ஸ்பெயினின் லா லிகா கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் பார்சிலோனா அணி 2017-18 லீக் பருவத்தில் இதுவரை 33 போட்டிகளில் பங்கேற்றிருக்கும் நிலையில் இன்னும் தோல்வியை சுவைக்காத அணியான நீடித்து வருகிறது.
இதன் மூலம் இந்த கால்பந்து லீக் வரலாற்றில் தோல்வியுறாத நீண்ட ஆரம்பத்தை பெற்ற அணியாக பார்சிலோனா புதிய சாதனை படைத்துள்ளது.
பார்சிலோனா அணி செவ்வாய்கிழமை (17) நடந்த செல்டா விகோவுடனான பரபரப்பான போட்டியை 2-2 என்ற கோல்கள் கணக்கில் சமநிலை செய்ததை அடுத்தே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
பார்சிலோனா அணி எதிர்வரும் சனிக்கிழமை செவில்லா அணியுடன் கோபா டெல் ரே தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடவிருப்பதால் இந்த போட்டியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பல மாற்றங்களுடனேயே களமிறங்கியது.
லியோனல் மெஸ்ஸி மற்றும் லுயிஸ் சுவரெஸ் ஆகியோருக்கு பதிலாக கெரார்ட் பிகு மற்றும் அன்ரேஸ் இனிஸ்டாவுடனே பார்சிலோனா போட்டியை ஆரம்பித்தது. ஒஸ்மான் டெம்பலே முதலாவது கோலைப் போட்டு பார்சிலோனாவை முன்னிலை செய்தபோதும் 10 நிடங்களுக்குள் செல்டா விகோ பதில் கோல் புகுத்த முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலை பெற்றது.
சாப் கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் மாலைதீவுகளுடன் மோதவுள்ள இலங்கை
இரண்டாவது பாதியிலும் இதே நிலையே ஏற்பட்டது. 64 ஆவது நிமிடத்தில் பகோ அல்கசர் பார்சிலோனாவுக்காக கோல் புகுத்த கடைசி நேரத்தில் செல்டா விகோ அணிக்காக இயகோ அஸ்பஸ், பதில் கோல் போட்டார்.
இதன்படி பார்சிலோனா அணி 2017-18 பருவத்தில் 25 வெற்றிகள் மற்றும் எட்டு போட்டிகள் சமநிலை என 33 போட்டிகளில் தோல்வியுறாமல் உள்ளது.
இதன் மூலம் பார்சிலோனா அணி 38 ஆண்டுகள் சாதனை ஒன்றை முறியடித்துள்ளது. 1979-80 பருவத்தில் ரியல் சொசீடாட் அணி 32 போட்டிகளில் தோல்வியுறாத அணியாக இருந்ததே இதுவரை காலமும் சாதனையாகும்.
மெஸ்ஸியின் பார்சிலோனா அணிக்கு இன்னும் ஐந்து லீக் போட்டிகளே எஞ்சியிருக்கும் நிலையில் லா லிகா வரலாற்றில் ஒட்டுமொத்த போட்டிகளிலும் தோல்வியுறாத முதல் அணியாக சாதனை படைக்க அதற்கு அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எனினும் பார்சிலோனா விளையாடவிருக்கும் அந்த ஐந்து போட்டிகளில் மே 6 ஆம் திகதி கேம்ப் நூவில் நடைபெறவிருக்கும் ரியல் மெட்ரிட் உடனான இரண்டாவது கிளாசிகோ போட்டி சவால் மிக்கதாகும்.
எனினும் இந்த கிளாசிக்கோ போட்டியின் முடிவு எவ்வாறு இருந்தபோதும் பார்சிலோனா லா லிகா சம்பியன் பட்டத்தை வெல்வது பெரும்பாலும் உறுதியாகிவிட்டது.
லா லிகா புள்ளிப்பட்டியலில் பார்சிலோனா இரண்டாவது இடத்தில் இருக்கும் அல்டெடிகோ மெட்ரிட் கழகத்தை விடவும் 12 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.