உலகப் புகழ் பெற்ற 74 வயது நிரம்பிய அமெரிக்காவைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரரான முஹம்மது அலி சுவாசம் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காசியஸ் மார்க்கெல்லஸ் கிளே என்ற இயற்பெயரைக் கொண்ட முஹம்மது அலி தொழில்முறை குத்துச்சண்டை உலகில் முடிசூடா சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தவராவார். 61 குத்துச்சண்டைக் களங்களைக் கண்ட அலி, வரிசையாக மூன்று முறை உலகச் சாம்பியன் பட்டங்களைப் பெற்றதுடன், 56 வெற்றிகளையும், வெறும் ஐந்தே தோல்விகளையும் கண்டவர் என்ற தனிப்பெரும் சாதனை வரலாற்றுக்கு சொந்தக்காரரும் ஆவார்.
கடந்த முப்பது ஆண்டுகளாக “பார்கின்சன் டிஸீஸ்” எனப்படும் நடுக்க வாதம் நோயால் பாதிக்கப்பட்ட அலி, 1981-ம் ஆண்டுக்கு பின்னர் குத்துச் சண்டைப் போட்டிகளில் பங்கேற்கவில்லை. சமீபகாலமாக நுரையீரல் அழற்சி மற்றும் சிறுநீரகப்பாதை தொற்று உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்ட முஹம்மது அலி, அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள போயினிக்ஸ் நகரில் வசித்துவருகிறார்.
தற்போது சுவாசம் சார்ந்த பிரச்சினைகளால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் முஹம்மது அலியை அவரது குடும்பத்தார் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக முஹம்மது அலியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்