கிளிநொச்சியில் பேஸ் போல் விளையாட்டு அறிமுகம்

266

உலகம் முழுவதிலும் பரவலாக விளையாடப்பட்டுவரும், அமெரிக்க கண்டத்தில் மிகவும் பிரபல்யமான விளையாட்டான “தளக்கட்டுப் பந்தாட்டம்” என தமிழில் அறியப்படும் பேஸ் போல் விளையாட்டு கிளிநொச்சி மாவட்டத்திற்கு அறிமுகம் செய்யயப்பட்டுள்ளது.

இலங்கை பேஸ் போல் சம்மேளனம் பேஸ் போல் விளையாட்டை நாடு பூராகவும் பிரபல்யப்படுத்தும் “அனைவரிற்கும் பேஸ் போல்” எனும் புதிய செயற்திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த செயற்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக வீர வீராங்கனைகளை இவ்விளையாட்டை , விளையாடுவதற்கு முயற்சி செய்யத்தூண்டும் வேலைத்திட்டம் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்யப்பட்டது பேஸ் போல்

கிளிநொச்சி மாவட்டத்திற்கு பேஸ் போல் விளையாட்டை அறிமுகம் செய்யும் நிகழ்வு கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. முழங்காவில் மகா வித்தியாலயம், இராமநாதபுரம் மகா வித்தியாலயம்,  தர்மபுரம் மகா வித்தியாலயம் மற்றும் கிளிநொச்சி மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 200 மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.

பேஸ் போல் விளையாட்டை வீரர்களுக்கு அறிமுகப்படுத்தும் முகமாக இராணுவப்படை விளையாட்டுக் கழகம் மற்றும் கடற்படை விளையாட்டுக் கழகம் ஆகியன காட்சிப்போட்டியொன்றில் பங்கெடுத்திருந்தன.

பேஸ் போல் அறிமுக நிகழ்வை மலிந்து ஹேவகே, அமில பத்திராஜ மற்றும் லக்ஷ்மன் ஆகியோர் வழிநடத்தியிருந்தனர். அதேவேளை, விஷேட வளவாளர்களாக ஜப்பான் நாட்டிலிருந்து வருகை தந்திருக்கக்கூடிய பயிற்றுவிப்பாளர்களான மக்கற்றோ ஹறடா மற்றும் கோய்ச்ஷி ரக்கனோ ஆகியோரும் பங்கெடுத்திருந்தனர்.

இவ்வறிமுக நிகழ்வில் இலங்கை தேசிய பேஸ் போல் சம்மேளனத்தின் தலைவர் பாசில் ஹுசைன், பொருளாளர் புபுது கொடிகார, பிரதம நிறைவேற்று அதிகாரி பிரியந்த ஏக்கநாயக்க மற்றும் பேஸ் போல் அபிவிருத்திச் செயற்பாடுகளின் தலைவர் றோமாறியோ ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

முதல் கட்டமாக மாணவர்களது விளையாட்டின் மீதான ஆர்வத்தினை அதிகரிக்கும் முகமாக, பங்கொடுத்த 4 பாடசாலைகளுக்கும் பேஸ் போல் துடுப்பு மற்றும் பந்து ஆகியன  வழங்கப்பட்டிருந்தது.

இலங்கை தேசிய பேஸ் போல் சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரியந்த ஏக்கநாயக்க கருத்து தெரிவிக்கையில் “எங்களைப் பொறுத்தவரையிர் பேஸ் போல் விளையாட்டில் நாங்கள் ஒரு நாடாக விரைவாக முன்னேற முடியும் என எதிர் பார்க்கின்றோம். அதன் அடிப்படையில் நாங்கள் இந்த விளையாட்டை நாடு பூராகவும் எடுத்துச் செல்ல உத்தேசித்திருக்கின்றோம். முதல் கட்டமாக மாணவர்கள் சகலரும் பேஸ் போலை விளையாடுவதற்கு முயற்சிக்க வேண்டும். முதலாவது வேலைத்திட்டத்தினை வடக்கிலிருந்து ஆரம்பித்திருக்கின்றோம். மாணவர்கள் பங்கெடுத்திருக்கக்கூடிய விதம் எமக்கு மிகவும் மகிழ்வினைத் தந்தது. அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கெடுத்திருந்தனர்.

கிராமங்களிலிருக்கக் கூடிய திறமையான வீரர்களை அடையாளம் காண்பதே எமது நோக்கம், அடுத்தடுத்த கட்டங்களில் பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவிக்கவிருக்கின்றோம். நாடுபூராகவுமிருந்து திறமையான வீரர்களை உருவாக்கி மிகச்சிறந்த தேசிய வீரர்களை உருவாக்குவதே எமது நோக்கம்.”

தர்மபுரம் மகா வித்தியாலய ஆசிரியர் ரவீந்திரகுமார் “மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பேஸ் போலை விளையாடுகின்றனர். பேஸ் போலிற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் சகல வசதிகளும் தொடர்ச்சியாக கிடைக்குமாயின், எமது கிளிநொச்சி மாவட்டத்தில் மிகச்சிறந்த பேஸ் போல் அணியினை மிகவும் குறுகிய காலத்தில் உருவாக்க முடியும் என நம்புகின்றேன்.

இப்ராஹிம் ஜிமோஹ்வின் ஹெட்ரிக் கோலால் பெலிகன்ஸை வீழ்த்திய ரினௌன்

எமது வீரர்கள் தேசிய ரீதியில் சாதிப்பதற்கும் இந்த விளையாட்டு இலகுவான வழியாக இருக்கும் என நம்புகின்றேன்“ என கிளிநொச்சியில் பேஸ் போலின் எதிர்காலம் குறித்து தெரிவித்தார்.

  • சகலருக்கும் பேஸ் போல் (“Baseball for all”)

உலகம் முழுவதிலும் பரவலாக விளையாடப்பட்டு வருகின்ற பேஸ் போல் அமெரிக்க கண்டத்தில் மிகப்பிரபல்யமான விளையாட்டாகும்.

அணிக்கு தலா 9 பேர் கொண்டு பந்து மற்றும் துடுப்பினை பயன்படுத்தி விளையாடப்படும் இந்த விளையாட்டு இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டதாக அறியப்பட்டாலும், குடியேறிகள் மூலமாக அமெரிக்க கண்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நவீன பேஸ் போல் அமெரிக்காவிலேயே வளர்ச்சியுற்றது.  

இலங்கையில் 1985ஆம் ஆண்டு முதல் தேசிய ரீதியிலான சுற்றுப்போட்டி வருடாருடம் இடம்பெற்று வருகின்றது. பேஸ் போல் முக்கோண வலயம் என அறியப்படும் கொழும்பு, கண்டி மற்றும் காலி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் பரவலாக இந்த விளையாட்டு விளையாடப்பட்டு வருகின்றது. இலங்கை பேஸ் போல் சங்கம் இந்த விளையாட்டினை நாடுபூராகவும் பிரபல்யப்படுத்தும் நோக்கிலேயே “சகலருக்கும் பேஸ் போல்” என்ற இந்த செயற்திட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் தேசிய ரீதியிலான திறந்தபோட்டி, பல்கலைகழகங்களுக்கு இடையிலான போட்டி மற்றும் பாடசாலைகளுக்கிடையிலான போட்டி என பல தரப்பட்ட சுற்றுப்போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றது. இலங்கை தேசிய அணி ஆசிய சம்மேளன சுற்றுத்தொடர்களில் பங்கெடுப்பதுடன் பதக்கங்களையும் வென்று வருகின்றது.

“சகலருக்கும் பேஸ் போல்” வேலைத்திட்டத்தின் அடுத்த கட்டமாக பயிற்றுவிப்பாளர்கள் பயிற்றுவிக்கப்படவிருக்கின்றனர், எதிர்கால வீரர்களை உருவாக்குவதனை நோக்காக கொண்டு இந்த செயற்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

 மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க