இந்திய அணியிலிருந்து இரு நட்சத்திர வீரர்கள் திடீர் விலகல்

2263

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் எஞ்சிய போட்டிகளுக்காக இந்திய அணியில் இருந்து ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஷிகர் தவான் மற்றும் வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளனர்.

இதன்படி, இந்திய உள்ளூர் போட்டிகளில் அசத்தி வருகின்ற தமிழகத்தைச் சேர்ந்த சகலதுறை ஆட்டக்காரரான விஜய் சங்கரை இந்திய டெஸ்ட் அணியில் இணைத்துக்கொள்ள அந்நாட்டு தேர்வுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

போராட்டத்திற்கு மத்தியில் இந்தியாவுடனான டெஸ்டை சமப்படுத்திய இலங்கை

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (20)..

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.  

இந்நிலையில், நாக்பூரில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள 2ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள 14 பேர் கொண்ட வீரர்கள் அடங்கிய பட்டியலை இந்திய கிரிக்கெட் சபை நேற்று (20) அறிவித்தது.

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஷிகர் தவான் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர், சொந்த காரணங்களுக்காக அடுத்த 2 டெஸ்ட் போட்டியிலும் தமக்கு விளையாட முடியாது என அந்நாட்டு தேர்வுக்குழுவுக்கு அறிவித்துள்ளனர்.

இலங்கை அணிக்கு பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்து இரு இன்னிங்ஸ்களிலும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்றுக்கொண்ட புவனேஷ்வர் குமார் எதிர்வரும் 23ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்துகொள்ளவுள்ளதன் காரணத்தினாலேயே அவர் இத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இதையடுத்து, புவனேஷ்வருக்குப் பதிலாக தற்போது நடைபெற்று வருகின்ற ரஞ்சி கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணியின் தலைவராகச் செயற்பட்டு வருகின்ற சகலதுறை ஆட்டக்காரரான விஜய் சங்கருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்குவதற்கு அந்நாட்டு தேர்வுக் குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்திய தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பினை முதற்தடவையாக பெற்றுக்கொண்டுள்ள தமிழக ஒரு நாள் அணியின் தலைவரான விஜய் சங்கர், இதுவரை 32 முதல்தரப் போட்டிகளில் விளையாடி 1,671 ஓட்டங்களையும் 27 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பயிற்சி அளிக்கவுள்ள உசைன் போல்ட்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்துடன்..

26 வயதான சங்கர், அண்மையில் நிறைவுக்கு வந்த தென்னாபிரிக்க அணியுடனான போட்டித் தொடரில் இடம்பெற்றிருந்தார். குறித்த தொடரில் முத்தரப்பு ஒரு நாள் ஆட்டத்தின் இறுதிப் போட்டியில் 72 ஓட்டங்களைக் குவித்த சங்கர், அவ்வணிக்கு தொடர் வெற்றியைப் பெற்றுக்கொடுக்க முக்கிய காரணமாகவும் இருந்தார். அதனைத்தொடர்ந்து இந்தியாவுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட நியூசிலாந்து அணியுடனான போட்டித் தொடரிலும் இடம்பெற்ற சங்கர் துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரு துறைகளிலும் அசத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது நடைபெற்றுவருகின்ற ரஞ்சி கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஒடிசா அணியுடனான போட்டியில் சதம் குவித்த சங்கர், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மும்பை அணியுடனான போட்டியில் 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.

இதேவேளை, இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் முதல் விக்கெட்டுக்காக லோகேஷ் ராகுலுடன் இணைந்து துடுப்பாட்டத்தில் அசத்தி (94 ஓட்டங்கள்) சதம் பெறும் வாய்பை 6 ஓட்டங்களால் தவறவிட்ட ஷிகர், இலங்கையுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் எனவும், டெல்லியில் நடைபெறவுள்ள 3ஆவது டெஸ்ட் போட்டியில் அணியுடன் இணைந்துகொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – இலங்கை ஒருநாள் போட்டிகளின் நேர மாற்றம்

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான..

முன்னதாக அவுஸ்திரேலிய அணியுடன் அண்மையில் நடைபெற்ற ஒரு நாள் போட்டித் தொடரின்போது ஷிகர் தவானின் மனைவிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக இவ்வாறு விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முரளி விஜய் மற்றும் ரவிசந்திரன் அஷ்வின் ஆகிய தமிழக வீரர்கள் ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், மற்றுமொரு தமிழக வீரர் இந்திய அணியில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, புவனேஷ்வர் குமாருக்குப் பதிலாக இஷாந்த் சர்மாவும், ஷிகர் தவானுக்குப் பதிலாக முரளி விஜய்யும், 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி

விராட் கோஹ்லி (தலைவர்), கே.எல்.ராகுல், எம்.விஜய், செதேஷ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே (உதவித் தலைவர்), ரோஹித் சர்மா, விருத்திமான் சஹா, அஷ்வின், ரவிந்திரா ஜடேஜா, குல்தீப் யாதவ், மொகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா மற்றும் விஜய் சங்கர்.