இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிந்திருக்கும் இத்தருணத்தில், இலங்கை கிரிக்கெட்டினால் டெஸ்ட் போட்டிகளில் வழமையாக மூன்றாவது துடுப்பாட்ட வீரராக களமிறங்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள “குசல் ஜனித் பெரேரா” அந்த இடத்தில் விளையாட தகுதியானவரா? என்கிற கேள்வி, கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் இலங்கை அணியின் ரசிகர்கள் மத்தியில் இப்போட்டியின் பின்னர் எழுப்பப்பட்டுள்ளதோடு, அவருக்கு அவ்விடத்தில் இருந்து விளையாடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது தவறான விடயங்களில் ஒன்று எனவும் அது மாற்றப்பட வேண்டும் என்றும் இலங்கை ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
இதனை கவனத்தில் கொண்டு நாம் உலகின் மற்றைய அணிகளில் மூன்றாம் இடத்தில் விளையாடும் வீரர்களுடன் ஒப்பிடும் போது குசல் பெரேரா எந்த நிலையில் இருக்கின்றார் என்பதனை அவதானிப்போம்.
குசல் பெரேரா – இலங்கை
போட்டிகள் |
இன்னிங்ஸ் | ஆ.இ | ஓட்டங்கள் | அ.ஓ | சராசரி | 100 | 50 |
10 | 18 | 0 | 565 | 110 | 31.38 | 1 |
3 |
தனது குறுகிய கால டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் அரைப்பகுதியினை முதல் வரிசை துடுப்பாட்ட வீரராக நிறைவு செய்திருக்கும் குசல், ஆரம்பத்தில் விக்கெட் காப்பாளராக அணிக்கு வந்த வேளையில் 7 ஆவது துடுப்பாட்ட வீரராகவே களமிறங்கி இருந்தார். குசல் பெரேராவை மூன்றாவது துடுப்பாட்ட வீரராக களமிறக்கும் முயற்சி அண்மையில் இடம்பெற்ற அவுஸ்திரேலியா தொடரில் இருந்து ஆரம்பித்து அடுத்து ஆரம்பமாக இருக்கும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தொடரும் எனத் தெரிகின்றது.
உலக டெஸ்ட் தரவரிசை – 64
செடெஸ்வர் புஜாரா – இந்தியா
போட்டிகள் |
இன்னிங்ஸ் | ஆ.இ | ஓட்டங்கள் | அ.ஓ | சராசரி | 100 | 50 |
43 |
72 | 6 | 3256 | 206* | 49.33 | 10 |
11 |
2010 இல் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி விளையாட ஆரம்பித்த புஜாரா, கடந்த இருவருடங்களிலும் சிறப்பாக ஆடி உறுதியான 3 ஆவது இடத்தினை தனக்கே உரிய பாணியில் இந்திய அணியில் உருவாக்கி கொண்டுள்ளார். இருப்பினும் ஆரம்ப காலத்தில் 6 ஆவது துடுப்பாட்ட வீரராகவே களமிறங்கிய அவர் 2012 இல் இருந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவோ அல்லது மூன்றாவது துடுப்பாட்ட வீரராகவோ களமிறங்கி 10 சதங்கள் மற்றும் 10 அரைச்சதங்கள் ஆகியவற்றினை குவித்துள்ளதுடன், அட்டகாசமாக அரைச்சதங்களினை சதங்களாக மாற்றும் திறமையினையும் கொண்டுள்ளார். இவற்றை வைத்து பார்க்கும் போது தற்போது டெஸ்ட் போட்டிகளில் 3 ஆவது களமிறங்கும் வீரர்களில் அதிசிறந்த துடுப்பாட்ட வீரர் என்னும் பட்டத்தினை இவருக்கு கொடுத்தாலும் அது மிகை ஆகாது.
உலக டெஸ்ட் தரவரிசை – 9ஆம் இடம்
உஸ்மான் கவாஜா – அவுஸ்திரேலியா
போட்டிகள் |
இன்னிங்ஸ் | ஆ.இ | ஓட்டங்கள் | அ.ஓ | சராசரி | 100 | 50 |
21 | 37 | 3 | 1537 | 174 | 45.20 | 5 |
6 |
இலங்கை அணியின் ரசிகர்களில் பலர் முதன்முறையாக அண்மையில் நடைபெற்று முடிந்த அவுஸ்திரேலியா தொடரில் கவாஜாவை முதல் தடவையாக பார்த்து இருப்பார்கள். இத்தொடரில் ரங்கன ஹேரத், தில்ருவன் பெரேரா, லக்ஷான் சந்தகன் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக கவாஜாவினால் இத்தொடரில் பெரிதாக பிரகாசிக்க முடியவில்லை எனினும், அவரது அண்மைய ஆட்டம் காரணமாக (முக்கியமாக தாயகமான அவுஸ்திரேலியாவில் ஆடிய) அவரும் முன்னர் குறிப்பிட்ட இந்திய அணியின் புஜாரா போன்று ஒரு சிறப்பான இடத்தினை அவரது அணியில் அவர் அதிகம் விளையாடிய 3 ஆவது இடத்தில் உருவாக்கி வைத்துள்ளார்.
உலக டெஸ்ட் தரவரிசை – 18ஆம் இடம்
பாபர் அசாம் – பாகிஸ்தான்
போட்டிகள் |
இன்னிங்ஸ் | ஆ.இ | ஓட்டங்கள் | அ.ஓ | சராசரி | 100 | 50 |
5 | 10 | 1 | 291 | 90* | 32.33 | 0 |
2 |
3 ஆவதாக களமிறங்கும் வீரர்களில் மிகவும் அனுபம் குறைந்த வீரராக இருக்கும் அசாம் இன்னும் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை எனினும், குறைந்த இன்னிங்ஸ்களில் விளையாடி அண்மையில் ஹெமில்டன் நகரில் நியுசிலாந்து அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் அவர் ஆட்டமிழக்காமல் பெற்று கொண்ட 90 ஓட்டங்கள் காரணமாக, பாகிஸ்தான் அணியின் தேர்வாளர்கள் தொடர்ந்தும் நடைபெற இருக்கும் போட்டிகளில் அசாமிற்கு முதல் வரிசை வீரராக விளையாட வாய்ப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக டெஸ்ட் தரவரிசை – 90ஆம் இடம்
ஹஷிம் அம்லா – தென்னாபிரிக்கா
போட்டிகள் |
இன்னிங்ஸ் | ஆ.இ | ஓட்டங்கள் | அ.ஓ | சராசரி | 100 | 50 |
97 | 164 | 13 | 7568 | 311* | 50.11 | 25 |
31 |
புஜாரா போன்று நடுத்தர வரிசை துடுப்பாட்ட வீரராக தனது கிரிக்கெட் வாழ்கையினை ஆரம்பித்த ஹஷிம் அம்லா 2006 வரை துடுப்பாட்டத்தினை ஆரம்பிக்கும் முதல் 4 நான்கு வீரர்களில் ஒருவறாக இருந்திருக்கவில்லை. இதுவரை 7500 ஓட்டங்களிற்கு மேல் பெற்றிருக்கும் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் தலைவரான அம்லா, 3 ஆவது இடத்தில் துடுப்பாடும் வீரர்களில் ஒருவராக தன்னை மாற்றி கொண்டவர் ஆவார்.
உலக டெஸ்ட் தரவரிசை – 5ஆம் இடம்
ஜோ ரூட் – இங்கிலாந்து
போட்டிகள் |
இன்னிங்ஸ் | ஆ.இ | ஓட்டங்கள் | அ.ஓ | சராசரி | 100 | 50 |
53 | 98 | 11 | 4594 | 254 | 52.80 | 11 |
27 |
நான்கு வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்து அணிக்கு அறிமுகம் ஆகியிருந்த ஜோ ரூட், மூன்று விதமான போட்டிகளிலும் இங்கிலாந்து அணிக்காக ஆடும் சிறந்த வீரர்களில் ஒருவராக ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டார். இந்த பட்டியியலில் குறிப்பிடப்பட்ட ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் போல் அல்லாது ஜோ ரூட் எந்த வரிசையிலும் (மேல் ,கீழ்) சிறப்பாக ஆடும் ஒருவராக இருந்த போதிலும், இந்த வருட ஜூன் மாதத்தில் இருந்து மூன்றாவது துடுப்பாட்ட வீரராக வந்து ஓட்டங்கள் குவிப்பதிலேயே சிறப்பாக செயற்படுகின்றார். தொடர்ச்சியாக எந்த இடத்தில் அவர் மாற்றப்படினும் அவ்விடத்தில் இருந்து இங்கிலாந்து அணியினை சீரான பாதைக்கு கொண்டு செல்லும் ஒருவராகவே அவர் காணப்படுகின்றார்.
உலக டெஸ்ட் தரவரிசை – 3ஆம் இடம்
கேன் வில்லியம்சன் – நியுசிலாந்து
போட்டிகள் |
இன்னிங்ஸ் | ஆ.இ | ஓட்டங்கள் | அ.ஓ | சராசரி | 100 | 50 |
56 | 103 | 9 | 4648 | 242* | 49.44 | 14 |
24 |
நியுசிலாந்து அணியின் தலைவராக இருக்கும் கேன் வில்லியம்சன் உலகில் தற்போது இருக்கும் வீரர்களில் கடினமான நிலைமைகளை இலகுவாக சமாளித்து அணியினை வழிநடத்துபவர்களில் கைதேர்ந்தவர். வலது கை துடுப்பாட்ட வீரரான வில்லியம்சன் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக சதம் அடித்து பெரிய விடயங்களை சாதிப்பதற்கான அடையாளங்களை அப்போதே காட்டி இருந்தார். அத்துடன், டெஸ்ட் விளையாடும் அணிகள் அனைத்திற்கும் எதிராக சதம் கடந்த (அதி வேகமாக) 13 ஆவது வீரர் என்ற பெருமையினையும் தன்னகத்தே கொண்டுள்ளார்.
உலக டெஸ்ட் தரவரிசை – 4ஆம் இடம்
டெரன் பிராவோ – மேற்கிந்தியத் தீவுகள்
போட்டிகள் |
இன்னிங்ஸ் | ஆ.இ | ஓட்டங்கள் | அ.ஓ | சராசரி | 100 | 50 |
49 | 89 | 4 | 3400 | 218 | 40.00 | 8 |
16 |
பிராவோ, தடுமாறும் துடுப்பாட்ட வரிசையினை கொண்டிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி மோசமாக இருக்கும் நிலைகளில், தனது சிறப்பான ஆட்டம் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணியின் ரசிகர்களுக்கு பல தடவைகள் ஆறுதல் அளித்திருக்கின்றார். மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் லாராவை போன்று துடுப்பெடுத்தாடும் பிராவோ, அவரது கடினமான முயற்சி மூலம் பலதடவை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சிறந்த மொத்த ஓட்ட எண்ணிக்கையை வழங்குவதில் உதவி செய்திருக்கின்றார். இன்னும் சொல்லப்போனால் தற்போதைய மேற்கிந்திய குழாமில் சிறந்த துடுப்பாட்ட வீரர் பிராவோ ஆவார்.
உலக டெஸ்ட் தரவரிசை – 29ஆம் இடம்
மொமினுல் ஹக் – பங்களாதேஷ்
போட்டிகள் |
இன்னிங்ஸ் | ஆ.இ | ஓட்டங்கள் | அ.ஓ | சராசரி | 100 | 50 |
19 | 34 | 4 | 1550 | 181 | 51.66 | 4 |
10 |
பங்களாதேஷ் அணி அழுத்ததிற்கு உள்ளாகியிருக்கும் வேளையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியில் தனது இடத்தினை உறுதியாக்கி கொண்ட மொமினுல் ஹக், கடைசியாக விளையாடிய 11 போட்டிகளிலும் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களையே பெற்றுள்ள்ளார். இவர் இதன் மூலம் முன்னர் இவ்வாறு பெற்ற விரேந்திர ஷேவாக், கௌதம் கம்பீர், Sir விவியன் ரிச்சர்ட் ஆகியோர் உடன் தனது இச்சாதனையை பகிர்ந்து கொண்டுள்ளார். இவர்களிற்கு மேலதிகமாக 12 போட்டிகளில் இச்சாதனை செய்த ஒரே வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 34 இன்னிங்ஸ்கள் வரை விளையாடியுள்ள மொமினுல் ஹக், 3 ஆவது அல்லது 4 ஆவது வீரராக மாத்திரமே களமிறங்கியுள்ளார்.
உலக டெஸ்ட் தரவரிசை – 28ஆம் இடம்
ஹெமில்டன் மசகட்சா – ஜிம்பாப்வே
போட்டிகள் |
இன்னிங்ஸ் | ஆ.இ | ஓட்டங்கள் | அ.ஓ | சராசரி | 100 | 50 |
32 | 64 | 2 | 1794 | 158 | 28.93 | 4 |
6 |
ஏனைய அணிகளை விட குறைவான டெஸ்ட் போட்டிகளினையே இதுவரை விளையாடியிருக்கும் ஜிம்பாப்வே, தனது வீரர்களிற்கு வாய்ப்புக்களை வழங்குவதில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு இருந்துள்ளது. இருப்பினும் கடந்த வருடங்களில் மசகட்சா ஜிம்பாப்வே அணியில் தனக்கென ஒரு நிலையான இடத்தினை மூன்று வகையான போட்டிகளிலும் பெற்றுக் கொண்டுள்ளதோடு அவ்வணியில் இருக்கும் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் காணப்படுகின்றார்.
உலக டெஸ்ட் தரவரிசை – 52ஆம் இடம்
இந்த வீரர்கள் பட்டியலினை சரிவர கவனித்து பார்க்கும் போது மேற்குறிப்பிட்ட துடுப்பாட்ட வீரர்கள் களமிறங்கும் நிலையினை (Position) இரண்டு காரணிகளே தீர்மானித்து இருக்கின்றன. ஒன்று அவர்கள் அனைவரும், அவர்களின் அணிகளில் முதல் மூன்று சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக இருக்கின்றனர். இரண்டு வளர்ந்து வரும் வீரர்களான பாபர் அசாம் மற்றும் மொமினுல் ஹக் ஆகியோர் எதிர்வரும் ஆண்டுகளில் அவரவர் அணிகளின் துடுப்பாட்ட வரிசையில் சிறப்பான இடத்தினை பிடிப்பார்கள் என எதிர்பார்க்க கூடியவர்களாக இருக்கின்றனர். இது இரண்டும் குசல் பெரேராவிடம் தென்படுவதாக தெரியவில்லை, இன்னும் குசல் பெரேரா எதிர்காலத்தில் சங்கக்கார, பொண்டிங் அல்லது டிராவிட் போன்றோரின் இடத்தினை பிடிப்பார் என்பதும் சந்தேகம் இப்படி இருக்கும் போது அணியில் மூன்றாவது துடுப்பாட்ட வீரராக அவரை களமிறக்குவதில் பிரயோஜனம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. இன்னும் அவரது தற்போதைய நிலையினை எடுத்து பார்க்கும் போது இலங்கை அணியின் பதினொருவர் குழாமிற்கு தகுதியான நிலையில் அவர் இருகின்றாரா என்பதும் கேள்விக்குறியே? இவற்றை எல்லாம் தீர்க்கமாக ஆராய்ந்து சரிவர இலங்கை கிரிக்கெட் சபை செயற்பட்டால் மாத்திரமே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணியில் ஏதாவது முன்னேற்றங்களை கொண்டுவர முடியும் என்பது தீர்க்கமான உண்மையாகும்.