தமிம் இக்பாலின் சதத்தோடு சம்பியனாக நாமம் சூடிய கொமில்லா விக்டோரியன்ஸ்

733
BCB Image Courtesy - ESPNCricinfo

ஆறாவது முறையாக இந்த ஆண்டு இடம்பெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக் T20 தொடரின் இறுதிப் போட்டியில், கொமில்லா விக்டோரியன்ஸ் அணி டாக்கா டைனமைட்ஸ் அணியை 17 ஓட்டங்களால் தோற்கடித்து இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது.

கடந்த மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகியிருந்த பங்களாதேஷின் கிரிக்கெட் திருவிழாவான இந்த T20 தொடரில், ஏழு அணிகள் பலப்பரீட்சை நடாத்தியிருந்தன.

அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக ரிக்கி பொன்டிங்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளர் டேவிட் சாகர் தனது…

இந்த ஏழு அணிகளில் குழுநிலைப் போட்டிகளின் மூலம் பிளே ஓப் சுற்றுக்கு தெரிவாகியிருந்த கொமில்லா விக்டோரியன்ஸ் அணி, பிளேப் ஓப் சுற்றின் முதல் தகுதிகாண் போட்டியில் றங்க்பூர் ரைடர்ஸ் அணியினை 8 விக்கெட்டுக்களால் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

மறுமுனையில் டாக்கா டைனமைட்ஸ் அணி பிளே ஓப் சுற்றில் சிட்டகொங்க் வைகிங்ஸ் அணியினை 6 விக்கெட்டுக்களால் தோற்கடித்தும், றங்க்பூர் ரைடர்ஸ் அணியினை 5 விக்கெட்டுக்களால் தோற்கடித்தும் இறுதிப் போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்றது.

டாக்கா நகரின் சேர்-ஈ-பங்களா மைதானத்தில் வெள்ளிக்கிழமை (8) ஆரம்பமாகிய இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டாக்கா டைனமைட்ஸ் அணியின் தலைவர் சஹீப் அல் ஹஸன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை கொமில்லா விக்டோரியன்ஸ் அணிக்காக வழங்கினார்.

பங்களாதேஷ் பிரீமியர் லீக் T20 தொடரில் ஏற்கனவே டாக்கா டைனமைட்ஸ் அணி மூன்று தடவைகள் சம்பியன் பட்டம் வென்ற காரணத்தினால் இறுதிப் போட்டியிலும் அவர்களின் ஆதிக்கமே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இதற்கமைவாக முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த கொமில்லா விக்டோரியன்ஸ் அணி, ஆரம்பத்தில் தடுமாற்றம் ஒன்றை காட்டியது. எனினும், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பால் அபார சதம் ஒன்றை விளாசினார்.

மொத்தமாக 61 பந்துகளை எதிர்கொண்ட தமிம் இக்பால் 11 சிக்ஸர்கள் மற்றும் 10 பெளண்டரிகள் அடங்கலாக 141 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்காமல் நின்றார். அத்தோடு இந்த 141 ஓட்டங்கள் T20 போட்டிகளில் தமிம் இக்பாலின் 3 ஆவது சதமாகவும் அமைந்தது.

இந்த சதத்தின் உதவியோடு கொமில்லா விக்டோரியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 199 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

இதேநேரம் டாக்கா டைனமைட்ஸ் அணியின் பந்துவீச்சில் ரூபெல் ஹொசைன் மற்றும் அணித்தலைவர் சஹீப் அல் ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 200 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய டாக்கா டைனமைட்ஸ் அணி முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களான உபுல் தரங்க மற்றும் ரோனி தலுக்தார் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தோடு வெற்றி இலக்கினை நோக்கி விரைவாக முன்னேறியது.

இவர்களில் உபுல் தரங்க 27 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 48 ஓட்டங்களை பெற்றதுடன், ரோனி தலுக்தார் 6 பெளண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 38 பந்துகளில் 66 ஓட்டங்களை குவித்திருந்தார்.

கௌண்டி கிரிக்கெட்டில் அறிமுகமாகவுள்ள ஜேசன் ஹோல்டர்

இங்கிலாந்தில் உள்ளூர் கழகங்களுக்கு இடையில் நடைபெற்று…

எனினும், உபுல் தரங்க மற்றும் ரோனி தலுக்தார் ஆகியோரின் விக்கெட்டுக்களின் பின்னர் திசர பெரேரா மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோரின் பந்துவீச்சிற்கு தடுமாறத் தொடங்கிய டாக்கா டைனமைட்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களை மட்டும் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.

டாக்கா டைனமைட்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் மத்திய வரிசை வீரர்கள் பிரகாசிக்கத் தவர, கொமில்லா விக்டோரியன்ஸ் அணியின் பந்துவீச்சில் அவர்களது வெற்றியினை வஹாப் ரியாஸ் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் திசர பெரேரா மற்றும் மொஹமட் சயீபுத்தின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியும் உறுதி செய்திருந்தனர்.

இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக தமிம் இக்பால் தெரிவாக, தொடர் நாயகன் விருதை சஹீப் அல் ஹசன் வென்றார்.

போட்டியின் சுருக்கம்

கொமில்லா விக்டோரியன்ஸ் – 199/3 (20) – தமிம் இக்பால் 141*(61), கிப் அல் ஹசன் 45/1(4), ருபெல் ஹொசைன் 48/1(4)

டாக்கா டைனமைட்ஸ் – 182/9 (20)உபுல் தரங்க 48(27), ரோனி தலுக்தார் 66(38), வஹாப் ரியாஸ் 28/3(4), திசர பெரேரா 35/2(4), மொஹமட் சயீபுத்தின் 38/2(4)

முடிவு கொமில்லா விக்டோரியன்ஸ் அணி 17 ஓட்டங்களால் வெற்றி  

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க