அதிரடி மாற்றங்களுக்கு தயாராகும் பார்சிலோனா கழகம்

179
FC Barcelona

பார்சிலோனா கழகத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டு அதன் ஆறு பணிப்பாளர்கள் கடந்த வாரம் பதவி விலகிய நிலையில் சபையை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளை அந்தக் கழகம் மேற்கொண்டு வருகிறது.

கழகத்தின் நான்கு துணைத் தலைவர்களில் இருவரான எமிலி ரௌசவுண்ட் மற்றும் எம்ரிக் டொபாஸ் ஆகியோரும் பதவி விலகியவர்களில் உள்ளனர். இவர்களின் இராஜினாமா கடிதம் ஸ்பெயின் ஊடகங்களில் கடந்த வெள்ளிக்கிழமை (10) வெளியானது.  

போர்த்துக்கல் வீரர்களை நன்கொடை செய்ய தூண்டிய ரொனால்டோ

போர்த்துக்கல் அணி ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி

இதில் பணிப்பாளர்களான சில்வியோ எலியஸ், ஜோசெப் பொன்ட், ஜோர்டி கல்ஸ்மிக்லியா மற்றும் மரியா டெக்சிடோர் ஆகியோரும் தமது பதவியை இராஜினாமா செய்தனர்.

பதவி விலகிய பணிப்பாளர்கள் கழகத்தின் சமூக ஊடக ஊழல் விவகாரத்தை கையாள்வது தொடர்பில் விமர்சனங்களை வெளியிட்டதோடு கொவிட்-19 தொற்றின் தாக்கத்தை கையாளும் குழுவின் திறன் குறித்த சந்தேங்களை வெளியிட்டுள்ளனர். இந்த வைரஸ் தொற்றுக் காரணமாக பார்சிலோனா வீரர்கள் தமது ஊதியத்தை 70 வீதம் குறைக்கவும் இணங்கியமை குறிப்பிடத்தக்கது.   

இந்நிலையில் பொருளாதாரம் மற்றும் சமபங்கிற்கான துணைத் தலைவராக ஜோர்டி மோயிக்ஸ், நிறுவனத் துணைத் தலைவராக பவு விலனோவா, வர்த்தகப் பகுதியின் உப தலைவராக ஓரியோல் தோமஸ், குழுச் செயலாளராக மார்டா ப்ளானா மற்றும் பொருளாளராக டேவிட் பெல்வர் ஆகியோரை நியமிப்பதற்கு நிறைவேற்றுக் குழு ஒப்புதல் அளித்திருப்பதாக பார்சிலோனா கழகம் அறிவித்துள்ளது.  

பிரதான கால்பந்து அணிக்கு பொறுப்பான முகாமையாளராக ஜவியேர் போர்டஸ் இருப்பார் என்பதோடு பார்சிலோனா B, இளையோர் அணி மற்றும் பெண்கள் கால்பந்து அணிக்கு பொறுப்பாக எக்சாவிர் விலஜோனா இருப்பார் என்று பார்சிலோனா வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.  

ரௌசவுன்ட் சுமத்திய குற்றச்சாட்டுகள் கழகத்தின் நற்பெயருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தக் கழகம் குறிப்பிட்டுள்ளது

பார்சிலோனா கழகத்தின் கூடைப்பந்து அணிக்கான பொறுப்பாளரான ஜோன் பிளேட் தற்போது கழகத்தின் கட்டுப்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மை குழுவை நிர்வகிப்பவராகவும் செயற்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

பதவி விலகிய பணிப்பாளர்கள் தலைமைப் பதவிக்கான வாக்கெடுப்பை நடத்தும்படி தலைவர் ஜோசெப் மரியா பார்டோமியுவிடம் கேட்டிருப்பதோடு பார்சிலோனாவின் சமூக ஊடகத்தை கண்காணிப்பதற்கு இந்த ஆண்டு ஆரம்பத்தில் I3 என்ற மூன்றாம் தரப்பு நிறுவனம் ஒன்றை பணியமர்த்தியதற்கு அதிருப்பியை வெளியிட்டுள்ளனர்.  

எதிர்கால தலைமை வேட்பாளர்களுக்கு கலங்கம் ஏற்படுத்துவதற்கு சமூக ஊடகத்தை பயன்படுத்தியது மற்றும் முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்களின் ஒப்பந்தத்தை ரத்துச் செய்தது தொடர்பான குற்றச்சாட்டுகளை பார்டோமியு மறுத்துள்ளார். I3 நிறுவனமும் தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.      

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க