இம்முறை இளையோர் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக மஹேல ஜயவர்தன இணைவது அணிக்கு கூடுதல் பலத்தைக் கொடுக்கும் என இலங்கை 19 வயதின் கீழ் அணியின் பயிற்சியாளர் அவிஷ்க குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகளில் இம்மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐசிசி இன் 19 வயதின் கீழ் உலகக் கிண்ணத் தொடர் (இளையோர் உலகக் கிண்ணம்) ஆரம்பமாவதற்கு முன் இலங்கை அணி இரண்டு பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இதன்படி, இலங்கை 19 வயதின் கீழ் அணி, உகண்டா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுடன் பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை இளையோர் உலகக் கிண்ணத் தொடரில் குழு D இல் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, வயதின்கீழ் உலகக் கிண்ணத்தில் டி குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, தனது ஆரம்பப் போட்டியில் ஸ்கொட்லாந்தை எதிர்வரும் 14ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது.
>> இளையோர் உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணியுடன் இணையும் மஹேல
அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவை ஜனவரி 17ஆம் திகதியும் வரவேற்பு நாடான மேற்கிந்தியத் தீவுகளை ஜனவரி 21ஆம் திகதியும் இலங்கை அணி சந்திக்கவுள்ளது.
இந்த நிலையில், இம்முறை இளையோர் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தயார்நிலை பற்றி பயிற்சியாளர் அவிஷ்க குணவர்தன நேற்று (05) இடம்பெற்ற இணையவழி ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்,
இம்முறை இளையோர் உலகக் கிண்ணத்திற்காக எமது அணி சிறந்த முறையில் தயாராகி உள்ளது. குறிப்பாக, எமது வீரர்கள் கடந்த நான்கு மாதங்களாக தமது திறமைகளை வெளிப்படுத்தியருந்தார்கள். நாங்கள் விளையாடிய 15 போட்டிளில் 11இல் வெற்றிபெற்றோம்.
இதில் கடைசியாக நடைபெற்ற இளையோர் ஆசிய கிண்ணத் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டோம். அந்த தொடர் முழுவதும் எமது வீரர்கள் சிறப்பாக விளையாடியிருந்தார்கள். ஆனால் எமது துடுப்பாட்ட வரிசையை இன்னும் பலப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன் என குறிப்பிட்டார்.
அத்துடன், இம்முறை இளையோர் ஆசிய கிண்ணத் தொடரின் அரை இறுதிப் போட்டியில் நாங்கள் அதிக புற்கள் கொண்ட ஆடுகளத்தில் தான் விளையாடினோம். ஆனால், எமது வீரர்கள் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்தார்கள். புற்தரை ஆடுகளத்தைக் கண்டு எமது வீரர்கள் பயப்படவில்லை. பாகிஸ்தான் அணியில் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்கள் மூவர் விளையாடியிருந்தனர். எனவே, அவ்வாறான வேகப் பந்துவீச்சாளர்கள் இருந்தும் எமது வீரர்கள் சிறந்த மனநிலையுடன் முதலில் துடுப்பெடுத்தாடினார்கள். குறிப்பாக, அணித்தலைவர் துனித் வெல்லாலகே சிறந்த முறையில் அணியை வழிநடத்தி வருகின்றார்.
எமது வேகப் பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் மதீஷ பதிரன, கட்டுப்பாட்டு மற்றும் வேகத்தை தக்கவைத்துக் கொண்டு பந்துவீசுகிறார். இறுதி ஓவர்களில் பழைய பந்தில் அவரது பங்களிப்பானது எமக்கு சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொடுத்துள்ளது என்பதை அவதானிக்க முடிகின்றது என அவர் கூறினார்.
இதனிடையே, இலங்கை 19 வயதின் கீழ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட முன்னாள் இலங்கை வீரர் மஹேல ஜயவர்தன, இம்மாதம் 8ஆம் திகதி மேற்கிந்திய தீவுகள் நோக்கி புறப்பட்டுச் செல்லவுள்ளார். அதன்பிறகு 9ஆம் திகதி மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைக்குப் பிறகு இலங்கை அணியுடன் அவர் இணைந்துகொள்ளவுள்ளார்.
>> U19 உலகக்கிண்ணத்துக்காக மே.தீவுகள் புறப்பட்ட இலங்கை அணி
இதனிடையே, இம்முறை இளையோர் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் ஆலோசகராக மஹேல ஜயவர்தன இணைந்துகொள்வது தொடர்பில் அவிஷ்க குணவர்தன கருத்து வெளியிடுகையில்,
மஹேல ஜயவர்தன பயிற்றுவிப்பு ஆலேசாகராக எமது அணியுடன் இணைந்து கொள்ளவுள்ளார். அவர் எமது அணியுடன் இணைவது இன்னும் கூடுதல் நன்மையைக் கொடுக்கும் என தெரிவித்தார்.
இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் இலங்கை அணி, 2000ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் விளையாடியிருந்தது. இதில் மலிந்த கஜநாயக்க தலைமையில் களமிறங்கிய இலங்கை அணி, இந்தியாவிடம் தோல்வியைத் தழுவி சம்பியன் பட்டத்தை தவறவிட்டது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<