சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற பெங்களூர் மைதானத்தின் ஆடுகளம் சராசரிக்கும் குறைவானது என ஐசிசி மதிப்பிட்டுள்ளது.
பெங்களூர் மைதானத்தின் ஆடுகளம் தொடர்பில் அறிக்கை வழங்கியுள்ள ஐசிசியின் போட்டி மத்தியஸ்தரான ஜவகல் ஸ்ரீநாத், ஆடுகளம் சராசரிக்கும் குறைவானது என மதிப்பட்டுள்ளார். அதுமாத்திரமின்றி, ஆடுகள கண்கானிப்பு செயன்முறையின்படி, ஒரு தரக்குறைப்பு புள்ளியும் பெங்களூர் மைதானத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
>> அபிஷேக்கின் பந்துவீச்சில் சுருண்ட களுத்துறை திருச்சிலுவை கல்லூரி
ஜவகல் ஸ்ரீநாத்தின் அறிக்கையில், “பெங்களூர் ஆடுகளமானது முதல் நாளிலிருந்து அதிகமான சுழல் தன்மையை கொண்டிருந்தது. இந்தவிடயம் ஒவ்வொரு நாளுக்கும் அதிகரித்துக்கொண்டிருந்தது. எனது பார்வையில், இந்த ஆடுகளம் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரண்டுக்கும் சமனிலையானதல்ல” என குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. இதில் 9 விக்கெட்டுகளை சுழல் பந்துவீச்சாளர்கள் கைப்பற்றியிருந்ததுடன், முதல் நாள் ஆட்டநேர நிறைவில் இந்திய அணி 252/10 ஓட்டங்களை பெற்றிருந்ததுடன், இலங்கை அணி 86/6 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 109 ஓட்டங்களை மாத்திரம் பெற, இந்திய அணி 447 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது. இதில், இலங்கை அணி 208 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழக்க இந்திய அணி 238 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது
ஐசிசியின் விதிமுறைப்படி சர்வதேச போட்டிகள் நடைபெறும் மைதான ஆடுகளங்கள் தரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், ஆடுகளங்கள் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரண்டுக்கும் சராசரியானதாக அமையவேண்டும். இல்லையெனில் அதற்கான தரக்குறைப்பு புள்ளிகள் வழங்கப்படும்.
அதன்படி, ஒரு மைதானமானது 5 வருட காலப்பகுதிக்குள் 5 தரக்குறைப்பு புள்ளிகளை பெறுமானால் 12 மாதங்களுக்கும், 10 புள்ளிகளை பெறுமானால் 24 மாதங்களுக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கான தடையை பெற்றுக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<