கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற 2017ஆம் ஆண்டு ரசதிய கிண்ணத்துக்கான கரப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ஆடவர் பிரிவில் பொலன்னறுவை ப்ராண்டிக்ஸ் எத்லெய்சர் (Brandix Athleisure) மற்றும் மகளிர் பிரிவில் மீரிகம ப்ராண்டிக்ஸ் பாஸ்ட் பெஷன் (Brandix Fast Fashion) ஆகிய அணிகள் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தன.

ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில், அவிஸ்சாவெல்லை டீஜெய் லங்கா பிஎல்சி அணி (TeeJay Lanka PLC) பொலன்னறுவை ப்ராண்டிக்ஸ் எத்லெய்சர் அணிக்கு எதிராகப் போட்டியிட்டது. கடந்த வருடம் டீஜெய் லங்கா பிஎல்சி அணியிடம் தோல்வியுற்று இருந்த ப்ராண்டிக்ஸ் எத்லெய்சர் அணி, இம்முறை 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கடந்த வருடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது.    

டீஜெய் லங்கா பிஎல்சி முதல் செட்டில் 20-25 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றியீட்டி முன்னிலை பெற்றபோதிலும், இரண்டாவது செட்டில் 25-22 என்ற புள்ளிகள் அடிப்படையிலும், வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான செட்டில் 17-15 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றியீட்டி பொலன்னறுவை ப்ராண்டிக்ஸ் எத்லெய்சர் அணி கிண்ணத்தை சுவீகரித்தது.

மகளிர் பிரிவின் இறுதிப் போட்டியில், மீரிகம ப்ராண்டிக்ஸ் பாஸ்ட் பெஷன் மற்றும் மினுவாங்கொடை ப்ராண்டிக்ஸ் பாஸ்ட் பாசன் ஆகிய அணிகளுக்கிடையிலான விறுவிறுப்பான போட்டியில் மீரிகம ப்ராண்டிக்ஸ் பாஸ்ட் பெஷன் அணி வெற்றியைப் பதிவுசெய்தது.

மினுவாங்கொடை ப்ராண்டிக்ஸ் பாஸ்ட் பெஷன் கடின போராட்டத்துக்கு மத்தியில் 24-26 என்ற புள்ளிகள் அடிப்படையில் முதல் செட்டில் வெற்றியீட்டி இருந்தாலும், மீரிகம ப்ராண்டிக்ஸ் பாஸ்ட் பெஷன் இரண்டாம் மற்றும் மூன்றாம் செட்டில் முறையே 25-14, 25-21 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் வெற்றிக் கிண்ணத்தை தக்கவைத்துக்கொண்டது.   

ஏழாவது முறையாகவும் நடைபெற்ற ரசதிய கிண்ணப் போட்டிகளில் 17 ஆடவர் அணிகள் மற்றும் 12 மகளிர் அணிகள் உள்ளடங்கலாக மொத்தமாக 350 வீர வீராங்கனைகளுக்கு மேல் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விருதுகள்

ஆடவர் இறுதிப் போட்டி
சிறந்த அமைப்பாளர் (செட்டர்) – சுரேஷ் குமார (ப்ராண்டிக்ஸ் எத்லெய்சர்)
சிறந்த விளையாட்டு வீரர் – அமில இஷான் (ப்ராண்டிக்ஸ் எத்லெய்சர்)
சிறந்த தாக்குதல் வீரர் – ஹரித பெர்னாண்டோ (டீஜெய் லங்கா பிஎல்சி)

மகளிர் இறுதிப் போட்டி
சிறந்த அமைப்பாளர் (செட்டர்) – டில்ஹானி குணசேன (ப்ராண்டிக்ஸ் பாஸ்ட் பெஷன், மீரிகம)
சிறந்த விளையாட்டு வீரர் – ஓஷினி சாபா (ப்ராண்டிக்ஸ் பாஸ்ட் பெஷன், மீரிகம)
சிறந்த தாக்குதல் வீரர் – ஹர்ஷனி கொடிதுவக்கு (ப்ராண்டிக்ஸ் பாஸ்ட் பெஷன், மினுவாங்கொடை)