ஆசிய பசிபிக் தொழில்முறை குத்துச் சண்டையில் சம்பியனானார் விஜேந்தர் சிங்

312
Boxing : Vijender Singh beats Kerry Hope to clinch WBO Asia Pacific title
Getty

இந்தியாவின் விஜேந்தர் சிங் கலந்து கொண்ட ஆசிய பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் பட்டத்துக்கான தொழில்முறை குத்துச்சண்டைப் போட்டி தலைநகர் புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், விஜேந்தர் சிங் (30 வயது, 75.7 கிலோ) – அவுஸ்திரேலிய வீரர் கெர்ரி ஹோப்பை (34 வயது, 74.9 கிலோ) எதிர்கொண்டார்.

இந்தப் போட்டி, டெல்லி தியாகராஜா ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7.00 மணிக்கு நடைபெற்றது. இந்தப் போட்டி மொத்தம் 10 சுற்றுகளைக் கொண்டதாகும். 10 சுற்றுகளைக் கொண்ட போட்டியில் விஜேந்தர் பங்கேற்பது இதுவே முதல்முறை. தொழில்முறை குத்துச்சண்டையில் முதல்முறையாக சொந்த ஊரில் கோதாவில் இறங்கிய விஜேந்தர்சிங்கின் ஆட்டத்தைக் காண காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா, கிரிக்கெட் வீரர்கள் ஷேவாக், யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் என்று ஏராளமான பிரபலங்கள் குவிந்தனர்.

பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியாவின் விஜேந்தர் சிங், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹெர்ரி கோப்பை வீழ்த்தி சாம்பியம் பட்டம் வென்றார். விஜேந்தர்சிங் 98-92, 98-92, 100-90 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தொழில்முறை போட்டியில் 7ஆவது முறையாக அவர் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி உறுதியானதும் பரவசத்தில் விஜேந்தர்சிங் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்