இவ்வாண்டுக்கான சிறந்த மெய்வல்லுனர் வீரருக்கான விருதை கட்டார் நாட்டைச் சேர்ந்த உயரம் பாய்தல் வீரரான முடாஸ் ஈசா பர்ஸிம் பெற்றுக்கொண்டார். இதன்படி உலக மெய்வல்லுனர் வரலாற்றில் முதற்தடவையாக ஆசிய நாட்டைச் சேர்ந்த வீரரொருவர் இவ்விருதை தட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
மெய்வல்லுனர் சம்மேளனங்களின் சர்வதேசக் கூட்டமைப்பின் (IAAF) மெய்வல்லுனர் விருதுகள் வழங்கும் விழா மொனோக்கோவில் நேற்று (24) மிக விமர்சையாக நடைபெற்றது.
இதன்படி, வருடத்தின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீரர் மற்றும் வீராங்கனைக்கான மூவரடங்கிய பெயர்ப்பட்டியல் இம்மாத முற்பகுதியில் வெளியிடப்பட்டது. இதில் அதி சிறந்த வீரருக்கான பட்டியலில், தென்னாபிரிக்காவின் ஓட்ட வீரர் வெய்ட் வான் நிக்கரெக், பிரித்தானியாவைச் சேர்ந்த நெடுந்தூர ஓட்ட வீரர் மோ. புராஹ், மற்றும் கட்டாரின் உயரம் பாய்தல் வீரர் முடாஸ் ஈஸா பர்ஸிம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
லண்டனில், கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற மெய்வல்லுனர் சம்மேளனங்களின் சர்வதேசக் கூட்டமைப்பின் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில், தங்கப்பதக்கம் வென்று, இவ்வருடம் நடைபெற்ற டயமண்ட் லீக் உள்ளிட்ட அனைத்து சர்வதேசப் போட்டிகளிலும் 11 தங்கப்பதக்கங்களை தட்டிச் சென்ற கட்டாரைச் சேர்ந்த 26 வயதான முடாஸ் ஈசா பர்ஸிம், வருடத்தின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீரருக்கான விருதைப் பெற்றுக்கொண்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன் ஆசிய சிறந்த மெய்வல்லுனர் வீரருக்கான விருதையும் அவர் பெற்றுக்கெண்டார்.
இந்நிலையில், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற அராபிய விளையாட்டு விழாவில் தங்கம் வென்ற முடாஸ், அதே வருடம் நடைபெற்ற உலக இராணுவ மெய்வல்லுனரில் தங்கப்பதக்கம் வென்றார். அதனைத் தொடர்ந்து 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற அவர், 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் மற்றும் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் தங்கப்பதக்கங்களை வென்றிருந்தார். அத்துடன் கடந்த வருடம் நடைபெற்ற றியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற முடாஸ், இம்முறை உலக மெய்வல்லுனரில் முதற்தடவையாக தங்கப்பதக்கமும் வென்று கொடுத்தார்.
எனினும், உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம், 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த தென்னாபிரிக்காவின் வான் நிக்கரெக் மற்றும் அதே போட்டித் தொடரில், 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம், 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்த மோ பராஹ் ஆகிய வீரர்களை பின்தள்ளி முடாஸ் இந்த விருதைப் பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
புதிய சாதனை நிலைநாட்டிய மாற்றுத்திறனாளி ஹேரத்
இதேவேளை, ஆண்டின் சிறந்த மெய்வல்லுனர் வீராங்கனைக்கான விருதை ஏழு அம்ச நிகழ்ச்சிகள் உலக சம்பியனான பெல்ஜியத்தைச் சேர்ந்த நபிசாட்டு தியாம் (Nafissatou Thiam) பெற்றுக்கொண்டார். கொட்சிஸ் ஹைப்போ போட்டியில் 7,013 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டதன் மூலம் குறித்த நிகழ்ச்சி வரலாற்றில் அதிகூடிய 3ஆவது புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட வீராங்கனையாகவும் அவர் புதிய மைல்கல்லை எட்டியிருந்தார்.
இந்நிலையில், குறித்த குறும்பட்டியலில், பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் உலக சம்பியனான கிரேக்க நாட்டைச் சேர்ந்த 23 வயதான கடெரினி ஸ்டெபானிடி மற்றும் பெண்களுக்கான 10 ஆயிரம், 5 ஆயிரம் ஓட்டப் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வென்ற எத்தியோப்பியாவைச் சேர்ந்த நெடுந்தூர ஓட்ட வீராங்கனையான அல்மாஸ் அயானா இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இவ்வருடம் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் போட்டிகளுடன் சர்வதேச மெய்வல்லுனர் அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற ஜமைக்காவின் உசைன் போல்ட்டை கௌரவிக்கும் வகையில் தலைவர் விருதும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், வருடத்தின் வளர்ந்துவரும் மெய்வல்லுனர் வீரராக இம்முறை உலக மெய்வல்லுனரில் ஆண்களுக்கான 400 மீற்றர் தடை தாண்டலில் தங்கப்பதக்கம் வென்ற நோர்வே நாட்டைச் சேர்ந்த 21 வயதுடைய கார்ஸ்டென் வோர்ஹோம் தெரிவானார்.
வருடத்தின் வளர்ந்து வரும் மெய்வல்லுனர் வீராங்கனைக்கான விருதை இவ்வருடம் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பெண்களுக்கான முப்பாய்ச்சலில் தங்கம் வென்ற வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்த 22 வயதுடைய யூலிமார் ரோஜாஸ் பெற்றுக்கொண்டார். இவர் கடந்த வருடம் நடைபெற்ற றியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, இம்முறை விருது வழங்கும் விழாவில் அனைவரது கவனத்தை ஈர்த்த விருதாக வருடத்தின் அதி சிறந்த மெய்வல்லுனர் பயிற்சியாளருக்கான விருது இடம்பெற்றிருந்தது. இவ்விருதை 76 வயதான தென்னாபிரிக்க நாட்டைச் சேர்ந்த ஏன்ஸ் போதா பெற்றுக்கொண்டதுடன், இவ்விருதை தட்டிச் சென்ற முதல் பெண்ணாகவும் அவர் வரலாற்றில் இடம்பிடித்தார்.
ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் உலக சாதனையை தன்னகத்தே வைத்திருந்த அமெரிக்காவின் மைக்கல் ஜொன்சனின் சாதனையை சுமார் 17 வருடங்களுக்குப் பிறகு தென்னாபிரிக்காவைச் சேர்ந்த வான் நிக்கரெக் கடந்த வருடம் நடைபெற்ற றியோ ஒலிம்பிக்கில் முறியடித்ததுடன், ஒலிம்பிக் வரலாற்றில் தென்னாபிரிக்க அணி பெற்ற முதல் தங்கமாகவும் அது அமைந்தது. அத்துடன் இவ்வருடம் நடைபெற்ற உலக மெய்வல்லுனரில் அவர் குறித்த போட்டியில் தங்கப்பதக்கமும் வென்றார். இவ்வாறான திறமைகளை வெளிப்படுத்துவதற்கு காரணமாக இருந்த அவருடைய சிறுபராய பயிற்றுவிப்பாளரான ஏன்ஸ் போதாவுக்கு இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த 5 தசாப்தங்களாக பயிற்சியாளராக, அதுவும் பெண் பயிற்சியாளராக் கடமையாற்றி வருகின்ற ஏன்ஸ் போதா, தனது வெற்றிப்பயணம் குறித்து கருத்து வெளியிடுகையில், ”ஒரு பெண்ணாக மட்டுமல்லாது, ஒரு தாயாக மற்றும் பயிற்சியாளராகக் கடமையாற்றுவதென்பது மிகவும் சவாலான விடயமாகும். எனினும் எமது தனிப்பட்ட கனவுகளை துறந்துவிட்டு 100 சதவீதம் அர்ப்பணிப்புடன் பணியாற்றினால் நிச்சயம் எமது வீரர்களின் கனவை நனவாக்க முடியும்” எனத் தெரிவித்தார்.