மெஸ்ஸியுடனான முறுகலை அடுத்து பார்சிலோனா தலைவர் ராஜினாமா

275
Barcelona president resigns

பார்சிலோனா கழகத் தலைவர் ஜோசப் மரியா பார்டோமியு அவரது ஒட்டுமொத்த நிர்வாக சபையுடன் பதவி விலகியுள்ளார். அவரை பதவி விலகும்படி சுமார் 20,000 பார்சிலோனா ரசிகர்கள் கைகொய்யப்பமிட்டு மனுத்தாக்கல் செய்த நிலையிலேயே இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் பார்டோமியு அடுத்த மாதம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு ஒன்றுக்கு முகம்கொடுக்க வாய்ப்பு இருந்தது. அதனை தவிர்ப்பதாகவும் இந்த ராஜினாமா அமைந்தது.

>> பார்சிலோனா அணியில் பயிற்சிக்குத் திரும்பினார் மெஸ்ஸி

“எனது பணிப்பாளர்களுடன் நான் தீர்மானிக்கப்பட்ட மற்றும் அமைதியான இந்த முடிவுக்கு வந்தோம்” என்று பார்டோமியு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஸ்பெயின் கழகத்திற்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு அடுத்த  மூன்று மாதங்களுக்குள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை இடைக்கால சபை ஒன்றே நிர்வாக நடவடிக்கையில் ஈடுபடும்.   

பார்டோமியு கடந்த ஆறு ஆண்டுகளாக பார்சிலோனா கழகத்தை தனது கட்டுப்பாடில் வைத்திருந்தார். அந்தக் காலப் பகுதியில் அந்த அணி 2015 இல் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கை வென்றதோடு கோப்பா டெல் ரே பட்டத்தை 2015 தொடக்கம் 2018 வரை தொடர்ச்சியாக ஐந்து முறையும் நான்கு லா லிகா பட்டங்களையும் வென்றது.

Watch – வயதாகிய மெஸ்ஸிக்கு மத்தியில் ANSU FAT சாதனை | FOOTBALL ULAGAM 

எனினும் பார்சிலோனா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கும் பார்டோமியுவுக்கும் இடையிலான முறுகல் அண்மைக்காலத்தில் அதிகரித்து காணப்பட்டது. இது மெஸ்ஸி அந்தக் கழத்தில் இருந்து வெளியேறுவதற்கான அழுத்தத்தையும் அதிகரித்தது. 

தவிர பார்சிலோனா கழகம் அண்மைக்காலத்தில் சோபிக்கத் தவறி இருப்பது மற்றும் நிதி நெருக்கடியும் பார்டோமியு மீதான அதிருப்தியை அதிகரிக்கக் காரணமானது.  

“(பார்டோமியு) தனது வார்த்தைகளை கடைப்பிடிப்பதில்லை” என்று மெஸ்ஸி கடந்த செப்டெம்பரில் வழங்கிய பேட்டி ஒன்றில் குற்றம்சாட்டி இருந்தார்.

கடந்த பருவத்தில் கழகம் 97 மில்லியன் யூரோ இழப்பை சந்தித்து கடன் சுமை 488 யூரோவாக அதிகரித்திருப்பதாக பார்சிலோனா இந்த மாத ஆரம்பத்தில் கூறியிருந்தது. 

>> கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு கொவிட் தொற்று

இந்நிலையில் நிதி நிலையை பலப்படுத்தும் வகையில் பார்சிலோனா கழகம் எதிர்காலத்தில் ஐரோப்பிய சுப்பர் லீக்கில் பங்கேற்க, கடந்த திங்கட்கிழமை பதவி விலகும் முன் பார்டோமியு ஒப்புதல் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

லா லிகாவில் பார்சிலோனா தற்போது 12 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பார்டோமியு கழகத் தலைவராக இருக்கும்போது கடைசியாக கடந்த சனிக்கிழமை பார்சிலோனா, தனது போட்டி அணியான ரியல் மெட்ரிட்டை எல் க்லெசிக்கோ மோதலில்  எதிர்கொண்டு 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.   

இந்நிலையில் பார்டோமியுவின் ராஜினாமா மெஸ்ஸியின் எதிர்கால முடிவில் தாக்கம் செலுத்த வாய்ப்புகள் உள்ளன.  அவர் அடுத்த பருவத்தில் கழகத்தை விட்டு வெளியேறும் முடிவிலேயே தற்போது இருந்து வருகிறார்.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<