இந்திய ஒருநாள் குழாமிலிருந்து இரு வீரர்கள் நீக்கம்

163
latestly.com

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணியின் குழாமிலிருந்து இரண்டாவது வீரராக வேகப்பந்துவீச்சாளர் புவ்னேஸ்வர் குமார் நீக்கப்பட்டுள்ளார். 

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி அங்கு இந்திய கிரிக்கெட் அணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட இரு தொடர்களில் ஆடுகிறது. சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான டி20 சர்வதேச தொடரை இந்திய அணி 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியிருந்த நிலையில் அடுத்த தொடரான ஒருநாள் தொடர் நாளை (15) சென்னையில் ஆரம்பமாகின்றது. 

குறித்த ஒருநாள் தொடருக்கான விராட் கோஹ்லி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியின் குழாம் கடந்த மாதம் (நவம்பர்) 21 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது. இதில் இந்திய அணியின் நம்பிக்கை வேகப்பந்துவீச்சாளரான புவ்னேஸ்வர் குமார் இடம்பெற்றிருந்தார். 

ஆரம்பத்தில் உபாதை ஏற்பட்டதன் காரணமாக மூன்று மாத ஓய்வின் பின்னர் இந்திய அணிக்கு திரும்பியிருந்த புவ்னேஸ்வர் குமார் இறுதியாக  நிறைவு பெற்றிருந்த டி20 சர்வதேச தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாடியிருந்தார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு விலா எலும்பு பகுதியில் உபாதை ஒன்று ஏற்பட்டுள்ளது. 

மருத்துவ அறிக்கையின்படி புவ்னேஸ்வர் குமார் சிறிது காலம் போட்டிகளில் விளையாடாமல் இருப்பது அவரது உடல் நலத்திற்கு சிறந்தது என அறியப்பட்டதற்கமைய அடுத்து நடைபெறவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஒருநாள் தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். 

புவ்னேஸ்வரின் வெற்றிடத்துக்காக வேகப்பந்துவீச்சாளரான உமேஷ் யாதவ் நீண்ட கால இடைவெளியின் பின்னர் இந்திய ஒருநாள் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 28 வயதுடைய மற்றுமொரு இளம் வேகப்பந்துவீச்சாளரான ஷர்துல் தாகூர் இந்திய குழாமில் இடம்பெற்றுள்ளார். 

2017 ஆம் ஆண்டு இலங்கை அணியுடன் நடைபெற்ற போட்டியில் ஒருநாள் அறிமுகம் பெற்றுக்கொண்ட ஷர்துல் தாகூர் இதுவரையில் 5 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ளார். அவர் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை அண்மையில் நிறைவுக்கு வந்திருந்த இந்தியாவில் நடைபெறும் லீக் தொடர்களில் ஒன்றான சையித் முஸ்தாக் அலி கிண்ண தொடரின் போது இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஷிகார் தவான் முழங்கால் உபாதைக்குள்ளாகியிருந்தார். 

அதனை தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டி20 சர்வதேச குழாமிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சஞ்சு சம்சன் குழாமில் இணைக்கப்பட்டார். இந்நிலையில் குறித்த உபாதையிலிருந்து ஷிகர் தவான் மீளாததன் காரணமாக ஒருநாள் குழாமிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். 

ஷிகார் தவானுக்கு பதில் வீரராக 28 வயதுடைய இளம் துடுப்பாட்ட வீரரான மயங்க் அகர்வால் கன்னி ஒருநாள் போட்டியில் விளையாடும் அடிப்படையில் குழாமில் இணைக்கப்பட்டுள்ளார். 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மயங்க் அகர்வால் 872 ஓட்டங்களை குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்திய – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரின் முதல் போட்டி நாளை (15) சென்னையில் நடைபெறவுள்ள நிலையில், குறித்த போட்டிக்கு மழையின் குறுக்கீடு காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<