லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் மூன்றாவது பருவகாலமானது கடந்த இரண்டு பருவகாலங்களைவிட மிகவும் விறுவிறுப்பான போட்டிகளை கொண்டு அமைந்திருந்தது.
ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால் இலங்கை வீரர்களின் பிரகாசிப்புகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்திருந்தன. ஆரம்ப போட்டிகளைவிட தொடரின் பிற்பகுதிகளில் போட்டிகள் சூடுபிடிக்க ஆரம்பித்திருந்தன.
>> LPL வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட 5 அதிகூடிய இணைப்பாட்டங்கள்!
T20 கிரிக்கெட்டை பார்க்கும்போது துடுப்பாட்ட வீரர்களின் பிரகாசிப்புகள் உயரும்போது, தொடரின் மீதான ஈர்ப்பும் அதிகமாகிக்கொண்டே போகும். அந்தவகையில் இந்த ஆண்டு அன்ரே பிளச்சர் ஒரு சதத்தை பதிவுசெய்ததுடன், பல வீரர்கள் அரைச்சதங்களை பதிவுசெய்திருந்தனர்.
பல வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்தாலும், ஒருசில இன்னிங்ஸ்கள் போட்டிகளை மேலும் விறுவிறுப்பாக மாற்றியிருந்ததுடன், ஒரு சில போட்டிகள் முக்கியமான வெற்றிகளுக்கும் காரணமாக மாறியிருந்தன. அவ்வாறான முக்கியமான சில இன்னிங்ஸ்களை இங்கு பார்க்கலாம்.
நுவனிந்து பெர்னாண்டோ 63* (42) எதிர் தம்புள்ள ஓரா
இந்த ஆண்டு நடைபெற்றுமுடிந்த LPL தொடரில் ரசிகர்கள் மற்றும் தேர்வாளர்களின் அதீத கவனத்தை ஈர்த்திருந்த வீரர் நுவனிந்து பெர்னாண்டோ.
இலங்கை டெஸ்ட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோவின் சகோதரரான நுவனிந்து பெர்னாண்டோ, இலங்கை குழாத்துடன் தொடர்ச்சியாக இணைக்கப்பட்டுவந்தாலும் அவருக்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
எனினும் இந்த LPL தொடரை சரியாக பயன்படுத்திக்கொண்ட இவர், 9 இன்னிங்ஸ்களில் 2 அரைச்சதங்கள் அடங்கலாக 211 ஓட்டங்களை பெற்றுள்ளார். இந்த ஓட்டங்களை விட இவருடைய துடுப்பாட்ட திறமை மிகவும் அனுபவம் கூடியதாக உள்ளமை மிகவும் சுவாரஸ்யமான விடயமாகும்.
LPL நொக்-அவுட் போட்டிகளுக்கு தகுதிபெறுவதற்கான முக்கியமான போட்டியில் தம்புள்ள ஓரா அணியை கோல் கிளேடியேட்டர்ஸ் அணி எதிர்கொண்டது. குறித்த போட்டியில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி துடுப்பாட்டத்தில் ஒட்டுமொத்தமாக சறுக்கியிருந்தது. எனினும் ஒரு பக்கம் தன்னுடைய விக்கெட்டை பாதுகாத்துக்கொண்டு ஆடிய நுவனிந்து பெர்னாண்டோ இறுதிவரை களத்திலிருந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கடைசி ஓவர்வரை 36 பந்துகளுக்கு 38 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்த இவர், சிக்கண்டர் ரஷாவின் இறுதி ஓவரில் மூன்று பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 25 ஓட்டங்களை விளாசியிருந்தார். மொத்தமாக 42 பந்துகளில் இவர் 63 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார். இவருடைய இந்த இன்னிங்ஸ் மத்தியவரிசை வீரராக இவருடைய திறமையை வெளிச்சமிட்டு காட்டியது.
>> LPL 2022 தொடரை ஆக்கரமித்த பந்துவீச்சாளர்கள்
அதுமாத்திரமின்றி இந்தப்போட்டியில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 129 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், குறிப்பிட்ட இந்த வெற்றியிலக்க 11.1 ஓவர்களில் தம்புள்ள ஓரா அணி பெற்றால் நொக்-அவுட் சுற்றுக்கு தகுதிபெறுமுடியும் என்ற நிலை ஏற்பட்டது. எனினும், தம்புள்ள ஓரா அணியால் 14.1 ஓவர்களில் மாத்திரமே இந்த வெற்றியிலக்கை அடைய முடிந்ததால், கோல் அணி நொக்-அவுட் சுற்றுக்கு முன்னேிறயது. இதற்கு முக்கியமான காரணமாக மாறிய விடயம் நுவனிந்துவின் இந்த துடுப்பாட்ட இன்னிங்ஸ்.
அஞ்செலோ மெதிவ்ஸ் 73* (38) எதிர் ஜப்னா கிங்ஸ்
அஞ்செலோ மெதிவ்ஸை நீண்ட இடைவேளைக்கு பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டியில் பார்க்கும் வாய்ப்பு இந்த LPL தொடரில் கிட்டியிருந்தது.
எனினும் முதல் போட்டிகளில் இவர் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கியமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. குறித்த போட்டிகளில் மெதிவ்ஸ் பிரகாசிக்கவும் இல்லை. ஆனால், அடுத்தப்போட்டிகளில் மெதிவ்ஸ் மத்தியவரிசையில் களமிறங்கிய ஓட்டங்களை பெற ஆரம்பித்திருந்தார்.
குறிப்பாக ஜப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மீண்டும் பழைய அஞ்செலோ மெதிவ்ஸை ஞாபகப்படுத்தியிருந்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி 179 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்திருந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி 67 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் பெனி ஹோவல் (43) கொழும்பு அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச்சென்றனர்.
குறிப்பாக கடைசி 5 ஓவர்களுக்கு 75 ஓட்டங்கள் தேவைப்பட்டது. குறிப்பிட்ட இந்த ஓட்ட எண்ணிக்கையை அடைய மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடியதுடன், கடைசி ஓவரில் 22 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அஞ்செலோ மெதிவ்ஸ் கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள் உள்ளடங்களாக 14 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இறுதிப்பந்தில் 7 ஓட்டங்கள் என்ற நிலையில் குறித்த பந்தை துரதிஷ்டவசமாக சிக்ஸராக்க தவறியிருந்தார்.
>> IPL வரலாற்றில் கோடிகளை அள்ளிய வீரர்கள்!
அஞ்செலோ மெதிவ்ஸ் 38 பந்துகளில் 73 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தார். ஒருகட்டத்தில் சுவாரஷ்யமே இல்லாத போட்டியை இறுதிவரை அழைத்துச்சென்று ஜப்னா கிங்ஸ் அணிக்கு இறுதிநேரத்தில் திக் திக் தருணங்களை கொடுத்த மெதிவ்ஸின் இந்த இன்னிங்ஸ் இம்முறை LPL தொடரில் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாகும்.
ஷெவோன் டேனியல் 80 (55) எதிர் கோல் கிளேடியேட்டர்ஸ்
தம்புள்ள ஓரா அணிக்காக விளையாடிய 18 வயதான இளம் துடுப்பாட்ட வீரர் ஷெவோன் டேனியல் சர்வதேச கிரிக்கெட்டின் கவனத்தை ஈர்த்திருந்தார்.
இவருடைய துடுப்பாட்டத்தை பொருத்தவரையில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு எதிராக கொழும்பில் நடைபெற்ற போட்டியில் மாத்திரம் பிரகாசித்திருந்தாலும், இவருடைய துடுப்பாட்ட நுணுக்கங்கள் ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
தம்புள்ள ஓரா அணியின் முதல் வெற்றிக்கு ஷேவோன் டேனியலின் துடுப்பாட்ட பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்ததுடன், ஜோர்டன் கொக்ஸுடன் இணைந்து LPL வரலாற்றில் அதிகூடிய இணைப்பாட்ட சாதனையை பதிவுசெய்தார்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஷெவோன் டேனியல் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் அனுபவ பந்துவீச்சாளர்களான வஹாப் ரியாஸ், நுவான் பிரதீப் மற்றும் இமாட் வசீம் ஆகியோரை அற்புதமாக எதிர்கொண்டிருந்தார். 55 பந்துகளுக்கு முகங்கொடுத்த இவர் 5 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 80 ஓட்டங்களை விளாசினார்.
குறிப்பிட்ட இந்த இன்னிங்ஸின் மூலம் தம்புள்ள ஓரா அணி தங்களுடைய முதல் வெற்றியை பெற்றதுடன், இளம் ஷெவோன் டேனியலின் திறமை மீதான பார்வையும் ரசிகர்களிடத்தில் அதிகரித்திருந்தது.
சரித் அசலங்க 64 (40) எதிர் கண்டி பல்கோன்ஸ்
கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் ஆரம்ப போட்டிகளை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு இருக்கவில்லை.
எனினும் தொடர் இறுதிக்கட்டம் அடையும்போது கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் ஆட்டங்கள் எதிரணிகளுக்கு அழுத்தம் கொடுத்திருந்தன. ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு ஜப்னா கிங்ஸ் அணி தகுதிபெற்றிருந்த நிலையில், கோள் கிளேடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி கொழும்பு ஸ்டார்ஸ் அணி, இரண்டாவது குவாலிபையரில் கண்டி பல்கோன்ஸ் அணியை எதிர்கொண்டது.
கண்டி பல்கோன்ஸ் அணியானது இம்முறை தொடரில் முழு பலமான அணியாக திகழ்ந்திருந்தது. லீக் போட்டிகளில் ஒரு போட்டியில் மாத்திரமே தோல்வியடைந்திருந்தது. குவாலிபையரில் கொழும்பு ஸ்டார்ஸ் அணியை கண்டி அணி சந்தித்தபோது, கண்டி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற கணிப்பு அதிகமாக இருந்தது.
இதற்கு ஏற்றவாது குவாலிபையரில் வனிந்து ஹஸரங்க அபாரமாக ஆடி 34 பந்துகளில் 77 ஓட்டங்களை விளாசி, 169 என்ற வெற்றியிலக்கை நிர்ணயிக்க காரணமாக இருந்தார். முக்கியமான போட்டிகளில் முன்னணி வீரர்கள் பிரகாசிப்பார்கள் என்ற அடிப்படையில் சரித் அசலங்கவின் இன்னிங்ஸ் கண்டி பல்கோன்ஸ் அணியின் இறுதிப்போட்டிக்கான கனவை வீணடித்தது.
>> சாதனைகளை குவித்த இஷான் கிஷனின் கன்னி இரட்டைச்சதம்!
சரித் அசலங்க கண்டி பல்கோன்ஸ் அணியின் பந்துவீச்சை தடுமாற்றத்துக்கு உள்ளாக்கி, அதிரடியாக ஓட்டங்களை குவித்தார். 40 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகளை விளாசிய இவர், அணியை 120 ஓட்டங்கள் வரை அழைத்துச்சென்று வெற்றியை இலகுவாக்கினார்.
குறிப்பாக சரித் அசலங்கவின் இந்த வேகமான ஓட்டக்குவிப்பு மற்றும் ஆக்ரோஷமான ஆட்டம் என்பன கொழும்பு ஸ்டார்ஸ் அணியை முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்றது.
தினேஷ் சந்திமால் 63 (33) எதிர் கோல் கிளேடியேட்டர்ஸ்
இந்த ஆண்டு LPL தொடரில் விறுவிறுப்பான போட்டிகளில் ஒன்றாக கோல் கிளேடியேட்டர்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி அமைந்திருந்தது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 194 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்திருந்தது. இந்த ஓட்ட எண்ணிக்கையானது T20 போட்டிகளை பொருத்தவரை மிகவும் கடினமான இலக்குகளில் ஒன்று.
எனினும் தினேஷ் சந்திமாலின் அதிரடி ஆரம்பம் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு ஏமாற்றத்தை கொடுத்திருந்தது. கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சாளர்களை பதம் பாத்திருந்த தினேஷ் சந்திமால் மிகச்சிறந்த ஆரம்பத்தை கொடுத்திருந்தார்.
வெறும் 33 பந்துகளை மாத்திரம் சந்தித்திருந்த இவர் 190.90 என்ற ஓட்டவேகத்தில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 63 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார். தினேஷ் சந்திமாலின் இந்த ஆரம்பம் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு உத்வேகத்தை கொடுக்க, சரித் அசலங்க (46) மற்றும் ரவி பொப்பாரா (31*) ஆகியோர் ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றியை உறுதிசெய்திருந்தனர்.
தினேஷ் சந்திமாலின் இந்த இன்னிங்ஸின் உதவியுடன் கொழும்பு ஸ்டார்ஸ் அணியானது தங்களுடைய நொக்-அவுட் சுற்றுக்கான பாதையை இலகுவாக்கிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<