கல்முனை லெஜன்ட் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த புளு நேவிஸ் சவால் கிண்ணத்திற்கான (BLUE NAVYZ ) 20 ஓவர்கள் கொண்ட கடினப் பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் லெஜன்ட் விளையாட்டுக் கழகம் 51 ஓட்டங்களினால் டொப்பார்ஸ் கழகத்தை தோற்கடித்து சம்பியனாகத் தெரிவானது.
கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் இடம்பெற்ற இந்த இறுதிப் போட்டியில் கல்முனையின் பிரபலமான இரண்டு அணிகளான லெஜன்ட் அணியும், டொப்பார்ஸ் அணியும் மோதிக்கொண்டன.
ஆட்டத்தின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற லெஜன்ட் அணியின் தலைவர் ஏ.ஜே.எம்.ஜபாஸ் தனது அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதாக அறிவித்தார். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லெஜன்ட் அணியினர் 8 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றனர்.
இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ஹஷான் திலகரட்ன
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஹஷான் திலகரட்ன, இந்தியாவுடன் இடம்பெறவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட்…
ஆரம்பத் துடுப்பாட்டக்காரர்களாக ஆடுகளம் நுழைந்த அஹனப் மற்றும் நிசாத் ஆகியோர் சிறந்த இணைப்பாட்டத்தைக் கொண்டு சென்றனர். இருவரும் இணைந்து 62 ஓட்டங்களைப் பெற்றபோது அஹனப் 24 ஓட்டங்களுடன் பவாஸின் பந்துவீச்சில் சியாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாட ஆடுகளம் நுழைந்த சஜான் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளிறேினார்.
ஆரம்பத்தில் வேகமாக ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டிருந்தபோதும் லெஜன்ட் அணி 100 ஓட்டங்களைப் பெறுவதற்குள் தமது 4 முக்கிய விக்கெட்டுக்களை இழந்தது. 113 ஓட்டங்களைப் பெற்றபோது மேலும் இரண்டு விக்கெட்டுக்களை அடுத்தடுத்த பந்துகளில் இழந்ததுடன் 116 ஓட்டத்தில் தனது 7 வது விக்கெட்டையும் பறிகொடுத்து இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது.
இந்நிலையில் அதிரடி வீரா் சப்ராஸ் 24 பந்துகளில் 33 ஓட்டங்களை வேகமாகப் பெற்றுக்கொடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை 147 ஆக உயர்த்தினார். இறுதியில் லெஜன்ட் அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது.
பந்து வீச்சில் டொப்பாரஸ் அணி சார்பாக நப்ரிஸ் 4 ஓவர்கள் பந்துவீசி 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். ஜெஸ்மீர், பவாஸ், நஜாத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
அதன் பின்னர், வெற்றி பெறுவதற்கு 148 ஓட்டங்களைப் பெறத் துடுப்பெடுத்தாடிய டொப்பார்ஸ் அணியினர் ஆரம்பத்தில் வேகமாகத் துடுப்பெடுத்தாடிய போதிலும் பின்னர் விக்கெட்டுக்களை தொடராக இழந்ததன் காரணத்தினால் 96 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 51 ஓட்டங்களினால் தோல்வி கண்டனர்.
முன்வரிசை வீரா்கள் நல்லதொரு ஆரம்பத்தைப் பெற்றபோதிலும் மத்தியதர வீரா்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தமையினாலேயே டொப்பாரஸ் அணி தோல்வியடைந்தது. அவ்வணி சார்பாக சியா, பவாஸ் ஆகியோர் தலா 13 ஓட்டங்களைப் பெற்றனர். பர்சாத் இறுதி நேரத்தில் வேகமாக ஆடி 22 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் லெஜன்ட் சார்பாக நியாஸ் 4 ஓவர்கள் பந்துவீசி 11 ஒட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களையும், அஹ்னப், நிஸ்மி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
மன்னாரில் ஆரம்பமாகும் மாபெரும் AA கால்பந்து சம்பியன்ஸ் கிண்ணம் – 2017
மன்னார் மாவட்ட கால்பந்து லீக்கின் அனுமதியுடன் AA Sports வியாபார நிறுவனத்தினால் நடாத்தப்படும் மாபெரும் கால்பந்து சுற்றுப் போட்டியானது…
வெற்றி பெற்று சம்பியனாகத் தெரிவான லெஜன்ட் அணிக்கு வெற்றிக் கிண்ணமும் 25 ஆயிரம் ரூபா பணப்பரிசும், இரண்டாம் இடத்தைப் பெற்ற டொப்பாரஸ் அணிக்கு 10 ஆயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக லெஜன்ட் வீரா் எம்.பி.எம்.நியாஸ் தெரிவானதுடன் தொடரின் சிறப்பாட்டக்காரராக லெஜன்ட் வீரா் ஏ.எல்.எம்.அஹ்னப் தெரிவானார். சிறந்த பந்து வீச்சாளராக றிஸ்லத் தெரிவானார். இவர்களுக்கும் கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.