இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் மேஜர் கழக T20 லீக் தொடரில், தான் களமிறங்கிய முதல் போட்டியிலேயே அபார சதத்தை பானுக ராஜபக்ஷ பதிவுசெய்துள்ளார்.
பானுக ராஜபக்ஷ IPL தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய நிலையில், நேற்றைய தினம் நாட்டிற்கு திரும்பியிருந்தார்.
>>மே.தீவுகள் தொடருக்கான பங்களாதேஷ் குழாம்கள் அறிவிப்பு
நாட்டிற்கு திரும்பிய பானுக ராஜபக்ஷ, நேரடியாக இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் மேஜர் கழக T20 லீக் தொடரில் பி.ஆர்.சி கழக அணிக்கு தலைமை தாங்கியதுடன், 56 பந்துகளில் சதமடித்து அசத்தியுள்ளார்.
பாணந்துறை கிரிக்கெட் கழகத்துக்கு எதிராக நடைபெற்ற இந்தப்போட்டியில் பானுக ராஜபக்ஷ தலைமையில் களமிறங்கிய பி.ஆர்.சி அணி 175/5 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பி.ஆர்.சி அணியின் 5ம் இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பானுக ராஜபக்ஷ வெறும் 56 பந்துகளில் 100 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இதில், 9 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகளை விளாசியிருந்தார். பானுக ராஜபக்ஷவின் இந்த சதமானது, T20 கிரிக்கெட்டில் அவர் விளாசிய முதல் சதமாக பதிவாகியது.
பானுக ராஜபக்ஷ துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவித்தமை மாத்திரமின்றி பந்துவீச்சில் 3 ஓவர்களை வீசி 18 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியிருந்தார்.
இதேவேளை, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாணந்துறை அணி 20 ஓவர்கள் நிறைவில் 134/5 ஓட்டங்களை மாத்திரம் பெற்றதுடன், 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<