உலகக்கிண்ணத்தின் மிகச்சிறந்த கோலுக்கான விருதை வென்ற பென்ஜமின் பவார்ட்

807
Image Courtesy - Stretty News

ரஷ்யாவில் நடைபெற்று முடிந்த பிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில், ஆர்ஜன்டீன அணிக்கு எதிரான நொக்-அவுட் சுற்றுப் போட்டியில் பிரான்ஸ் வீரர் பென்ஜமின் பவார்ட் அடித்த கோலானது,  2018ஆம் ஆண்டின் சிறந்த கோலாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

சர்வதேச கால்பந்து சம்மேளனம் உலகக் கிண்ணத்தின் சிறந்த கோலுக்கான விருது வழங்குவதை கடந்த 2006ஆம் ஆண்டு அறிமுகம் செய்திருந்தது. இதன்படி வெற்றியாளர்கள் தனிப்பட்ட நடுவர் குழாமால் தெரிவு செய்யப்படாமல், ரசிகர்களின் வாக்குகள் மூலம் நேரடியாக தெரிவு செய்யப்பட்டனர். இதன்படி இம்முறையும் பிஃபாவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலமாக வாக்குகள் பெறப்பட்ட நிலையில், பென்ஜமின் பவார்ட்டின் கோலுக்கு சுமார் 30 இலட்சம் வாக்குகள் கிடைத்துள்ளது.

உலகக் கிண்ண தோல்வியின் பின் கால்பந்தை பிடிக்காத நெய்மார்

இவ்வருடம் ரஷ்யாவில் நடைபெற்ற பிஃபா உலகக்கிண்ண தொடர், கால்பந்தாட்ட ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்திருந்தது. வெற்றி, தோல்வியை தாண்டி ஒவ்வொரு ஆட்டத்திலும் அனல் பறந்தது என கூறமுடியும். இந்த முறை மொத்தமாக 64 போட்டிகள் நடைபெற்றிருந்த நிலையில், மோத்தமாக 190 கோல்களை அணிகள் வலைக்குள் செலுத்தியிருந்தன.

இதில் எந்த கோல் உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது? என்ற கேள்விக்கு, ஆர்ஜன்டீன அணிக்கு எதிரான நொக்-அவுட் சுற்றுப் போட்டியில் பிரான்ஸ் அணியின் 22 வயதான இரண்டாம் இலக்க பின்கள வீரர் பென்ஜமின் பவார்ட் அடித்திருந்த கோலை ரசிகர்கள் பதிலாக கொண்டுவந்துள்ளனர்.

ஆர்ஜன்டீன அணிக்கு எதிரான குறித்த நொக்-அவுட் போட்டியில், பிரான்ஸ் அணி 1-2 என பின்தங்கியிருந்தது. இதன் போது போட்டியின் 57ஆவது நிமிடத்தில் எதிரணியின் கோல் எல்லைக்கு இடது பக்கமாக இருந்து லூகாஸ் ஹெர்னாண்டஸ் தட்டிக்கொடுத்த பந்தை பென்ஜமின் பவார்ட், வலது பக்க பெனால்டி சதுரத்தின், கோர்னர் (சுமார் 21 யார்) பகுதியிலிருந்து, கோல் வலையின் வலது பக்க கோர்னரின் மேல் பகுதிக்கு செலுத்தி, அற்புதமான கோல் ஒன்றினை பெற்றுக்கொடுத்தார். இந்த கோல் போட்டியை 2-2 என சமப்படுத்த உதவியுடன், அணியின் வெற்றிக்கும் மிகப்பெரிய காரணமாக அமைந்திருந்தது.

அவரது இந்த கோல் தொடர்பில் பென்ஜமின் பவார்ட் கூறுகையில், “பந்து தரையில் பட்டு நேரடியாக என்னிடம் வந்தது. அதை பற்றி நான் பெரிதாக சிந்திக்கவில்லை. நான் வந்த திசைக்கு நேர் எதிராக இருந்த கோல் எல்லையை நோக்கி பந்தை அடித்தேன். அது கோலாக இருக்கும் என நான் நம்பவில்லை. இருப்பினும் பந்து நேரடியாக கோல் எல்லைக்குள் நுழைந்ததை நான் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்” என குறிப்பிட்டார்.

பென்ஜமின் பவார்ட் அடித்த இந்த கோலானது இவ்வருடத்தின் சிறந்த கோல் என்ற பெருமையை பெற்றதுடன், இதற்கு அடுத்தபடியாக மேலும் இரண்டு கோல்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளன.

இதில் ஜப்பான் அணிக்கு எதிரான குழுநிலைப் போட்டியில் கொலம்பிய அணியின் ஜுவான் குயிண்டெரோ அடித்த ப்ரீ கிக் இரண்டாவது இடத்தையும், ஆர்ஜன்டீன அணிக்கு எதிரான குழுநிலைப் போட்டியில் குரோஷிய அணித்தலைவர் லூக்கா மொட்ரிச் பெனால்டி (18 யார்) எல்லைக்கு அருகிலிருந்து அடித்த கோல் மூன்றாவது சிறந்த கோலுக்கான இடத்தையும் பிடித்துக்கொண்டது.

இதேவேளை 2006ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிஃபாவின் சிறந்த கோலுக்கான விருது இதற்கு முன்னர் 2006, 2010 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஐரோப்பிய வீரர் ஒருவர் இந்த விருதை பெருவது இதுவே முதல் தடவை. 2006ஆம் ஆண்டு ஆர்ஜன்டீன வீரர் மெக்ஸி ரொட்ரிகஸ் இந்த விருதை முதல் முறையாக கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு உருகுவே அணியின் டியாகோ ஃபோர்லன் கைப்பற்றியதுடன், 2014ஆம் ஆண்டு கொலம்பியாவின் ஜேம்ஸ் ரொட்ரிகஸ் வெற்றிகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க