கன்பூரில் நேற்று முன்தினம் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. அப்போட்டியின் போது பொலார்டுக்குப் பந்து வீசிய பிராவோ நேராகச் சென்று அவரை இடித்தார். இதனால் அவருக்கு 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் மும்பை அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும்போது சிறப்பாக ஆடி வந்த ஜொஸ் பட்லரின் விக்கட்டை 14ஆவது ஓவரில் பிராவோ வீழ்த்தினார். அடுத்து பொலார்ட் களம் இறங்கினார். அந்த ஓவரின் கடைசிப் பந்தை பொலார்ட்டுக்கு பவுன்சர் பந்தாக வீசினார். இந்தப் பந்தை நேராக தடுத்து ஆடினார் பொலார்ட். பந்து நேராக பிராவோவிடம் வந்தது. பந்தை எடுத்த பிராவோ நேராக பொலார்டை நோக்கிச் சென்றார். அப்போது பொலார்ட் பிராவோவை அடிக்கும் விதமாக மட்டையைத் தூக்கி தயாராக வைத்திருந்தார். அதேவேளையில் பிராவோ பொலார்ட்டுடன் நெஞ்சுக்கு நேர் மோதினார்.
இது ஐ.பி.எல். நன்னடத்தை விதியை மீறியதாக தெரியவந்தது. இதனால் போட்டியின் சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் அபராதமாக பிராவோவிற்கு விதிக்கப்பட்டுள்ளது.