இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுவதில் மீண்டும் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.
பங்களாதேஷில் தற்போது தீவிரமடைந்துவரும் கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக, எதிர்வரும் திங்கட்கிழமை முதல், ஒருவார காலத்துக்கு முழு நாட்டிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்படவுள்ளதாக, அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
சதம் விளாசி திறமையினை நிரூபித்த மிலிந்த சிறிவர்தன
இந்தநிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இம்மாதம் இலங்கை வரவுள்ளது. குறித்த இந்த தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், பங்களாதேஷில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளமை தொடரை பாதிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிஷாமுதீன் சௌத்ரி, தொடரை பிற்போடுவதற்கான அறிவிப்புகள் தொடர்பில் தற்போதுவரை கலந்துரையாடவில்லை எனவும், தொடருக்கான ஆயத்தங்கள் தற்போதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இலங்கை தொடருக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆனாலும் நாட்டின் தற்போதைய நிலையை நாம் அவதானித்து வருகின்றோம். அரசாங்கம் ஊரடங்கை அறிவித்துள்ள நிலையில், உடனடியாக தொடர் நடைபெறுவது சந்தேகத்துக்கிடமானது என என்னால் தெரிவிக்க முடியாது.
நாம் எந்த நிலையில் தற்போது உள்ளோம் என நாம் அறிவோம். எனவே இன்னும் ஓரிரண்டு நாட்களில், அரச அதிகாரிகளுடன் இலங்கைக்கான கிரிக்கெட் தொடர் குறித்து கலந்துரையாடி முடிவை அறிவிப்போம்” என நிஷாமுதீன் சௌத்ரி குறிப்பிட்டார்.
பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இந்த தொடர் கடந்த ஒக்டோபர் – நவம்பர் மாதங்களில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த போதும், கொவிட்-19 தொற்று விதிமுறைகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இரண்டு கிரிக்கெட் சபைகளும் கலந்துரையாடியதன் அடிப்படையில், தொடரை மீண்டும் நடத்துவதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இம்மாதம் 17-18ம் திகதிகளில் கட்டுநாயக்க சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் பங்களாதேஷ் அணி, இலங்கை அணியுடன் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிப்போட்டியில் விளையாடவுள்ளதுடன், முதல் டெஸ்ட் போட்டி இம்மாதம் 21ம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி 29ம் திகதியும் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க