மூன்றாவது முறை விஸ்டன் விருதை வென்றார் பென் ஸ்டோக்ஸ்

253

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறை வீரரும், டெஸ்ட் அணியின் தலைவருமான பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டுக்கான விஸ்டனின் முன்னணி கிரிக்கெட் வீரர் விருதை தட்டிச் சென்றுள்ளார். 

கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

கிரிக்கெட் வீரர்களின் பைபிள் என்று வர்ணிக்கப்படும் ‘விஸ்டன்’ இதழ் ஆண்டு தோறும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து கௌரவிக்கும். அந்த வகையில் 2022இல் சிறப்பாக செயல்பட்ட வீரர்களில் இங்கிலாந்தைச் சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் இம்முறை விஸ்டனின் முன்னணி கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக செயல்படுவதோடு, கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கெதிராக அவரது Match-Winning செயல்திறன் அபாரமாக இருந்தது. அத்துடன், இங்கிலாந்து அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பத்திலும் முக்கிய பங்கு வகித்தார்.

இதனிடையே, பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் அணியின் தலைவராக பதவியேற்றபோது, இங்கிலாந்து டெஸ்ட் அணி கடைசியாக பங்கேற்ற 17 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. எனினும், அவரது தலைமையில், இங்கிலாந்து டெஸ்ட் அணி 12 போட்டிகளில் 10 போட்டிகளில் வென்று டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னணி அணிகளில் ஒன்றாக இடம்பிடித்தது.

இதற்கு முன்பு பென் ஸ்டோக்ஸ், 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் விஸ்டனின் முன்னணி கிரிக்கெட் வீரர் விருதை வென்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பென் ஸ்டோக்ஸுடன் சக நாட்டவர்களான பென் போக்ஸ், மெத்யூ ஜேம்ஸ் பொட்ஸ், நியூசிலாந்து அணி வீரர்களான டெரில் மிட்செல், டொம் பிளெண்டல் மற்றும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோரும் விஸ்டனின் ஆண்டின் சிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்களில் இடம்பெற்றுள்ளனர்.

இதேவேளை, அவுஸ்திரேலியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீராங்கனை பெத் மூனி இரண்டாவது முறையாக உலகின் முன்னணி மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, ஆண்டின் அதிசிறந்த T20i வீரருக்கான விஸ்டன் விருதை இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<