கடும் போட்டி நிலவிய பெல்ஜியத்துடனான அரையிறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அணி மூன்றாவது முறையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளறது.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற போட்டியின் இரண்டாவது பாதியில் சாமுவேல் உம்டிடி தலையால் முட்டி பெற்ற கோல் பிரான்ஸ் அணி உலகக் கிண்ணத்தை இரண்டாவது முறை வெற்றிபெறும் வாய்ப்பை நெருங்கச் செய்துள்ளது.
பிரேசிலை வீழ்த்திய பெல்ஜியம் அரையிறுதியில் பிரான்ஸுடன் பலப்பரீட்சை
பெல்ஜியம் வரலாற்றில் மிகச் சிறந்த அணி ஒன்றுடன் இம்முறை உலகக் கிண்ண போட்டியில் களமிறங்கியபோதும் அந்த அணி 1986 ஆம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் ஒருமுறை ஏமாற்றத்துடன் அரையிறுதியோடு வெளியேறியது.
பிரான்ஸ் உலகக் கிண்ணத்தை வெல்வதற்கான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அல்லது குரோஷிய அணியுடன் மோதவுள்ளது. இங்கிலாந்து மற்றும் குரோஷிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டி இன்று (11) மொஸ்கோவில் நடைபெறவுள்ளது.
அரையிறுதியில் தோற்ற பெல்ஜியம் அணி உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தை பெறுவதற்கான போட்டியில் எதிர்வரும் சனிக்கிழமை (14) மோதவுள்ளது.
64 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் அரங்கில் குழுமியிருக்க பரபரப்புடன் ஆரம்பமான முதல் அரையிறுதிப் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் பெற கடுமையாக போராடியதோடு சில வாய்ப்புகள் நூலிழையில் தவறிப்போயின.
போட்டி ஆரம்பித்த முதல் நிமிடத்திலேயே பிரான்ஸின் 19 வயதுடைய இளம் வீரர் கைலியன் ம்பப்பே வழங்கிய பந்தை அன்டொனொயோ கிரிஸ்மன் கோலாக்கும் முயற்சி நழுவியது.
மறுபுறம் பெல்ஜியம் அணித் தலைவர் ஏடன் ஹசார்ட்டின் இரண்டு முயற்சிகள் வலையில் இருந்து மிக நெருங்கிய தூரத்தில் தவறிப்போனமை குறிப்பிடத்தக்கது. அதே போன்று ம்பப்பேவின் வேகமான ஆட்டம் பெல்ஜியமுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாகவே இருந்தது.
குறிப்பாக 34ஆவது நிமிடத்தில் ம்பப்பே அபாரமாக கடத்திய பந்தை பெனால்டி எல்லைக்குள் வைத்து ஒலிவியர் ஜிரூட் இடது காலால் உதைத்தபோதும் அது இலக்கு தவறி வெளியேறியது. இதற்கு நிகராக ஹசார்ட் அடித்த பந்து கோல் கம்பத்தில் மேல் பாகத்தில் இருந்து ஒரு சில அங்குலம் தூரத்தால் வெளியேறியது.
முதல் பாதி: பிரான்ஸ் 0 – 0 பெல்ஜியம்
இரு அணிகளும் சரிசமமாக கோல் முயற்சியில் ஈடுபட பெரும் இழுபறியோடு நீடித்த ஆட்டத்தில் திருப்புமுனையாகவே 51 ஆவது நிமிடத்தில் பிரான்ஸுக்கு கோனர் கிக் வாய்ப்பு கிடைத்தது. கிரிஸ்மன் உதைத்த அந்த கோனர் கிக்கை ஆறு யார் பெட்டியின் மேல் இடது மூலையில் இருந்த சாமுவேல் உம்டிடி உயரப் பாய்ந்து தலையால் முட்டி கோலாக மாற்றினார்.
ரியெல் மெட்ரிட் வாழ்வை முடித்து ஜுவண்டஸுடன் இணைந்தார் ரொனால்டோ
இம்முறை உலகக் கிண்ணத்தில் தலையால் பெறும் கோல்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில் இந்த கோல் பிரான்ஸுக்கு தீர்க்கமாக அமைந்தது. 2018 உலகக் கிண்ணத்தில் இதுவரை தலையால் முட்டி 32 கோல்கள் பெறப்பட்டிருப்பதோடு இது உலகக் கிண்ண வரலாற்றில் இரண்டாவது அதிகூடிய எண்ணிக்கையாகும். இதனை விடவும் 2002 ஆம் ஆண்டு (35) உலகக் கிண்ண போட்டியிலேயே தலையால் முட்டி அதிக கோல்கள் பெறப்பட்டுள்ளன.
மறுபுறம் உம்டிடியையும் சேர்த்து உலகக் கிண்ண அரையிறுதியில் பிரான்ஸ் அணி கடைசியாக பெற்ற ஆறு கோல்களில் நான்கு கோல்கள் அந்த அணியின் பின்கள வீரர்களாலேயே பெறப்பட்டுள்ளன.
பிரான்ஸ் அணி 1-0 என முன்னிலை பெற்றதை அடுத்து அந்த அணி தனது தற்காப்பு ஆட்டத்தை பலப்படுத்தியதோடு பெல்ஜியம் பதில் கோல் திருப்ப பிரான்ஸின் கோல் கம்பத்தை இடைவிடாது ஆக்கிரமித்தது.
போட்டி முழுவதிலும் மூன்றில் இரண்டு பகுதி நேரம் பெல்ஜியம் அணி வசமே பந்து இருந்தபோதும் அந்த அணி கோலை நோக்கி 10 தடவைகளே பந்தை செலுத்தியது. அதனை விடவும் பிரான்ஸ் 19 தடவைகள் கோல் முயற்சியில் ஈடுபட்டது.
போட்டியின் கடைசி 20 நிமிடங்களில் பிரான்ஸ் அணியின் பின்களத்தை முறியடிப்பதற்கு பெல்ஜியம் மாற்று வீரர்களாக தாக்குதல் ஆட்டக்காரர்களை அனுப்பியபோதும் அது கடைசிவரை வெற்றி அளிக்கவில்லை. குறிப்பாக கடந்த போட்டிகளில் அந்த அணிக்கு தீர்க்கமான பங்காற்றிய ரொமெலு லுகாகு எதிரணிக்கு சவாலாக அமையவில்லை.
நேரம் கடந்து செல்லச் செல்ல நடுவரால் இறுதி விசில் ஊதப்பட்டதை அடுத்து பிரான்ஸ் பக்கம் இருந்து கொண்டாட்டம் ஆரம்பமானது. பிரான்ஸ் அணிக்கு உலகக் கிண்ணத்தை வெல்ல இன்னும் ஒரு போட்டியே எஞ்சியுள்ளது.
1998 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றது தொடக்கம் பிரான்ஸ் அணி கடந்த ஆறு உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடும் மூன்றாவது இறுதிப் போட்டியாக இது அமையவுள்ளது. இந்த காலப்பிரிவில் அதிக முறை உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணியாகவும் பிரான்ஸ் உள்ளது.
லிதுவேனியாவை எதிர்கொள்ளவுள்ள இலங்கை B அணி அறிவிப்பு
பலம் மிக்க அணியாக இருந்து வந்த பெல்ஜியம் 2016 செப்டெம்பரில் ஸ்பெயினுடனான நட்புறவுப் போட்டியில் தோற்ற பின் அந்த அணி தோல்வியை சந்திப்பது இதுவே முதல் முறையாக இருந்தது.
முழு நேரம்: பிரான்ஸ் 1 – 0 பெல்ஜியம்
கோல் பெற்றவர்கள்
- பிரான்ஸ் – சாமுவேல் உம்டிடி 51′
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<