முத்தரப்பு T20 தொடரின் சம்பியனாக இந்திய கட்புலனற்றோர் கிரிக்கெட் அணி

228

இலங்கை, இந்தியா, இங்கிலாந்து ஆகியவற்றின் கட்புலனற்றோர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஒழுங்கு செய்யப்பட்டிருந்த முத்தரப்பு T20 தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய கட்புலனற்றோர் கிரிக்கெட் அணி இலங்கை கட்புலனற்றோர் அணியினை 10 விக்கெட்டுக்களால் வீழ்த்தி தொடரின் சம்பியன் பட்டத்தை வென்றிருக்கின்றது.

இம்மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகியிருந்த இந்த முத்தரப்பு T20 தொடரில் முன்னர் இடம்பெற்ற போட்டிகளின் முடிவுகளுக்கு அடிப்படையில் இந்திய கட்புலனற்றோர் அணியும், இலங்கை கட்புலனற்றோர் அணியும் கோவாவின் GCA மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தன.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய கட்புலனற்றோர் கிரிக்கெட் அணியின் தலைவர் P. ஜயராமையா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை கட்புலனற்றோர் அணிக்கு வழங்கினார்.

இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை கட்புலனற்றோர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

இந்தியாவில் நடைபெற்றுவரும் கட்புலனற்றோர் முத்தரப்பு டி-20 தொடரில் இங்கிலாந்து அணியை 10 விக்கெட்டுகளால் வீழ்த்திய…

இதன்படி முதல் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை கட்புலனற்றோர் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 119 ஓட்டங்களை மட்டுமே குவித்தது.

இலங்கை கட்புலனற்றோர் தரப்பின் துடுப்பாட்டத்தில் அதிகபட்ச ஓட்டங்களை அணித்தலைவர் பிரியந்த குமார 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது நின்று பதிவு செய்திருந்ததோடு D. மத்துகமவும் 23 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இதேநேரம், இந்திய கட்புலனற்றோர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பாக A. ரெட்டி 15 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களையும், S. ரமேஷ், A. கரியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சாய்த்திருந்தனர்.

பின்னர், போட்டியின் வெற்றி இலக்கான 120 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய கட்புலனற்றோர் கிரிக்கெட் அணி, வெற்றி இலக்கினை வெறும் 11.2 ஓவர்களில் விக்கெட்டுக்கள் எதனையும் பறிகொடுக்காமல் 120 ஓட்டங்களுடன் அடைந்தது.

இந்திய கட்புலனற்றோர் அணியின் துடுப்பாட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்து அவ்வணியை வெற்றிப்பாதையில் வழிநடாத்திச் சென்ற D. ராவோ 44 பந்துகளுக்கு 63 ஓட்டங்களையும், A. கரியா 35 பந்துகளுக்கு 45 ஓட்டங்களையும் குவித்திருந்தனர்.

இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் விருது, இந்திய கட்புலனற்றோர் அணியின் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டிருந்த A. ரெட்டிக்கு வழங்கப்பட்டது.

இலங்கை கட்புலனற்றோர் கிரிக்கெட் அணி இந்த முத்தரப்பு T20 தொடரினை அடுத்து இந்திய கட்புலனற்றோர் கிரிக்கெட் அணியுடன் ஐந்து T20 போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட ஒரு நாள்  தொடரில் விளையாடவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை கட்புலனற்றோர் அணி – 119 (20) – பிரியந்த குமார 30, D. மத்துகம 23, A. ரெட்டி 15/4

இந்திய கட்புலனற்றோர் அணி – 120/0 (11.2) – D. ராவோ 63, A. கரியா 45

முடிவு – இந்திய கட்புலனற்றோர் அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<