மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவராக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் ஜோ ரூட் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர் பதவியை மிகப்பெரிய கௌரவமாக எண்ணும் பென் ஸ்டோக்ஸ்
ஜோ ரூட்டின் மனைவி இரண்டாவது குழந்தையை பிரசவிக்கவுள்ள நிலையில், ஜோ ரூட் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளதாகவும், அவர் வைத்தியசாலையில் இருந்து திரும்பும் பட்சத்தில் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார் எனவும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறு, தனிமைப்படுத்தலுக்கு முகங்கொடுக்கும் ஜோ ரூட், எதிர்வரும் 16ம் திகதி ஓல்ட் ட்ரெபோர்டில் நடைபெறவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இணைக்கப்படுவார். இவர் குறித்த போட்டிக்கு 3 நாட்களுக்கு முன்னர் குழாத்துடன் இணைந்துக்கொள்வார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக இங்கிலாந்து அணியின் தலைவராக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், இன்றைய தினம் முதன்முறையாக இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் தலைமை தாங்கவுள்ளமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த அனுபவத்தைக்கொண்ட அணித் தலைவராக ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், முதற்தர போட்டிகள் உட்பட தேசிய மட்டத்திலும் எந்தவொரு அணியின் தலைவராகவும் செயற்படவில்லை என்பதுடன், அவர் முதன்முறையாக தொழில்முறை கிரிக்கெட் அணியொன்றின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் 2016ம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் உப தலைவராக செயற்பட்டிருந்த போதும், அதற்கு அடுத்த வருடம் இடம்பெற்ற ப்ரிஸ்டோல் சம்பவம் காரணமாக அவரது உப தலைவர் பதவி பறிக்கப்பட்டது. எனினும், கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்டோக்ஸ் முழுமையான திறமையை வெளிப்படுத்தியிருந்த நிலையில், கடந்த வருட ஆஷஷ் தொடரில் மீண்டும் உப தலைவர் பதவியை ஏற்றிருந்தார்.
Video – இலங்கையில் கிரிக்கெட் லீக் நடைபெற வேண்டுமா? – Udana
அதேநேரம், பென் ஸ்டோக்ஸின் உப தலைவர் பதவி, விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான ஜோஸ் பட்லருக்கு வழங்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் இணைந்து ஏஜஸ் போவில் நடைபெறவுள்ள பயிற்சி போட்டியை வழிநடத்தவார்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 8ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<