தவீஷ அபிஷேக்கின் அபார துடுப்பாட்டத்தோடு றிச்மன்ட் கல்லூரி வெற்றி

168

கிரிக்கெட் விளையாட்டின் பித்துக்காலமான மார்ச் மாதத்தை அலங்கரிக்கும் இலங்கையின் பிரபல்யமிக்க பாடசாலைகள் இடையிலான மூன்று மாபெரும் கிரிக்கெட் போட்டிகள் இன்று (16) நிறைவுக்கு வந்தது.

மஹிந்த கல்லூரி எதிர் றிச்மன்ட் கல்லூரி

காதலர்களின் வாக்குவாதம் (Lover’s Quarrel) என அழைக்கப்படும் காலியின் பிரபல்யம் வாய்ந்த பாடசாலைகளான மஹிந்த கல்லூரி மற்றும் றிச்மன்ட் கல்லூரிகளுக்கு இடையிலான இந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியில் றிச்மண்ட் கல்லூரி அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருக்கின்றது.

>> சச்சிந்த சேனநாயக்கவின் துடுப்பாட்டத்தோடு வலுப்பெற்றுள்ள தர்மராஜ கல்லூரி

காலி சர்வதேச மைதானத்தில் 114ஆவது தடவையாக ஆரம்பமான இரண்டு நாட்கள் கொண்ட இந்த கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பாடிய மஹிந்த கல்லூரி அணியினர் 197 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். இதேநேரம், றிச்மன்ட் கல்லூரி அணி 144 ஓட்டங்களை மட்டுமே தமது முதல் இன்னிங்ஸில் பெற்றது.

பின்னர் 53 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்த மஹிந்த கல்லூரி அணி 161 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.

மஹிந்த கல்லூரி அணியின் இரண்டாம் இன்னிங்ஸில் ஹன்சிக்க வெளிஹிந்த 71 ஓட்டங்களை குவித்திருக்க, றிச்மன்ட் கல்லூரி பந்துவீச்சில் திலும் சுதீர 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

Photos: Richmond College vs Mahinda College | 114th Lovers’ Quarrel | Day 2

இதன் பின்னர் மஹிந்த கல்லூரி அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் அடிப்படையில் போட்டியின் வெற்றி இலக்காக 215 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு துடுப்பாடிய றிச்மன்ட் கல்லூரி அணிக்கு தவீஷ அபிஷேக் அசத்தலான துடுப்பாட்டத்தோடு உதவினார். இதனால் போட்டியின் வெற்றி இலக்கை றிச்மன்ட் கல்லூரி அணியினர் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்தனர்.

றிச்மன்ட் கல்லூரி அணியின் வெற்றிக்கு உதவிய தவிஷ அபிஷேக் 99 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நிற்க, ஏற்கனவே பந்துவீச்சில் பிரகாசித்த திலும் சுதீரவும் 42 ஓட்டங்களைப் பெற்று  தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்தார்.

போட்டியின் சுருக்கம்

மஹிந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 197 (63.3) – நிப்புன் மாலிங்க 44, திலும் சுதீர 5/49, சந்துன் மெண்டிஸ் 3/53

றிச்மன்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 144 (45.2) – சந்துன் மெண்டிஸ் 36, குஷான் மதுஷ 5/20, அஷேன் கண்டம்பி 2/08

மஹிந்த கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 161/9d (34.3) – ஹன்சிக்க வெலிஹிந்த 71, திலும் சுதீர 4/57, கல்ப நெத்சார 3/32

றிச்மன்ட் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 215/4 (44.3) – தவீஷ அபிஷேக் 99*, திலும் சுதீர 42,  பானுக்க மனோகர 40, சுபானு ராஜபக்ஷ 1/13

முடிவு – றிச்மன்ட் கல்லூரி 6 விக்கெட்டுக்களால் வெற்றி


கிங்ஸ்வூட் கல்லூரி எதிர் தர்மராஜ கல்லூரி

பல்லேகல சர்வதேச மைதானத்தில் 113ஆவது தடவையாக ஆரம்பமான மலையகப் பாடசாலைகளின் பழுப்பு வர்ண சமர் (BATTLE OF MAROONS) என அழைக்கப்படும் இந்த கிரிக்கெட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

>> அபிஷேக் ஆனந்தகுமாரின் அதிரடி பந்துவீச்சுடன் திரித்துவ கல்லூரி வெற்றி

இரண்டு நாட்கள் கொண்ட இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய கிங்ஸ்வூட் கல்லூரி அணியினர் 142 ஓட்டங்களை மட்டுமே தமது முதல் இன்னிங்சில் குவித்தனர்.

இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய தர்மராஜ கல்லூரி அணி 246 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்திருந்த நிலையில் தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது. தர்மராஜ கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் சச்சிந்த சேனநாயக்க அரைச்சதம் ஒன்றுடன் 77 ஓட்டங்கள் குவிக்க, விராஜித எஹலபொல 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.  அதேநேரம் கிங்ஸ்வூட் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் லக்மால் டி சில்வா 72 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Photos: Dharmaraja College vs Kingswood College – 113th Battle of the Maroons – Day 2

இதன் பின்னர் 104 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த கிங்ஸ்வூட் கல்லூரி அணி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்து போட்டி சமநிலை அடையும் போது 181 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து ஸ்திரமான நிலையில் காணப்பட்டிருந்தது. கிங்ஸ்வூட் கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் ஹசித கமகே அரைச்சதம் ஒன்றுடன் 87 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இந்த ஆண்டுக்கான மாபெரும் கிரிக்கெட் போட்டி சமநிலை அடைந்திருப்பதால், மலையக பழுப்பு வர்ணங்களின் சமரின் வெற்றிக் கிண்ணத்தை தர்மராஜ கல்லூரி அணியே தக்கவைத்துக் கொள்கின்றது. தர்மராஜ கல்லூரி அணி கடைசியாக மலையக பழுப்பு வர்ணங்களின் சமரில் 2015ஆம் ஆண்டு வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

கிங்ஸ்வூட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 142 (50.3) – வீணுக்க புஷ்பபிட்டிய 30, துஷான் ஹேரத் 3/24, யசித் சமரரத்ன 3/27, உபேந்திர வர்ணகுலசூரிய 3/44

தர்மராஜ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 246/8d (78.5) – சச்சிந்த சேனநாயக்க 77, விராஜித எஹலபொல 40, லக்மால் டி சில்வா 4/72

கிங்ஸ்வூட் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 181/4 (56.5) – ஹசித கமகே 87, ஹர்ஷன விக்கிரமசிங்க 44, உபேந்திர வர்ணகுலசூரிய 2/58

முடிவு – ஆட்டம் சமநிலை அடைந்தது.


பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மொரட்டுவை எதிர் புனித செபஸ்டியன் கல்லூரி மொரட்டுவை

டி சொய்ஸா மைதானத்தில் நேற்று ஆரம்பமான பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மற்றும் புனித செபஸ்டியன் கல்லூரி அணிகள் இடையிலான இப்போட்டியும் சமநிலை அடைந்தது.

தங்கங்களின் சமர் என அழைக்கப்படும் இரண்டு நாட்கள் கொண்ட இந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி 69ஆவது முறையாக நேற்று ஆரம்பமானது. போட்டியில் முதலில் துடுப்பாடிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணியினர் தமது முதல் இன்னிங்ஸில் 194 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

>> பிரின்ஸ் ஒப் வேல்ஸ் எதிர் புனித செபஸ்டியன் கல்லூரிகளுக்கிடையிலான போட்டியின் புகைப்படங்களைப் பார்வையிட…

இதேநேரம், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய புனித செபஸ்டியன் கல்லூரி அணி 220 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது. புனித செபஸ்டியன் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பாக நுவனிது பெர்னாந்து சதம் ஒன்றுடன் 102 ஓட்டங்களை குவித்தார். அதேநேரம் கெளமால் நாணயக்கார பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணியின் பந்துவீச்சில் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இதனை அடுத்து சிறிய முன்னிலை ஒன்றுடன் (26) தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது போட்டியின் ஆட்டநேரம் நிறைவுக்கு வந்தது. இதனால், போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 194 (78.5) – சுவாத் மெண்டிஸ் 78, தினுர பெர்னாந்து 44, நுவனிது பெர்னாந்து 4/24

புனித செபஸ்டியன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 220/8d (86.2) – நுவனிது பெர்னாந்து 102, கெளமால் நாணயக்கார 4/79, நாதுக்க பெர்னாந்து 2/50

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 51/3 (24) – வினுஜ ரன்புல் 32, தாஷித் பெரேரா 2/12

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<