பாப்வேயில் T20 தொடர் ஒன்றினை ஏற்பாடு செய்யவிருப்பதாகவும், 15,000 அமெரிக்க டொலர்கள் பணத்தினை வழங்குவதாகவும் கூறி இந்தியாவினைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் டெய்லரினை பேச்சுவார்த்தைகளை அழைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
To my family, friends and supporters. Here is my full statement. Thank you! pic.twitter.com/sVCckD4PMV
— Brendan Taylor (@BrendanTaylor86) January 24, 2022
குறித்த பேச்சு வார்த்தைக்குச் சென்றிருந்த பிரண்டன் டெய்லர், “கொக்கெய்ன்” என்கிற போதைப் பொருளினை பாவித்திருந்ததாக குறிப்பிட்டிருக்கின்றார். தொடர்ந்து பேச்சு வார்த்தை இடம்பெற்ற அடுத்த நாளில், தன்னை பேச்சு வார்த்தைகளுக்கு அழைத்த குழு தான் தங்கியிருந்த ஹோட்டலிற்கு வந்திருந்ததாகவும் அவர்கள் தான் போதைப் பொருள் அருந்துவதை வீடியோ காணொளியில் பதிவு செய்ததனை காட்டி தன்னை மிரட்டியிருந்ததாகவும் டெய்லர் கூறியிருக்கின்றார்.
டெய்லரினை மிரட்டிய குழு, அவரினை குறித்த குழுவிற்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட வேண்டும் என நிர்ப்பந்தம் செய்திருக்கின்றது. எனவே, தனது சொந்த பாதுகாப்பினை கருத்திற்கொண்ட டெய்லர் குறித்த குழுவின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்ததாக தெரிவித்திருக்கின்றார்.
>>SLC தேசிய சுபர் லீக் தொடரின் பிரதான அனுசரணையாளராகும் டயலொக்
அத்துடன், டெய்லர் அப்போது இருந்த ஜிம்பாப்வே கிரிக்கெட் சபையினுடைய நிலைமையும் தான் இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
அத்துடன், இவ்வாறான விடயம் ஒன்றினை சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் முறைப்பாடு செய்யாமல் போனது, தனக்கு தடைக்காலத்தினை ஏற்படுத்தும் விடயமாக இருக்கும் என தான் நம்புவதாக டெய்லர் குறிப்பிட்டிருக்கின்றார்.
பிரண்டன் டெய்லர் ஆட்டநிர்ணய சர்ச்சை ஒன்றில் சிக்கியிருக்கும் இந்த விடயமானது, தற்போது கிரிக்கெட் உலகில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விடயத்தில் டெய்லருக்கு ஆதராகவும், எதிராகவும் கருத்துக்கள் பரவி வருகின்றன.
கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற 35 வயதான பிரண்டன் டெய்லர் ஜிம்பாப்வே அணிக்காக 205 ஒருநாள் போட்டிகளிலும், 34 டெஸ்ட் போட்டிகளிலும், 45 T20 போட்டிகளிலும் ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் பிரண்டன் டெய்லரின் ஆட்டநிர்ணய விடயம் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) விரைவில் அறிக்கை ஒன்றினை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<