கோபா அமெரிக்கா கிண்ணத்தில் இருந்து வெளியேறியது பிரேசில்

332
Brazil knocked out by Peru in group stages
@Getty Image

கோபா அமெரிக்கா கிண்ணக் கால்பந்து போட்டியில் இன்றைய ஆட்டத்தில் பேரு அணியிடம் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாகத் தோல்வி அடைந்தது.

பிரான்சில் ஐரோப்பாக் கிண்ண போட்டிகள் நடைபெற்று வரும் இந்த காலகட்டத்தில் கோபா அமெரிக்கா கிண்ணக் கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

‘பி’ பிரிவில்  இன்று அதிகாலை நடந்த போட்டியில் பிரேசில் – பேரு அணிகள் மோதின. இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாகத் தோற்றது.

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. ஆட்டத்தின் 75ஆவது நிமிடத்தில் பேரு வீரர் ரவுல் ருடியாஸ் முதல் கோலை அடித்தார். ஆனால் அவர் பந்தை அடித்த போது கையில்பட்டது. தொலைக்காட்சி  ரீபிளேயில் இது தெளிவாகத் தெரிந்தது. ஆனால் நடுவர் இதை கவனிக்காமல் கோல் என்று அறிவித்தார்.

பராகுவே வெளியேறியது; அமெரிக்கா முன்னேறியது

இதற்கு பிரேசில் வீரர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் பலன் எதுவும் இல்லை. இதனால் ஏமாற்றம் அடைந்தனர்.

பதில் கோல் அடிக்க பிரேசில் அணி கடுமையாகப் போராடியது. ஆட்டத்தின் இறுதிவரை அந்த அணியால் கோல் போட இயலவில்லை. இதனால் பேரு 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தியது.

இந்தத் தோல்வியால் பிரேசில் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது. அந்த அணி பேரு அணியுடனான போட்டியை சமநிலையில் முடித்தாலே  கால் இறுதிக்கு தகுதி பெற்றிருக்கும். ஆனால் தோற்றதால் வெளியேறும் நிலை ஏற்பட்டது. 31 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் பிரேசில் அணி பேருவிடம் தோல்வியைத் தழுவி இருக்கிறது.

8 முறை சம்பியனான பிரேசில் கடந்த ஆண்டு கால்இறுதியில் தோற்றது. இந்த முறை கால்இறுதிக்கு நுழைய முடியாமல் தொடக்க சுற்றிலேயே வெளியேறியுள்ளது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்