இந்த ஆண்டுக்கான (2019) மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு திருவிழாவின், முதல் நாளுக்குரிய தடகள விளையாட்டு போட்டிகள் இன்று (28) மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இந்த விளையாட்டு திருவிழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச செயலகங்களினை சேர்ந்த வீர, வீராங்கனைகள் பங்குபற்றி தங்களது திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர்.
மாத்தறையில் கோலாகலமாக நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் தின விழா
தேசிய ஒலிம்பிக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச ஒலிம்பிக் தினம்…
இதில் ஆண்கள் பிரிவுக்கான 10000 மீற்றர் ஓட்டப்போட்டியில், B.M. இம்சாத் முதலிடம் பெற்றார். கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தினை சேர்ந்த இம்சாத் ஆண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டப் போட்டியினை நிறைவு செய்ய 51 நிமிடங்கள் 19.50 செக்கன்கள் என்ற நேரப்பதிவினை காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் பெண்கள் பிரிவுக்கான 10000 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதல் இடத்தினை மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினை சேர்ந்த T. தனோஜா பெற்றுக் கொண்டார். தனோஜா 10000 மீற்றர் ஓட்டப் போட்டியினை நிறைவு செய்ய 1 மணித்தியாலம் 12 நிமிடங்கள் 08.05 செக்கன்கள் என்ற நேரப்பதிவினை எடுத்திருந்தார்.
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தினை சேர்ந்த வசனாஞ்சலி பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பெற்றார். வசனாஞ்சலி 800 மீற்றர் ஓட்டப் போட்டியினை 2 நிமிடங்கள் 38.64 செக்கன்கள் என்ற நேரப்பதிவுடன் நிறைவு செய்திருந்தார். இதேவேளை, ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் வெல்லாவெளி பிரதேச செயலகத்தினை சேர்ந்த T. ராகவன் முதல் இடத்திற்கு சொந்தக்காரராக மாறினார். ராகவன், 800 மீற்றர் தூரத்தை 2 நிமிடங்கள் 07.94 செக்கன்கள் என்ற நேரப்பதிவுடன் முடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் ஏற்கனவே 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பெற்ற வசனாஞ்சலியே முதல் இடம் பெற்றார். வசனாஞ்சலி, 400 மீற்றர் ஓட்டத்தினை நிறைவு செய்ய இம்முறை 1 நிமிடங்கள் 07.33 செக்கன்கள் என்ற நேரப்பதிவினை காட்டியிருந்தார். அதேவேளை ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியினை களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தினை சேர்ந்த P. மிதுஷன் 54.31 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடம் பெற்றார்.
ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை சேர்ந்த C. அனுரன் முதலிடம் பெற்றார். அனுரன் 200 மீற்றர் தூரத்தை 23.99 செக்கன்கள் என்ற நேரப்பதிவுடன் முடித்தார். பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டத்தில் வவுணதீவு பிரதேச செயலகத்தை சேர்ந்த R. கஜேந்தி முதலிடம் பெற்றார். கஜேந்தி 28.29 செக்கன்களில் 200 மீற்றர் தூரத்தை முடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தெற்காசிய விளையாட்டுக்கான மரதன் ஓட்ட தெரிவுப் போட்டிகள் செப்டம்பரில்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இவ்வருடம் நடத்தவுள்ள மரதன் ஓட்டப்…
பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலிதாண்டலில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தினை சேர்ந்த P. அட்சயா முதலிடம் பெற்றார். அட்சயா, இதனை ஓடி முடிக்க 19.78 செக்கன்கள் எடுத்திருந்தார். ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி தாண்டலில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தினை சேர்ந்த K. அபினயன் முதலிடம் பெற்றார். அபினயன் 110 மீற்றர் சட்டவேலிதாண்டலை நிறைவு செய்ய 19.85 செக்கன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பல்வேறு ஓட்டப் போட்டிகளில் சிறப்பான பதிவுகளை காட்டிய களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக வீரர்கள் குழுநிகழ்ச்சிகளிலும் அசத்தலாக செயற்பட்டனர். அந்தவகையில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகம் ஆண்கள், பெண்கள் என இரண்டு வகை 4×400 மீற்றர் அஞ்சலோட்ட போட்டிகளிலும் முதலிடம் பெற்றது. இதில் ஆண்களுக்கான அஞ்சலோட்டத்தினை களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகம் 3 நிமிடங்கள் 37.62 செக்கன்கள் என்ற நேரப்பதிவுடனும், பெண்களுக்கான அஞ்சலோட்டத்தினை 4 நிமிடங்கள் 44.09 செக்கன்கள் என்ற நேரப்பதிவுடனும் முடித்துக் கொண்டது.
ஈட்டி எறிதல் நிகழ்ச்சியில் ஆண்கள் பிரிவில் செங்கலடி பிரதேச செயலகத்தினை சேர்ந்த R. ரதுசன் முதலிடம் பெற்றார். ரதுசன் 59.35 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கான ஈட்டி எறிதலில் K. தனுஜா முதலிடம் பெற்றார். வெல்லாவெளி போராதீவு பிரதேசத்தினை சேர்ந்த தனுஜா 24.07 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் முப்பாய்ச்சல் நிகழ்ச்சிகளில் மண்முனை தெற்கு பிரதேச செயலகத்தினை சேர்ந்த வீர, வீராங்கனைகள் முதலிடம் பெற்றிருந்தனர். அதில் ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்ற K. சோபாஜிதன் 13.22 மீற்றர் நீளம் பாய்ந்ததோடு, பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்ற T. சோகசேனி 10.32 மீற்றர் பாய்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உலக மெய்வல்லுனர் சம்மேளனத்திற்கு புதிய பெயரும், குறியீடும்
உலக மெய்வல்லுனர் விளையாட்டின் தாய் வீடாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற…
மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுத் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் சனிக்கிழமை (28), முதல் நாள் நிகழ்ச்சி நடைபெற்ற வெபர் மைதானத்தில் மீண்டும் இடம்பெறுகின்றது.
>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<