கொழும்பு ஆனந்த கல்லூரி மற்றும் நாலந்த கல்லூரி அணிகளுக்கு இடையில் நடைபெறும் மாபெரும் கிரிக்கெட் போட்டியின் மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் கிரிக்கெட் சமரில் நாலந்த கல்லூரி அணி 5 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியைப் பெற்றது. 44ஆவது முறையாக நடைபெற்ற இப்போட்டி SSC மைதானத்தில் இன்று (18) காலை ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நாலந்த கல்லூரி அணி ஆனந்த கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய ஆனந்த கல்லூரி அணி 49.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றது.
ஆனந்த கல்லூரி சார்பில் துடுப்பாட்டத்தில் அசெல் சிகேரா 87 ஓட்டங்களைப் பெற்றதுடன் லஹிரு ஹிரண்ய 38 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் நாலந்தா கல்லூரியின் லக்ஷித ரசாஞ்சன 3 விக்கெட்டுக்களையும் சமிந்து விஜேசிங்ஹ மற்றும் கவீஷ் மதுரப்பெரும ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
மோசமான நடத்தைக்கு வருந்திய பங்களாதேஷ் கிரிக்கெட் சபை
245 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய நாலந்த கல்லூரி அணி 44 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 247 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.
நாலந்த கல்லூரி சார்பாக சுஹக விஜேவர்தன 68 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்ததுடன் சமிந்து விஜேசிங்ஹ ஆட்டமிழக்காது 48 ஓட்டங்களைப் பெற்றார்.