கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரை ஹெட்ரிக் விக்கெட்டுகள் கைப்பற்றப்படுவது என்பது மிக மிக குறைவான ஒன்று. அதிலும் குறிப்பாக, மூன்று வெவ்வேறு திறமைக்கொண்ட துடுப்பாட்ட வீரர்களை தொடர்ச்சியாக மூன்று பந்துகளில் ஆட்டமிழக்கச்செய்வது இலகுவான விடயமல்ல. இந்த சம்பவம் எப்போதும் நடந்துவிடாது.
சர்வதேச கிரிக்கெட் ஆரம்பித்து காலங்கள் கடந்துசெல்கிறது. ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பித்து 49 வருடங்கள் கடந்து விட்டன. இதுவரையில், 4,261 ஒருநாள் போட்டிகளை காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைத்திருக்கிறது. ஆனால், இத்தனை போட்டிகளிலும், வருடத்துக்கு ஒன்று என்ற சராசரியில் வெறும் 49 ஹெட்ரிக் விக்கெட்டுகள் மாத்திரமே கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
IPL 2020 தொடரிலிருந்து விலகிய முன்னணி வீரர்கள்
போட்டிகள் 4,000 கடந்து, வருடங்கள் 49 கடந்து, ஹெட்ரிக் விக்கெட்டுகள் 49 மட்டுமே என்றால், ஹெட்ரிக் – விக்கெட்டுகள் கைப்பற்றுவது என்பது சர்வதேச கிரிக்கெட்டில் எத்தனை கடினமான ஒன்று என்பதை எம்மால் அறியமுடிகின்றது. இவ்வாறு கடினமான சாதனையை தங்களுடைய முதல் ஒருநாள் போட்டியில் கைப்பற்றுகிறார்கள் என்றால், அது மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சமாகும்.
அப்படியான மிகச்சிறப்பு வாய்ந்த ஹெட்ரிக் விக்கெட்டுகளை உலகின் நான்கு வீரர்கள் மாத்திரமே கைப்பற்றியுள்ளனர். அந்த நான்கு வீரர்களின் எமது நாட்டைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் இடம்பிடித்திருப்பது இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த மாபெரும் பெருமையாகும்.
அந்தவகையில் நாம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில், தங்களுடைய கன்னி போட்டியிலேயே ஹெட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய அந்த நான்கு வீரர்களின் பட்டியலை இங்கு பார்ப்போம்.
தைஜுல் இஸ்லாம் – பங்களாதேஷ் (2014)
தைஜுல் இஸ்லாம் 2014ம் ஆண்டு நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில், ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகினார்.
ஏற்கனவே நடைபெற்ற தொடரின் 4 போட்டிகளில் அனைத்தையும் வெற்றிக்கொண்டு, பங்களாதேஷ் அணி தொடரில் 4-0 என முன்னிலை வகித்தது. இவ்வாறான நிலையில், வைட்வொஷ் தோல்வியை தவிர்க்க மிகச்சிறந்த ஆரம்பத்தை பெற்ற ஜிம்பாப்வே அணிக்கு பங்களாதேஷ் சுழல் பந்துவீச்சாளர்கள் தடுமாற்றத்தை கொடுத்தனர்.
Video – டோனி, கோஹ்லி, டிவில்லியர்ஸின் முத்தான சாதனைகள் |Sports RoundUp – Epi 133
இதன்போது, தன்னுடைய 6வது ஓவரை வீசிய தைஜுல் இஸ்லாம் அந்த ஓவரின் இறுதிப் பந்தில், டினாஷே பன்யங்காரவை போல்ட் முறையில் ஆட்டமிழக்கச்செய்து ஓவரை நிறைவுசெய்தார்.
பின்னர், தன்னுடைய அடுத்த ஓவரை வீச அழைக்கப்பட்ட தைஜுல் இஸ்லாம், முதல் பந்திலேயே ஜோன் நியம்புவை LBW முறையில் வெளியேற்றி, தொடர்ச்சியாக இரண்டாவது விக்கெட்டை வீழ்த்தினார். இறுதியாக தன்னுடைய அடுத்த பந்தில் டெண்டாய் சட்டாரவை போல்ட் முறையில் வீழ்த்தி, கன்னி ஒருநாள் போட்டியில் கன்னி ஹெட்ரிக் விக்கெட்டினை கைப்பற்றினார்.
இதன்மூலம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், தன்னுடைய அறிமுக போட்டியில் ஹெட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையை தைஜுல் இஸ்லாம் பெற்றுக்கொண்டார்.
காகிஸோ ரபாடா – தென்னாபிரிக்கா (2015)
சர்வதேச கிரிக்கெட்டுக்கு காகிஸோ ரபாடா அழைக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை அவருடைய பந்துவீச்சு பேசுபொருளாகவே உள்ளது. இளம் வயது வீரராக இருந்தாலும், இப்போதைய நிலையில் தென்னாபிரிக்க அணியின் அனுபவ வீரர்களுக்கு இணையாக அந்த அணியில் அவர் இடம்பிடித்துள்ளார்.
பங்களாதேஷ் அணி கடந்த 2015ம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட நிலையில், தொடரின் முதல் போட்டியில் 20 வயதான காகிஸோ ரபாடாவை தென்னாபிரிக்க அணி அறிமுகப்படுத்தியது.
இளம் வீரராக இருந்தாலும், கன்னி ஒருநாள் போட்டி என்றாலும், தன்னுடைய முழு பந்துவீச்சு பலத்தையும் வெளிக்காட்டிய ரபாடா, தன்னுடைய முதல் ஓவருக்கு 2 ஓட்டங்களை மாத்திரமே வழங்கினார். பின்னர், தன்னுடைய இரண்டாவது ஓவரில் மூன்று பந்துகளை ஓட்டமற்ற பந்துகளாக வீசிய இவர், 4வது பந்தில் பங்களாதேஷ் அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரரான தமிம் இக்பாலை போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.
சகலகலா வல்லவர்களாக இருந்த கிரிக்கெட் வீரர்கள்
தொடர்ந்து அடுத்த பந்தில் லிடன் டாஸ், பர்ஹான் பெஹார்தீனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஓவரின் இறுதிப் பந்தில் மஹ்மதுல்லாஹ்வை LBW முறையில் வீழ்த்தி தன்னுடைய முதல் போட்டியில் கன்னி ஹெட்ரிக் விக்கெட்டினை பதிவுசெய்தார்.
காகிஸோ ரபாடா தன்னுடைய கன்னி ஹெட்ரிக் விக்கெட்டினை கைப்பற்றியது மாத்திரமின்றி, இந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, தன்னுடைய முதல் போட்டியில் 5 விக்கெட் பிரதியொன்றையும் கடந்திருந்தார்.
வனிந்து ஹசரங்க – இலங்கை (2016)
இலங்கை கிரிக்கெட் அணிக்கு நம்பிக்கை தரக்கூடிய சகலதுறை வீரராக வளர ஆரம்பித்திருப்பவர் வனிந்து ஹசரங்க. இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சை அகில தனன்ஜய தாங்கிப்பிடித்திருந்த நிலையில், அவரின் தடைக்கு பிறகு வனிந்துவின் பெயர் வெளிவரத் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டிலிருந்து வனிந்துவின் ஆட்டங்கள் அனைவர் மத்தியிலும் பேசப்பட்டாலும், அவரின் அறிமுகப் போட்டியின் சாதனையை யாரும் பெரிதாக அறிந்திருக்கவில்லை.
இலங்கை ஒருநாள் அணிக்காக கடந்த 2017ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகியிருந்த இவர், கன்னி ஒருநாள் போட்டியில் ஹெட்ரிக் விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார்.
Video – எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்திய RCB | Cricket Galatta Epi 36
நீண்ட இடைவேளைக்கு பின்னர் இலங்கை அணி காலி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஒருநாள் போட்டியில், தடுமாற்றத்துக்கு முகங்கொடுத்து துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணியின் இறுதி மூன்று விக்கெட்டுகளையும் வனிந்து கைப்பற்றி இந்த சாதனையை பதிவுசெய்தார்.
போட்டியில் தனக்கு வழங்கப்பட்ட மூன்றாவது ஓவரின் இரண்டாவது பந்தில், மெல்கோம் வோலரின் விக்கெட்டினை கைப்பற்றினார். இதனையடுத்து டொனால்ட் ட்ரைபனோ LBW முறையில் ஆட்டமிழக்க, அடுத்தப் பந்தில் டெண்டாய் சட்டாரா போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இவர்களின் ஆட்டமிழப்புகளை கைப்பற்றிய வனிந்து ஹசரங்க கன்னி ஒருநாள் போட்டியில் ஹெட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றும் இரண்டாவது சுழல் பந்துவீச்சாளர் என்ற பெருமையும் பெற்றுக்கொண்டார்.
ஷெஹான் மதுசங்க – இலங்கை (2018)
இலங்கை அணி புதிய வேகப் பந்துவீச்சாளர்களை அணிக்கு அழைத்துவரும் எண்ணத்தில், அழைக்கப்பட்ட பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஷெஹான் மதுசங்க. இவர், பங்களாதேஷ், ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் மாத்திரமே இலங்கை ஒருநாள் அணிக்காக விளையாடினார்.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இலங்கை அணி 221 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்த நிலையில், பங்களாதேஷ் அணி 127 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், மஹ்மதுல்லாஹ் பங்களாதேஷ் அணிக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் துடுப்பெடுத்தாடி வந்தார்.
இந்த நிலையில், மதுசங்க தனது அபார பந்துவீச்சின் மூலம் போட்டியின் 35வது ஓவரின் ஐந்தவாது பந்தில், பங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபீ மொர்டசாவின் விக்கெட்டை கைப்பற்றினார். தொடர்ந்து அடுத்த பந்தில், ரூபல் ஹுசைனை போல்ட் முறையில் வெளியேற்றிய இவர், தனக்கு கிடைத்த அடுத்த பந்து ஓவரின் முதல் பந்தில் மஹ்மதுல்லாஹ்வை வெளியேற்றி கன்னி போட்டியில் கன்னி ஹெட்ரிக்கை பதிவுசெய்தார்.
அவுஸ்திரேலியாவை ஆட்டம் காணச் செய்த மெண்டிஸின் மிஷ்ட்ரி!
இதன்படி, சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில், ஒருநாள் போட்டிகளில் மேலே குறிப்பிடப்பட்ட நால்வர் மாத்திரமே கன்னி ஒருநாள் போட்டியில் ஹெட்ரிக் சாதனைகளை பதிவுசெய்துள்ளனர். அதுவும், இந்த ஹெட்ரிக் சாதனைகள் அனைத்தும், 49 வருடங்கள் ஒருநாள் போட்டிகள் விளையாடப்பட்டும், கடந்த 6 வருடங்களில் மாத்திரமே பெறப்பட்டுள்ளன.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுக போட்டியில் ஹெட்ரிக் வீழ்த்தியவர்கள் வரிசையில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஷெஹான் மதுசங்க மற்றும் வனிந்து ஹசரங்க ஆகிய இருவர் இடம்பிடித்துள்ளதுடன், ஏனைய இருவரும் பங்களாதேஷ் மற்றும் தென்னாபிரிக்க வீரர்களாக உள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த தனித்துவமான சாதனையை நிகழ்த்திய வீரர்களில், ஷெஹான் மதுசங்க போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனினும், ஏனைய வீரர்கள் அனைவரும் தங்களுடைய நாட்டுக்காக இன்றும் விளையாடி வருகின்றனர். எனவே, இவர்கள் தங்களுடைய திறமையை வளர்த்து மேலும் சாதனைகளை தங்களது அணிக்காக நிகழ்த்துவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<