உலக சம்பியன் இந்தியாவிடம் இலங்கை தொடர் வெற்றி

319

இந்திய கட்புலனற்றோர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் இலங்கை கட்புலனற்றோர் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

இந்தியாவின் சவாலை முறியடித்த இலங்கை கட்புலனற்றோர் அணி

இலங்கை மற்றும் இந்திய கட்புலனற்றோர் கிரிக்கெட்..

கொழும்பு, BRC மைதானத்தில் நேற்று (16) நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டி, மைதானத்தில் நிலவிய ஈரலிப்பு தன்மை காரணமாக பல மணி நேரம் தாமதித்தே அரம்பமானது. இதனால் இந்த போட்டியை அணிக்கு 20 ஓவர்களுக்கு மட்டுப்படுத்த நடுவர்கள் தீர்மானித்தனர்.

போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதல் போட்டி போன்றே ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாட இந்திய அணியை அழைத்தது. இலங்கையின் பலமான துடுப்பாட்ட வரிசையின் மீது நம்பிக்கை வைத்தே அணித்தலைவர் சந்தன சூரியாரச்சி இந்த முடிவை எடுத்தார்.  

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய கட்புலனற்றோர் அணி 20 ஓவர்களுக்கும் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ஓட்டங்களை பெற்றது. இடதுகை துடுப்பாட்ட வீரரான அஜே ரெட்டி 66 ஓட்டங்களை பெற்றதோடு மத்திய வரிசையில் வந்த வலதுகை துடுப்பாட்ட வீரர் சுனில் ரமேஷ் ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களை பெற்றார். முதல் ஒருநாள் போட்டியில் அரைச்சதம் ஒன்றை பெற்ற துர்கா ராவோவுக்கு இந்த போட்டியில் 39 ஓட்டங்களையே பெற முடிந்தது.   

இந்நிலையில் 20 ஓவர்களுக்கு 196 ஓட்ட வெற்றி இலக்குடன் பதிலெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி அந்த இலக்கை 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து எட்டியது. அஜித் சில்வா மற்றும் சஹன் குமார இருவரும் வேகமாக துடுப்பெடுத்தாடி இந்திய பந்துவீச்சாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கினர்.

Photos: Sri Lanka Blind Cricket vs India Blind Cricket 2018 | 2nd One Day Match

ThePapare.com | Waruna Lakmal | 17/07/2018 Editing..

இதன்போது இலங்கை அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்ற அஜித் சில்வா ஆட்டமிழக்காது 90 ஓட்டங்களை விளாசியதோடு இந்த ஓட்டங்களை பெற அவர் 50 பந்துகளுக்கு மாத்திரமே முகம்கொடுத்தார். இந்தியாவுடனான முதல் ஒரு நாள் போட்டியிலும் அஜித் சில்வா அரைச்சதம் ஒன்றை பெற்றிருந்தார். மறுமுனையில் சஹன் குமார ஆட்டமிழக்காது 70 ஓட்டங்களை குவித்தார். இந்த இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு பெற்ற இணைப்பாட்டம் இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தது.   

இந்திய கட்புலனற்றோர் அணி சார்பில் தீபக் மலிக் 38 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியதே சிறந்ததாகும்.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று (17) கொழும்பு BRC மைதானத்தில் நடைபெறுகிறது.  

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 195/4 (20) – அஜே ரெட்டி 66, சுனில் ரமேஷ் 59*, துர்கா ராவோ 39

இலங்கை – 197/3 (17.2) – அஜித் சில்வா 90*, சஹன் குமார 70*, தீபக் மலிக் 1/38

போட்டியின் ஆட்ட நாயகன் அஜித் சில்வா (இலங்கை)  

முடிவு: இலங்கை கட்புலனற்றோர் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி