இலங்கை கட்புலனற்றோர் அணி போராடித் தோல்வி

235

இந்திய கட்புலனற்றோர் அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் இலங்கை கட்புலனற்றோர் அணி கடைசி பந்துவரை வெற்றிக்காக போராடிய நிலையில் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இதன் மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்திய கட்புலனற்றோர் அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்தியாவுடனான ஒருநாள் தொடரில் சோபித்த இலங்கை கட்புலனற்றோர் அணி டி-20  தொடரில் தோல்வி ஒன்றை தவிர்க்க போராட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கொழும்பு, BRC மைதானத்தில் இன்று (20) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு வலதுகை துடுப்பாட்ட வீரரான சுனில் ரமேஷ் 42 ஓட்டங்களை பெற்றதோடு அஜே ரெட்டி 31 ஓட்டங்களை பெற்றார். தவிர, கனேஷ் முத்கர் பெற்ற 27 ஓட்டங்களின் உதவியோடு இந்திய அணியால் சவாலான இலக்கை நிர்ணயிக்க முடிந்தது.

இலங்கை பந்துவீச்சாளர்கள் இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு போதிய சவால் கொடுக்காத நிலையில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை பெற்றது. இலங்கை சார்பில் திமுத்து ரவீந்திர 28 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியதே சிறந்ததாகும்.

உலக சாதனையுடன் தொடரை வென்ற இலங்கை

இலங்கை கட்புலனற்றோர் அணிக்கு எதிரான மூன்றாவதும் கடைசியுமான ஒரு நாள் போட்டியில்…

இந்நிலையில் 189 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை கட்புலனற்றோர் அணி ஆரம்பம் முதலே தேவைப்படும் ஓட்ட வேகத்திற்கு ஏற்ப சிறப்பாக ஆடியது. குறிப்பாக அஜித் சில்வா இலங்கை அணிக்காக ஒரு முனையில் சிறப்பாக ஆடினார்.

அதேபோன்று இலங்கை கட்புலனற்றோர் அணியின் முன்னாள் தலைவரான B2 (இடைநிலை கட்புலன்) பிரிவு வீரரான சந்தன தேஷப்ரிய பொறுப்புடன் ஆடி 41 ஓட்டங்களை பெற்றபோது இலங்கை அணி வெற்றி இலக்கை நெருங்கியது.

எனினும் இலங்கை கட்புலனற்றோர் அணி 20 ஓவர்கள் முடிவில் வெறும் 3 ஓட்டங்களால் வெற்றி இலக்கை தவறவிட்டது. அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களையே பெற்றது. சிறப்பாக ஆடிய அஜித் சில்வா ஆட்டமிழக்காது 64 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அமோல் கராச்சே 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்தார். எனினும் துடுப்பாட்டத்தில் சோபித்த சுனில் ரமேஷுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

இலங்கை மற்றும் இந்திய கட்புலனற்றோர் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி-20 போட்டி எதிர்வரும் திங்கட்கிழமை (23) கொழும்பு, BRC மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொடர் வெற்றி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள இலங்கை அணி இந்த போட்டியில் வெற்றி பெறுவது கட்டாயமாகும்.

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 188/8 (20) – சுனில் ரமேஷ் 42, அஜே ரெட்டி 31, கனேஷ் முத்கர் 27, திமுத்து ரவீந்திர 1/29

இலங்கை – 177/8 (20) – அஜித் சில்வா 64*, சந்தன தேசப்ரிய 41, அமோல் கராச்சே 2/18, நரேஷ் தும்தா 1/27

முடிவு இந்திய அணி 3 ஓட்டங்களால் வெற்றி  

போட்டியின் ஆட்ட நாயகன் சுனில் ரமேஷ்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க