நியூசிலாந்து கிரிக்கெட் சபை (NZC) 2022ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தில் ஆடும் 15 பேர் அடங்கிய நியூசிலாந்து கிரிக்கெட் குழாத்தினை வெளியிட்டிருக்கின்றது.
>> பாபரும், ரிஸ்வானும் தங்களது கவனத்தினை அதிகரிக்க வேண்டும் – மொஹமட் ஹபீஸ்
அதன்படி இன்று (20) அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த குழாத்தில் பின் அலன் மற்றும் மைக்கல் பிரஸ்வெல் ஆகியோர் புதிய உள்ளடக்கங்களாக வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றனர். இந்த வீரர்கள் இருவருக்கும் கன்னி உலகக் கிண்ணத் தொடராக 2022ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடர் அமையவிருக்கின்றது. முன்வரிசை துடுப்பாட்டவீரர்களான இந்த வீரர்கள் இருவரும் நியூசிலாந்தின் உள்ளூர் தொடர்களில் காட்டிய அபாரம் காரணமாகவே தேசிய அணியினை உலகக் கிண்ணத்தில் முதல் முறையாக பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றனர்.
அதேநேரம் வலதுகை வேகப்பந்துவீச்சாளர் அடம் மில்னே மற்றும் டெவோன் கொன்வே ஆகியோரும் T20 உலகக் கிண்ண அணியில் ஆடும் சந்தர்ப்பத்தினை தமதாக்கியிருக்கின்றனர். இதில் டெவோன் கொன்வே அணியின் பிரதான விக்கெட்காப்பாளராக செயற்படவிருக்கின்றார்.
எனினும் உபாதையில் இருந்து பூரணமாக குணமடையாத சகலதுறைவீரர் கைல் ஜேமிசன் உலகக் கிண்ண அணியில் வாய்ப்பினைப் பெறத் தவறியிருக்கின்றார். இவருடன் டோட் அஸ்ல் மற்றும் டிம் செய்பார்ட் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
கேன் வில்லியம்சன் மூலம் வழிநடாத்தப்படும் T20 உலகக் கிண்ண குழாத்தில் வில்லியம்சன் டெவோன் கொன்வெய், மார்டின் கப்டில் ஆகியோர் பிரதான துடுப்பாட்டவீரர்களாக காணப்பட ட்ரென்ட் போல்ட், மிச்சல் சான்ட்னர் மற்றும் டிம் சௌத்தி ஆகியோர் பந்துவீச்சாளர்களாக பலம் சேர்க்கின்றனர்.
>> WATCH – ஆசியக் கிண்ண சம்பியன் பட்டம் சாத்தியமானது எப்படி? கூறும் தசுன் ஷானக!
கடைசியாக நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ணத்திற்கு முன்னர் விளையாடும் கடைசி தொடராக பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் உடன் விளையாடும் முத்தரப்பு T20 தொடர் அமைகின்றது. இந்த முத்தரப்பு T20 தொடரானது ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் T20 உலகக் கிண்ணத்தில் நேரடியாக குழு 1 இல் பங்கேற்கும் வாய்ப்பினை பெற்றிருக்கும் நியூசிலாந்து அணி அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து T20 உலகக் கிண்ண அணி – கேன் வில்லியம்சன் (தலைவர்), பின் அலன், ட்ரென்ட் போல்ட், மைக்கல் பிரஸ்வெல், மார்க் சாப்மன், டெவோன் கொன்வேய், லோக்கி பெர்குஸன், மார்டின் கப்டில், அடம் மில்னே, டரைல் மிச்செல், ஜிம்மி நீஷம், கிளன் பிலிப்ஸ், மிச்சல் சான்ட்னர், இஸ் சொதி, டிம் சௌத்தி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<