நியூசிலாந்து T20i அணியின் தலைவராகும் மைக்கெல் பிரேஸ்வெல்

New Zealand Tour Of Pakistan 2024

183

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட T20i தொடருக்கான நியூநிலாந்து அணியின் தலைவராக சகலதுறை வீரர் மைக்கெல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்.  

அதே சமயம் 21 வயது இளம் துடுப்பாட்ட வீரர் டிம் ரொபின்சன் அறிமுக வீரராகவும், இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான 22 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் வில் ரூர்க் முதல் தடவையாக நியூசிலாந்து T20i அணியில் இடம்பிடித்துள்ளார்கள் 

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட T20i தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், T20i தொடருக்கான 15 பேர் கொண்ட நியூசிலாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கேன் வில்லியம்சன், மிட்செல் சாண்ட்னெர், க்ளென் பிலிப்ஸ் உள்ளிட்ட 9 நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் தற்போது நடைபெற்று வருகின்ற ஐபிஎல் தொடரில் ஆடி வருகின்றனர். இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான T20i தொடருக்கான நியூசிலாந்து அணியில் இளம் வீரர்களை பெயரிட அந்நாட்டு தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.   

இதன்படி, பாகிஸ்தான் T20i தொடருக்காக பெயரிடப்பட்டுள்ள நியூசிலாந்து அணியின் தலைவராக சகலதுறை வீரர் மைக்கெல் பிரேஸ்வெல் பெயரிடப்பட்டுள்ளார் 

மைக்கெல் பிரேஸ்வெல் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு நியூசிலாந்து அணிக்கு திரும்பியுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற T20i ப்ளாஸ்டில் வொர்செஸ்டர்ஷையர் அணிக்காக விளையாடிய வலது காலில் காயத்துக்குள்ளாகினார். இதன் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் நியூசிலாந்து அணிக்காக அவர் விளையாடவில்லை. எவ்வாறாயினும், அவர் அண்மையில் நடைபெற்று முடிந்த பிளங்கட் ஷீல்ட் தொடரில் ஒடாகோ அணிக்கெதிரான போட்டியில் 41 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை சாய்த்து முதல்தரப் போட்டிகளில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பிரதியை பதிவு செய்தார். 

இதனிடையே, பாகிஸ்தானுடனான T20i தொடருக்காக பெயரிடப்பட்டுள்ள அணியில் அனுபவ வீரர்களான இஷ் சோதி, டிம் செய்பர்ட், பின் ஆலென் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

நியூசிலாந்து அணி விபரம்  

 

மைக்கெல் பிரேஸ்வெல் (தலைவர்), பின் ஆலென், மார்க் சாம்ப்மென், ஜோஷ் க்ளார்க்சென், ஜேக்கப் டக்ப்பி, டீன் பாக்ஸ்க்ராப்ட், பென் லிஸ்டர், கோல் மெக்கன்சி, ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், வில் ஓ ரூர்க், டிம் ரொபின்சன், பென் சீயர்ஸ், டிம் செய்பர்ட், இஷ் சோதி. 

பாகிஸ்தான் – நியூசிலாந்து இடையிலான T20i அட்டவணை விபரம்;  

  • முதல் T20i போட்டிஏப்ரல் 18 – ராவல்பிண்டி  
  • 2ஆவது T20i போட்டிஏப்ரல் 20 – ராவல்பிண்டி  
  • 3ஆவது T20i போட்டிஏப்ரல் 21 – ராவல்பிண்டி  
  • 4ஆவது T20i போட்டிஏப்ரல் 25 – லாகூர்  
  • 5ஆவது T20i போட்டிஏப்ரல் 27 – லாகூர் 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<