மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னணி விளையாட்டுக் கழகங்களான கோட்டைமுனை விளையாட்டுக் கழகம் மற்றும் சிவானந்தா விளையாட்டுக் கழகம் ஆகியவற்றுக்கிடையில் “மட்டக்களப்பின் பெரும் சமர்” (Battle of Batti) என்னும் பெயரில் நடைபெறும் வருடாந்த கிரிக்கெட் தொடரின் 11ஆவது தடவையான மோதல் கடந்த வார இறுதியில் நடைபெற்று முடிந்தது.
இரண்டு ஒரு நாள் போட்டிகளைக் கொண்டதாக ஆண்டுதோறும் இடம்பெற்று வருகின்ற இந்த தொடரில், இம்முறைக்கான இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று 2-0 என கோட்டைமுனை விளையாட்டுக் கழகம் சம்பியன் பட்டத்தினை சுவீகரித்தது.
ஷெஹான் மதுஷங்க சுதந்திர கிண்ணத்தில் விளையாடுவது சந்தேகம்
பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு…
மீன்பாடும் தேனாட்டின் பிரபல்யமான விளையாட்டுக் கழகங்களான சிவானந்தா விளையாட்டுக் கழகமும், கோட்டைமுனை விளையாட்டுக் கழகமும் கடினப்பந்து பயன்படுகின்ற, இந்த கிரிக்கெட் தொடரினை முதற்தடவையாக 2006ஆம் ஆண்டு விளையாடியிருந்தன. தொடரில், இரண்டு நாட்கள் இரண்டு ஒரு நாள் போட்டிகள் நடாத்தப்பட்டு அதன் முடிவுகளின் அடிப்படையில் வருடத்திற்கான சம்பியன் யார்? என்பது தீர்மானிக்கப்படும்.
இதுவரையில் நடைபெற்றிருக்கின்ற தொடர்களில் சிவானந்தா விளையாட்டுக் கழகம் (2008, 2009, 2011, 2012) நான்கு தடவைகள் சம்பியன் பட்டத்தை (2-0 என) சுவீகரித்திருப்பதோடு 2015, 2016ஆம் ஆண்டுக்கான தொடர்களில் கோட்டைமுனை விளையாட்டுக் கழகம் சம்பியனாகியிருந்தது. இதுதவிர 2006, 2007, 2013, 2014ஆம் ஆண்டுகளின் தொடர்கள் சமநிலையில் முடிவடைந்திருந்தன.
இந்த ஆண்டுக்கான தொடரினை சிவானந்தா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. தொடரின் முதலாவது ஒரு நாள் போட்டி கடந்த சனிக்கிழமை (17) மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.
முதல் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றியடைந்த சிவானந்தா அணியின் தலைவர் G. ஜெனிசியஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை கோட்டைமுனை அணிக்கு வழங்கியிருந்தார்.
இதன்படி துடுப்பாட்டத்தினை தொடர்ந்த கோட்டைமுனை வீரர்கள் 36.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 156 ஓட்டங்களினையே பெற்றுக்கொண்டது. கோட்டைமுனை அணி சார்பான துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரராக வந்திருந்த A. வினோதன் அதிகபட்சமாக அரைச்சதம் கடந்து 4 சிக்ஸர்கள், 5 பெளண்டரிகள் அடங்கலாக 43 பந்துகளுக்கு 57 ஓட்டங்களினைக் குவித்தார்.
மறுமுனையில் சிவானந்தா அணியின் பந்துவீச்சு சார்பாக M. துசியந்திரன் 43 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களையும், T. ஜெகன், R. சஞ்ஜீவன், S. பிரணவன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.
தொடர்ந்து சவால் குறைந்த வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த 157 ஓட்டங்களினைப் பெற பதிலுக்கு துடுப்பாடிய சிவானந்தா அணி எதிரணியின் அபாரப் பந்துவீச்சினால் 155 ஓட்டங்களினை மாத்திரம் பெற்று வெறும் ஒரு ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியிருந்தது. சிவானந்தா அணிக்காக R. சன்ஜீவன் அதிகபட்சமாக 36 ஓட்டங்களினைப் பெற, ஏனைய வீரர்கள் அனைவரும் குறைவான ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்திருந்தனர்.
கோட்டைமுனை அணியின் பந்துவீச்சில் S. நிலுசாந்த் மூன்று விக்கெட்டுக்களையும், R. திலக்ஷன், அணித் தலைவர் L. தனுஷன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றி தமது அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்திருந்தனர்.
இதனை அடுத்து தொடரின் இரண்டாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டி அடுத்த நாளில் (ஞாயிற்றுக்கிழமை – 18) இதே மைதானத்தில் இடம்பெற்றது. இரண்டாம் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கோட்டைமுனை விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்திருந்தது.
முதலில் ஆடிய கோட்டைமுனை அணி, முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்டுக்களை துரித கதியில் இழந்திருந்த போதிலும், 7ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராக வந்திருந்த T. தேனுரதன் பொறுமையாக ஆடி அணியினை மீட்டிருந்தார். இதனால், 42 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த கோட்டைமுனை அணி 200 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
போட்டியின் புகைப்படங்களைப் பார்வையிட
கோட்டைமுனை அணி சார்பாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்றிருந்த தேனுதரன் 4 பெளண்டரிகள் அடங்கலாக 69 ஓட்டங்களுடன் நின்றிருந்தார். சிவானந்தா அணியின் பந்துவீச்சு சார்பாக S. தவகீசன் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து வெற்றி இலக்கான 201 ஓட்டங்களினைப் பெற பதிலுக்கு துடுப்பாடிய சிவானந்தா விளையாட்டுக் கழகம் 39.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 129 ஓட்டங்களினை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவிக் கொண்டது. இதனால் அவர்கள் இம்முறைக்கான “மட்டக்களப்பு பெரும் சமர்” தொடரினையும் கோட்டைமுனை அணியிடம் பறிகொடுத்திருந்தது.
சிவானந்தா அணியின் துடுப்பாட்டத்தில் S. பிரதீஸ் மாத்திரம் 20 ஓட்டங்களை எட்டியிருந்தார்.
இதேவேளை கோட்டைமுனை அணி சார்பாக முன்னர் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்டிருந்த தேனுதரன், S. நிலுஷாந்த் ஆகிய வீரர்கள் தலா மூன்று விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றி தமது அணியினை தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக சம்பியனாக்குவதற்கு முக்கிய பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.
போட்டிகளின் சுருக்கம்
முதல் போட்டி
கோட்டைமுனை விளையாட்டுக் கழகம் – 156(36.5) A. வினோதன் 57, M.துசியேந்திரன் 43/3, T. ஜெகன் 15/2
சிவானந்தா விளையாட்டுக் கழகம் – 155 (48.1) R. சன்ஜீவன் 36, K. தர்மீகன் 31, S. நிலுஷாந்த் 17/3
முடிவு – கோட்டைமுனை விளையாட்டுக் கழகம் 1 ஓட்டத்தினால் வெற்றி
இரண்டாவது போட்டி
கோட்டைமுனை விளையாட்டுக் கழகம் – 200(42) T. தேனுதரன் 69, S. தவகீசன் 24/4, R. சஞ்ஜீவன் 40/2
சிவானந்தா விளையாட்டுக் கழகம் – 129(39.4) S. பிரதீஸ் 20, T. தேனுதரன் 23/3, S. நிலுஷாந்த் 24/3
முடிவு – கோட்டைமுனை விளையாட்டுக் கழகம் 71 ஓட்டங்களால் வெற்றி
தொடரின் விருதுகள்
- முதல் போட்டியின் ஆட்ட நாயகன் – A. வினோதன் (கோட்டைமுனை விளையாட்டுக் கழகம்)
- இரண்டாம் போட்டியின் ஆட்ட நாயகன் – T. தேனுதரன் (கோட்டைமுனை விளையாட்டுக் கழகம்)
- தொடர் நாயகன் – T. தேனுதரன் (கோட்டைமுனை விளையாட்டுக் கழகம்)
- சிறந்த துடுப்பாட்ட வீரர் – K. தர்மீகன் (சிவானந்தா விளையாட்டுக் கழகம்)
- சிறந்த பந்துவீச்சாளர் – S. நிலுஷாந்த் (கோட்டைமுனை விளையாட்டுக் கழகம்)
- சிறந்த களத்தடுப்பாளர் – M. கனிஷ்டோன் (சிவானந்தா விளையாட்டுக் கழகம்)