இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை கட்புலனற்றோர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

343

இந்தியாவில் நடைபெற்றுவரும் கட்புலனற்றோர் முத்தரப்பு டி-20 தொடரில் இங்கிலாந்து அணியை 10 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை கட்புலனற்றோர் அணி இந்தியாவுடனான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

கோவா, GCA அரங்கில் இன்று (12) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதவுள்ள அணியை தீர்மானிக்கும் ஆட்டத்திலேயே இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இங்கிலாந்து சவாலான வெற்றி இலக்கை நிர்ணயித்தபோதும் இலங்கை ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சந்தன தேஷப்ரிய மற்றும் கே. சில்வா கடைசி வரை களத்தில் இருந்து வெற்றி இலக்கை எட்டினர்.

இதன்படி இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதும் இறுதிப் போட்டி நாளை (13) இதே கோவா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை கட்புலனற்றோர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானத்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து கட்புலனற்றோர் அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகளையும் 43 ஓட்டங்களுக்கு வீழ்த்த இலங்கையால் முடிந்தது.

கட்புலனற்றோர் முத்தரப்பு டி-20 தொடரில் இங்கிலாந்தை மீண்டும் வீழ்த்திய இலங்கை

எனினும் மூன்றாவது விக்கெட்டுக்கு பீ. புளைட் மற்றும் எல். சக் இருவரும் 63 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். இவர்கள் இந்த இணைப்பாட்டத்தை பெற 41 பந்துகளுக்கு முகம்கொடுத்தனர். புளைட் 36 பந்துகளில் 54 ஓட்டங்களை பெற்ற நிலையில் ரன் அவுட் ஆனார். சக் 49 ஓட்டங்களை பெற்று அரைச்சதத்தை பெறும் முன்னர் கே. சில்வாவின் பந்துக்கு போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த துடுப்பாட்ட வீரர்களை கட்டுப்படுத்தியதன் மூலம் இலங்கை அணியால் இங்கிலாந்தின் ஓட்ட வேகத்தை கட்டுப்படுத்த முடிந்தது.

இதனால் இங்கிலாந்து கட்புலனற்றோர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களை பெற்றது. இதன் போது இங்கிலாந்தின் நான்கு விக்கெட்டுகள் ரன் அவுட் முறையில் வீழ்த்தப்பட்டதோடு அபூர்வமாக ஒரு விக்கெட் ஹிட் விக்கெட் முறையில் வீழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை கட்புலனற்றோர் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் எந்த நெருக்கடியும் இன்றி ஓட்டங்களை சேகரித்தனர். இருவரும் பௌண்டரிகள் விளாசி ஓட்டங்களை வேகமான எட்டினர்.

இதன் மூலம் இலங்கை அணி 15.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ஓட்டங்களை பெற்று இலகு வெற்றியீட்டியது. இதன் போது சந்தன தேஷப்ரிய 48 பந்துகளில் 7 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களை பெற்றதோடு மறுபுறம் கே. சில்வா 51 பந்துகளில் 10 பௌண்டரிகளுடன் ஆட்டமிக்காது 104 ஓட்டங்களை பெற்று ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.  

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து – 177/7 (20) – பீ. புளைட் 54, எல். சக் 49, எம். டீன் 19, கே. சில்வா 1/8, பதும் சமன் குமார 1/20, டி. மதுகம 1/34

இலங்கை – 181/0 (15.4) – கே. சில்வா 104*, சந்தன தேசப்ரிய 66*

முடிவு – இலங்கை கட்புலனற்றோர் அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி    

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க