இங்கிலாந்தில் நடைபெறும் T20 ப்ளாஸ்ட் தொடரின் அணியான பேர்மிங்கம் பேர்ஸ் அணி, க்ரிஸ் க்ரீனின் இந்த ஆண்டுக்கான ஒப்பந்தத்தை இரத்து செய்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தொடர்ந்து அச்சுறுத்தலை உருவாக்கி வரும் கொவிட்-19 வைரஸ் தொற்றின் காரணமாக T20 ப்ளாஸ்ட் தொடரில் விளையாடும் வாய்ப்பை க்ரீன் இழந்துள்ளதுடன், பேர்மிங்கம் பேர்ஸ் அணியின் தலைமைத்துவத்தையும் இழந்துள்ளார்.
இலங்கையில் உள்ளூர் போட்டிகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு
பேர்மிங்கம் பேர்ஸ் அணியின் தலைவராக இம்முறை க்ரிஸ் க்ரீன் தெரிவுசெய்யப்பட்டிருந்த போதும், அவரின் இழப்பு காரணமாக வர்விக்ஷையர் அணியின் முதற்தர மற்றும் லிஸ்ட் ஏ போட்டிகளுக்கான தலைவராக செயற்பட்டு வரும் வில் ரோட்ஸ் பேர்மிங்கம் பேர்ஸ் அணியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
T20 போட்டிகளுக்கான தனித்துவத்தை கொண்டிருக்கும் க்ரிஸ் க்ரீன், உபாதைக்குள்ளாகியிருந்த அஸ்டன் ஆகருக்கு பதிலாக கடந்த பருவகாலத்தில் பேர்மிங்கம் பேர்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார். இதில், 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததுடன், 6.69 என்ற ஓட்ட கட்டுப்பாட்டையும் பேணியிருந்தார்.
அதன் பின்னர் உலகின் முன்னணி கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த போதும், இந்த தொடர் கொவிட்-19 காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதேநேரம், க்ரீன் கரீபியன் ப்ரீமியர் லீக்கில் கயானா அமேஷன் வொரியர்ஸ் அணிக்காகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் விதிமுறைக்கு மாறாக பந்துவீசுகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு முகங்கொடுத்திருந்த இவர், மூன்று மாதங்களாக பந்துவீச தடைசெய்யப்பட்டிருந்தார். எனினும், பரிசோதனையில் சாதகமான முடிவை பெற்றுக்கொண்டதால், மீண்டும் பந்துவீசுவதற்கு இவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
“வீரர்கள் மற்றும் முகாமைத்துவம் என அனைவரும் க்ரிஸ் க்ரீன் தொடர்பில்தான் சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த பருவகாலத்தில் பேர்ஸ் அணிக்கு அவர் வழங்கிய அர்ப்பணிப்பை யாரும் மறந்திருக்கவில்லை. கனடாவில் க்ளோபல் T20 லீக் தொடரில் விளையாடிய 24 மணிநேரத்துக்குள் வைட்டாலிட்டி ப்ளாஸ்ட் தொடரின் நொட் அவுட்லோஸ் அணிக்கு எதிரான போட்டியில் எமக்காக விளையாடியிருந்தார்” என அந்த அணியின் பணிப்பாளர் போல் பெர்ப்ரஸ் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “கொவிட்-19 வைரஸ் காரணமாக இதுபோன்ற கடினமான சூழ்நிலைகள் உருவாகுவதுடன், அனைத்து கிரிக்கெட் கழகங்களையும் உணர்ச்சிபூர்வமாக்கிவிடுகிறது. க்ரிஸ் க்ரீன் சிறந்த தொழில்முறையானவர். கழகத்தின் மீதுள்ள அவரது ஈடுபாடு, அனைவருக்கும் முன்மாதிரியானது. பேர்ஸ் அணிக்காக எதிர்வரும் காலங்களில் அவரை இணைப்பதற்காக காத்திருக்கிறோம்” என்றார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<