ஸ்பெயினின் முன்னணி கால்பந்து தொடரான லாலிகா தொடரின் இந்த பருவகாலத்திற்கான (2022/23) சம்பியன்களாக, பிரபல பார்சிலோனா அணி மகுடம் சூடிக்கொண்டுள்ளது. இது அவ்வணி வெல்லும் 27ஆவது லாலிகா சம்பியன் கிண்ணமாகும்.
லீக் போட்டிகள் முடிவடைய தமக்கு இன்னும் நான்கு போட்டிகள் எஞ்சியிருக்கும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற 34ஆவது வாரத்திற்கான போட்டியில் ஸ்பான்யோல் கால்பந்து அணியை 4—2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டதன்மூலமே பார்சிலோனா அணியினர் தம்மை சம்பியன்களாக உறுதி செய்துகொண்டுள்ளனர்.
- பார்சிலோனா மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு ரியல் மெட்ரிட் ஆதரவு
- கடற்படையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய இராணுவப்படை
- றினோன் தலைவர் கிண்ணம் ஸாஹிரா கல்லூரி வசம்
- பிரேசிலை வீழ்த்தி மொரோக்கோ வரலாற்று வெற்றி
பயென் முனிச் முன்னாள் வீரரான போலந்தின் ரொபேர்ட் லெவண்டொஸ்கி 2 கோல்களையும், Balde மற்றும் Jules Kounde ஆகியோர் தலா ஒரு கோலையும் இந்தப் போட்டியில் பாசிலோனோ அணிக்காக பெற்றுக் கொடுத்தனர்.
எனினும், போட்டியின் பின்னர் மைதானத்தில் சம்பியனாகியதை கொண்டாடிக்கொண்டிருந்த பார்சிலோனா வீரர்களை ஸ்பான்யோல் ரசிகர்கள் தாக்குவதற்காக மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர். எனினும், வீரர்கள் அங்கிருந்து அரங்கிற்கு உள்ளே அனுப்பப்பட்ட அதேவேளை, மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர்கள் பொலிஸாரினால் தடுக்கப்பட்டனர்.
இந்த பருவத்திற்கான தொடரில் இதுவரை 34 போட்டிகளில் விளையாடியுள்ள பார்சிலோனா வீரர்கள் 27 வெற்றிகள், 4 சமநிலையான முடிவுகள் மற்றும் 3 தோல்விகளுடன் 85 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
முன்னாள் சம்பியன்களாக ரியல் மெட்ரிட் அணி 34 போட்டிகளின் நிறைவில் 22 வெற்றிகள், 5 சமநிலையான முடிவுகள் மற்றும் 7 தோல்விகளுடன் 71 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ள அதேவேளை, அட்லெடிகொ மெட்ரிட், ரியல் சொசைடட் ஆகிய அணிகள் முறையே 3ஆம், 4ஆம் இடங்களில் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார மற்றும் நிர்வாக நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வந்த பார்சிலோனா அணிக்கு இந்த சம்பியன் கிண்ண வெற்றியானது, கழகத்தின் மீள்எழுச்சிக்கு முக்கிய திருப்பு முனையாக அமையும் என்று பல விமர்சகர்களாலும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
அதேபோன்று, பார்சிலோனா அணியின் முன்னணி வீரரும் முன்னாள் தலைவருமான லியொனல் மெஸ்ஸி அந்த கழகத்தில் இருந்து விலகியதன் பின்னர் பார்சிலோனா அணி வெல்லும் முதலாவது லாலிகா கிண்ணம் இதுவாகும்.
அதேபோன்று, பயிற்றுவிப்பாளர் Xavi Hernandez பார்சிலோனா அணியினை கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பொறுப்பேற்ற பின்னர் அவ்வணி வெல்லும் மிகப் பெரிய கிண்ணமும் இதுவாகும்.
>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<