இலங்கை நாட்டில் உள்ள ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது, தேசிய அணியிலும் சரி, முதல்தர கிரிக்கெட் விளையாடும் உள்ளூர் கழகங்களிலும் சரி கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த வீரர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருக்கின்றது.
எனினும், தற்போது கிழக்கு மாகாண மாவட்டங்களில் ஒன்றான மட்டக்களப்பில் கிரிக்கெட்டின் வளர்ச்சி வீதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதை அவதானிக்க முடியுமாக இருக்கின்றது.
>> இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் சீருடையை அணிவதே சாருஜனின் இலக்கு
அதன் அடிப்படையில் மட்டு நகரின் தற்போதைய கிரிக்கெட் எந்த நிலையில் இருக்கின்றது என்பதை அறிவதற்காக மட்டக்களப்பு மாவட்ட தலைமை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரும், கட்டார் தேசிய அணிக்காக 12 வருடங்கள் விளையாடிய வீரருமான P.K. அன்வர்டீனுடன் ThePapare.com ஒரு நேர்காணலை மேற்கொண்டது.
அந்த நேர்காணலில் இருந்து சில துளிகள் விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ள எமது இணையதள வாசகர்களுக்காக…
கேள்வி: உங்களைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தைத் தாருங்கள்?
நான் தெற்கிலங்கையின் துறைமுக நகரமான ஹம்பாந்தொட்டையை பிறப்பிடமாகக் கொண்டவன். அங்கிருக்கும் ஸாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர்களில் ஒருவன்.
கேள்வி: உங்கள் கிரிக்கெட் ஆரம்பம் எப்படி இருந்தது?
எனது பாடசாலையின் 13 வயதுக்குட்பட்ட அணிப் பிரிவில் இருந்து கிரிக்கெட் விளையாட்டில் காலடி எடுத்து வைத்திருந்தேன். அதிலிருந்து எனது பாடசாலையின் 15, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட அணிகளில் விளையாடியிருந்தேன்.
பின்னர் 1987ஆம் ஆண்டு எங்களது காலத்திலேயே பாடசாலை மட்ட ரீதியிலான போட்டிகளில் எமது கல்லூரி விளையாடத் தொடங்கியது. 1989ஆம் ஆண்டில் பாடசாலையின் 15 வயதுக்குட்பட்ட அணியின் தலைமை பொறுப்பினை ஏற்றுக்கொண்ட நான், அதிலிருந்து தொடர்ந்து 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் எனது அணியினை தொடர்ச்சியாக சம்பியன் பட்டத்தை வெல்லும் வரையில் கொண்டு சென்றேன். இதனால், டிவிஷன் III பிரிவில் இருந்த எமது பாடசாலை, டிவிஷன் II பிரிவிற்கு தரம் உயர்த்தப்பட்டது.
கேள்வி: பாடசாலை கிரிக்கெட்டைத் தொடர்ந்து உங்களது கிரிக்கெட் வாழ்க்கை எப்படி இருந்தது?
பாடசாலையைத் தொடர்ந்து, முதல்தர அணிகளில் ஒன்றாக காணப்பட்டிருந்த சோனகர் (மூர்ஸ்) விளையாட்டுக் கழகத்தின் 23 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடும் சந்தர்ப்பம் எனக்கு கிட்டியிருந்தது. அவ்வணியில் சில காலம் விளையாடியிருந்தேன். தொடர்ந்து எனக்கு கிடைத்த வாய்ப்பொன்றின் மூலம் கட்டார் நாட்டின் தேசிய அணிக்காக விளையாடச் சென்றிருந்தேன்.
கிட்டத்தட்ட 12 வருடங்கள் வரையில் நான் கட்டார் தேசிய அணிக்காக விளையாடியதோடு, அந்நாட்டின் தலைவராகவும் ஒரு வருட காலம் செயற்பட்டிருந்தேன்.
அங்கு விளையாடிய தருணத்தில் கட்டார் பங்கேற்ற ஆசிய கிரிக்கெட் வாரிய கிண்ணம், ஐ.சி.சி இன் உலகக் கிண்ண தகுதிகான் சுற்றுப் போட்டிகள் ஆகியவற்றில் சிறப்பாக செயற்பட்டிருந்தேன்.
கேள்வி: கட்டாரில் உங்களது சாதனைகள் ஏதாவது இருக்கின்றதா?
ஆம், அங்கு இடம்பெற்ற முதல்தரப் போட்டியொன்றில் ஆட்டமிழக்காமல் 227 ஓட்டங்களைப் பெற்ற சாதனையொன்று உள்ளது. அதேபோன்று, பந்து வீச்சில் 6 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளேன்.
இவை அனைத்தும் எனக்கு அங்கு மிகப் பெரிய அனுபவத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது.
>> பயிற்றுவிப்பாளராக தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடரும் மட்டு நகர் ஜோன்சன் ஐடா
கேள்வி: ஒரு நாட்டின் தேசிய அணி வீரராக இருந்த நீங்கள் எவ்வாறு பயிற்றுவிப்பாளராக மாறினீர்கள் ?
கடந்த 2010ஆம் ஆண்டில் மீண்டும் இலங்கைக்கு வந்த நான், எனது மனைவியின் தூண்டுதல் காரணமாக கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக மாற முடிவெடுத்தேன். அந்த வகையில் பயிற்சியாளர் ஆவதற்குரிய செயற்பாடுகளை மேற்கொண்ட என்னை, மட்டக்களப்பிற்குரிய பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமனம் செய்தது.
கேள்வி: தற்பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரிக்கெட் என்ன நிலையில் இருக்கின்றது?
ஐந்து வருடங்களாக நான் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து வருகின்றேன். இந்த மாவட்டத்தில் கிட்டத்தட்ட 8 பாடசாலை அணிகள் டிவிஷன் – III தரத்தில் காணப்படுகின்றன.
அண்மைய காலங்களில் நடைபெற்ற சுற்றுத் தொடர்களில் எமது மாவட்ட மாணவர்கள் நல்ல ஆட்டத்தினை வெளிகாட்டியதை அவதானிக்க முடியுமாக இருந்தது. என்னைப் பொறுத்தவரையில் தற்போதே இங்கு கிரிக்கெட்டிற்கான ஒரு சிறந்த களம் உருவாகி வருகின்றது.
இம்மாவட்டத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு பெரும் தடையாக இருப்பது சரியான பராமரிப்புக்களுடன் கூடிய புற்தரையினைக் கொண்ட மைதானம் ஒன்று இல்லாமல் இருப்பதே. இதன் காரணமாக வீரர்கள் களத்தடுப்பு பயிற்சிகளில் ஈடுபடும் போது பாரிய சிரமத்தினை எதிர்கொள்கின்றனர்.
எனினும், தற்போது மட்டக்களப்பு கிரிக்கெட் வாரியத்தின் முயற்சிகளால், மட்டக்களப்பு வெபர் மைதானத்தின் ஒரு பகுதியில் புற்தரை வசதிகளுடன் கூடிய, கடினப்பந்திற்கான ஒரு களம் ஏற்பாடு செய்து தரப்படவுள்ளது. வரும் காலங்களில் அதன் மூலம் இம்மாவட்ட வீரர்கள் மேலும் பயனடைய முடியும் என எதிர்பார்க்கின்றேன்.
கேள்வி: மட்டக்களப்பு மாவட்ட ரீதியில் இருக்கும் பாடசாலைகளின் அடைவு மட்டங்கள் எவ்வாறு இருக்கின்றன?
பயிற்சியாளராக பொறுப்பேற்ற கணத்தில் இருந்து பாடசாலை கிரிக்கெட்டை முன்னேற்றும் நோக்கத்தினையே முதலில் கொண்டிருந்தேன். இங்கிருக்கும் பாடசாலைகளான மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மற்றும் இந்துக் கல்லூரி ஆகியவற்றின் 13 மற்றும் 17 வயதுக்குட்பட்ட அணிகள் அண்மைய பருவகாலத்திற்கான பாடசாலைச் சுற்றுத் தொடர்களில் சிறப்பாகச் செயற்பட்டு அரையிறுதி வரை முன்னேறியிருந்தன.
எனினும், இங்குள்ள பெற்றோர்கள் விளையாட்டினை விட கல்விக்கே அதிக முக்கியத்துவம் கொடுகின்ற காரணத்தினால், பாடசாலை கிரிக்கெட் வீரர்கள் 17 வயதுக்குட்பட்ட அணியுடன் தமது கிரிக்கெட் வாழ்க்கையினை முடித்துக்கொள்கின்றனர்.
>> ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் – ஒரு கண்ணோட்டம்
பெற்றோரின் ஊக்குவிப்பு கிரிக்கெட்டில் சிறக்கும் வீரர் ஒருவருக்கு எப்போதும் இருக்கும் எனில் மட்டுமே அந்த வீரரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும். அந்த வாய்ப்பினை மட்டக்களப்பு பெற்றோர்கள் தருவது மிகக்குறைவு.
மேலும், இங்கு சிறப்பாக ஆடும் வீரர்களில் யாராவது ஒருவரைத் தேர்வாளர்கள் முன்கொண்டு சென்று விளையாடவிடுகின்ற போது, புதிய வகையான சூழல் ஒன்றிற்குள் (Environment) நுழையும் அவர்களால் சரியான ஆட்டத்தினை வெளிக்காட்ட முடியாமல் போகும். இதனால், அவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியாதுள்ளது.
இவ்வாறான காரணங்களினாலேயே இங்கிருக்கும் வீரர்களுக்கு தேசிய அணியிலும், முதல்தர கழகங்களிலும் வாய்ப்புக்கள் பெறுவதற்கு மிகவும் கடினமாக இருக்கின்றது.
கேள்வி: தற்போது அங்கு சிறப்பாகச் செயற்படும் வீரர்களைப் பற்றி கூற முடியுமா?
தேசிய ரீதியில் ஒருவரையாவது கொண்டு சென்று விளையாட வைப்பதே எனது அவா. அந்த அடிப்படையில் 2013ஆம் ஆண்டில் எமது மாவட்டத்தைச் சேர்ந்த ஜோன்சன் ஐடா, கிழக்கின் முதல் மங்கையாக தேசிய அணிப் பிரவேசத்தினை பெற்றிருந்தார். அது எங்களது மாவட்டம் பெற்ற பெரும் அடைவுகளில் ஒன்று.
அதேபோன்று, தற்போது இரண்டு மூன்று இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் எம்மிடம் உள்ளனர். மணிக்கு 130 KM வேகத்திற்கு மேலாக பந்து வீசும் ஆற்றல் கொண்ட இப்படியான வீரர்களில் ஒருவரை அடுத்ததாக தேசிய அணியில் இணைப்பதே எனது இலக்கு.
புதிய ஒரு வீரரை மீண்டும் தேசிய அணிக்கு கொண்டு செல்வதற்கு எமது மாவட்ட கிரிக்கெட் வாரியமும் முழு ஒத்துழைப்பினை வழங்குவதாக உறுதி பூண்டுள்ளது. வரும் காலங்களில் ஒரு வீரரை நிச்சயம் எதிர்பார்க்க முடியும்.
கேள்வி: இறுதியாக, அனுபவம் மிக்க ஒரு கிரிக்கெட் வீரர் என்ற அடிப்படையிலும் கிரிக்கெட்டின் தற்போதைய ஆசான் என்ற வகையிலும் வீரர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
ஒரு சிறந்த விளையாட்டு வீரன் உருவாவதற்கு கடின பயிற்சியே பிரதான காரணமாக அமையும். எந்தவொரு வீரராவது இக்கட்டான நிலைகளிலும் கூட கடினமாக உழைப்பார் எனின், சிறந்த எதிர்காலத்தினை பெறுவார் என்பதில் சந்தேகம் ஏதும் கிடையாது. இந்த முயற்சியையே அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தனது வேலைப்பளுமிக்க காலப்பகுதியிலும் சிரமம் பாராது எமக்கு நேர்காணல் வழங்கிய மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான பயிற்றுவிப்பாளர் P.K. அன்வர்டீன் அவர்களுக்கு ThePapare.com சார்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.