இலங்கை கபடி அணியின் பயிற்சியாளரானார் பாஸ்கரன்

314

இலங்கை கபடி அணியின் பயிற்சியாளராக தமிழ் நாட்டைச் சேர்ந்த கே.பாஸ்கரனை நியமிக்க இலங்கை கபடி சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழா வரை கே.பாஸ்கரன் இலங்கை கபடி அணியின் பயிற்சியாளராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் கபடி லீக் ஏலத்தில் வாங்கப்பட்ட முதல் இலங்கையர் அன்வர்

இதனிடையே, தற்போது ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கை ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி பயிற்சிக் குழாம்களின் பயிற்சியாளராகவும் பாஸ்கரன் செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர் மாவட்டம் சூழியக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் தற்போது திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் வசித்து வருகிறார். இந்திய கபடி அணியின் முக்கிய வீரராகவும் பயிற்சியாளராகவும் அறியப்பட்ட இவர், குறிப்பாக, 1993 -96 ஆண்டுகளில் இந்தியாவின் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடியில் தமிழ்நாடு அணி தொடர்ந்து முதலிடம் பெற முக்கிய பங்காற்றினார்.

கடந்த 1994ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டில் ஹீரோஷிமாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கபடி அணியின் வீரராக களமிறங்கி தங்கம் வென்றார். தொடர்ந்து, 1995ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கபடி அணியின் தலைவராக களமிறங்கினார். இப்போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது.

கடந்த 1997ஆம் ஆண்டு இந்திய – இலங்கை கபடி தொடரில் இந்திய அணியின் தலைவர் பொறுப்பை ஏற்று இவர் விளையாடினார். இதில் இந்தியா முதலிடம் பெற்றது.

ஆறு நாடுகள் பங்குபற்றும் கபடி தொடர் ஒத்திவைப்பு

இதற்குமுன் இந்திய ஆண்கள் கபடி அணியின் பயிற்சியாளராக கடமையாற்றியுள்ள பாஸ்கரன், 2016இல் நடைபெற்ற உலக கபடி சம்பியன்ஷிப் தொடரிலும், 2014இல் நடைபெற்ற இந்தியன் கபடி லீக்கில் சம்பியன் பட்டம் வென்ற ஜெய்ப்பூர் பின்க் பென்தர் அணியின் பயிற்சியாளராகவும் கடமையாற்றியிருந்தார்.

இதேவேளை, தாய்லாந்து மற்றும் மலேஷியா ஆகிய நாடுகளின் பயிற்சியாளராகவும் இவர் கடமையாற்றியிருந்தார்.

இதுஇவ்வாறிருக்க, இலங்கை கபடி அணியின் பயிற்சியாளராக செயல்படும் கே.பாஸ்கரனுக்கு இலங்கை கபடி சம்மேளனத்தினால் மாதாந்தம் நான்கரை கோடி ரூபா சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<