மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் அம்பாரை மாவட்ட கால்பந்தாட்ட சங்கம் நடாத்தும் ”பறக்கத் டெக்ஸ் மின்னொளி கால்பந்தாட்ட சமர்-2017” சுற்றுப் போட்டியின் அரையிறுதிப் போட்டிகள் மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் நேற்றிரவு (12) இடம்பெற்றன.
முதலாவது அரையிறுதி – ஒலிம்பிக் எதிர் ப்ரில்லியன்ட்
முதலாவது அரையிறுதிப் போட்டி 8.30 மணிக்கு மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழக அணிக்கும், கல்முனை ப்ரில்லியன்ட் அணிக்குமிடையில் இடம்பெற்றது.
போட்டியை நடாத்தும் அணி என்பதுடன் தனது சொந்த மைதானத்தில் விளையாடுவதால் ஒலிம்பிக் அணிக்கு ரசிகர்களின் பலமான ஆதரவு மைதானத்தில் காணப்பட்டது. அதேபோன்று அயல் பிரதேசதம் என்பதால் ப்ரில்லியன்ட் அணிக்கும் கூடுதலான ரசிகர்கள் கல்முனையிலிருந்து வருகை தந்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.
போட்டி ஆரம்பமாகி 9ஆவது நிமிடத்தில் ப்ரில்லியன்ட் அணியின் நட்சத்திர வீரா் எம்.சி. ஹாறூன் வலது பக்கத்திலிருந்து பரிமாற்றிய பந்தைப் பெற்றுக்கொண்ட என்.எம்.எம். ஜெசா ஒலிம்பிக் அணியின் பின்கள வீரர்கள் இருவரைத் தாண்டி பந்தை கோல் கம்பத்தை நோக்கி உதைத்தபோது கோல் காப்பாளர் பர்சான் பந்தைத் தடுக்க முற்பட்டார். எனினும் அது பலனளிக்காமல் போக முதலாவது கோலை ப்ரில்லியன்ட் அணி பெற்றது.
ஒரு கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெற்ற ப்ரில்லியன்ட் அணி மிகுந்த உற்சாகத்துடன் ஒலிம்பிக் அணியின் கோல் எல்லைக்குள் பந்துகளை நகர்த்திய போதிலும் ஒலிம்பிக் அணியின் பின்கள வீரா்கள் அதைத்தடுத்து நிறுத்தினர். போட்டியின் 35ஆவது நிமிடத்தில் மிக இலகுவாக கோல் போடும் வாய்ப்பு ப்ரில்லியன்ட் அணிக்கு கிடைத்தபோது சௌஜான் அடித்த பந்து கோல் கம்பத்திற்கு வெளியே சென்றது.
ஒலிம்பிக் கழக வீரா் பஸ்றுன் வலது பக்கத்திலிருந்து கோல் கம்பத்தை நோக்கி அடித்த பந்தைப் பிடிப்பதற்காக கோல் காப்பாளர் சப்ராஸ் முன்னால் பாய்ந்தபோது பந்து அவரது கையில் சிக்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் ஒலிம்பிக் கழக வீரா் ஜாவீத் தலையால் முட்டி கோல் போடுவதற்கு முயற்சித்தபோதும் பந்து அவரையும் ஏமாற்றி கோல் கம்பத்திற்கு வெளியில் சென்றது.
போட்டியின் 39ஆவது நிமிடத்தில் ஒலிம்பிக் அணிக்குக் கிடைத்த ப்ரீ கிக்கை பாஜீஸ்கான் அடித்தபோது கோல் கம்பத்திற்கு அருகில் நின்ற ஒலிம்பிக் வீரா் அயாஸ் முகம்மட் தலையினால் முட்டி கோல் பெற்றார். இந்த சந்தர்ப்பத்தில் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மிகுந்த கரகோசத்தை வெளிப்படுத்தினர். இந்த கோல் மூலம் 1 – 1 என்ற அடிப்படையில் போட்டி தொடர்ந்தும் விறுவிறுப்பாக இடம்பெற்றது. போட்டியின் முதல் பாதி முடிவடையும் போது இரண்டு அணிகளும் சமநிலையில் காணப்பட்டது.
முதல் பாதி: ப்ரில்லியன்ட் விளையாட்டுக் கழகம் 1 – 1 ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம்
இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பமாகி 55ஆவது நிமிடத்தில் ப்ரில்லியன்ட் வீரா் ஹாறூன் இடது பக்கத்திலிருந்து கொடுத்த பந்தைப் பெற்ற சௌஜான் கோல் கம்பத்தை நோக்கி அடித்தபோது இரண்டாவது கோலையும் ப்ரில்லியன்ட் அணி பெற்றது. இதன் மூலம் பிர்ளியன்ட் அணி 2 -1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் மீண்டும் முன்னிலை பெற்றது.
பறக்கத் டெக்ஸ் மின்னொளி கால்பந்தாட்ட சமர்-2017 முதல் சுற்று முடிவுகள்
மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் அம்பாரை…
ப்ரில்லியன்ட் அணியின் சந்தோசம் நீடிக்கவில்லை. அடுத்த ஒரு நிமிடத்திற்குள்ளேயே ஒலிம்பிக் கழக வீரா் பயாஸ் வேகமாக அடித்த பந்து நட்சத்திர வீரா் எம்.ஏ. ஜெரீத்திடம் கிடைத்தபோது தனது இடது காலால் ஜெரீத் உதைபந்தபோது இரண்டாவது கோலை ஒலிம்பிக் கழகம் பெற்று 2 -2 என்ற கோல்கள் அடிப்படையில் போட்டியை சமப்படுத்திக் கொண்டது.
போட்டியின் முழு நேர முடிவில் இரண்டு அணிகளும் கோல்கள் அடிப்படையில் சமநிலையில் காணப்பட்டதால் பெனால்டி வழங்கப்பட்டது.
முழு நேரம்: பிர்ளியன்ட் விளையாட்டுக் கழகம் 2 – 2 ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம்
பெனால்டி உதையில் 3 – 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் கல்முனை ப்ரில்லியன்ட் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.
கோல் பெற்றவர்கள்
ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் – பயாஸ், சப்னி
ப்ரில்லியன்ட் விளையாட்டுக் கழகம் – எம்.சி.ஹாறூன், ஜனூன், ஜே.எம்.ஹினாஸ்
இப்போட்டிக்கு பிரதம மத்தியஸ்தராக ஏ. பைசர் மற்றும் துணை மத்தியஸ்தர்களாக ஏ. றிசாட், எஸ்.எம். உபைதீன், நான்காவது நடுவராக எம்.ஏ.எம். ரிசாட், போட்டி ஆணையாளராக ஜே.பாட்சா ஆகியோரும் கடமையாற்றினர்.
வெற்றி பெற்ற ப்ரில்லியன்ட் விளையாட்டுக் கழகத்தின் பயிற்றுவிப்பாளர் எஸ்.எல்.எம். பழீழ் கருத்துத் தெரிவிக்கும்போது, ”பலமான அணியுடன் போட்டியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியடைகின்றோம். வீரா்களின் வேகமான ஆட்டம் இன்று வெளிப்பட்டது. இறுதிப் போட்டியில் கிண்ணத்தைக் கைப்பற்றுவோம்” என்றார்.
ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் பயிற்றுவிப்பாளர் யு.எஸ். சமீம் கருத்துத் தெரிவிக்கும்போது, ”வீரா்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும், பெனால்டி உதைப்பதில் விட்ட சில தவறுகள் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அண்மைக் காலத்தில் முக்கிய கிண்ணங்களை எமது அணி கைப்பற்றிய போதிலும் விளையாட்டு என்றால் அதில் தோல்வியும் வரும். அதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்” என்றார்.
இரண்டாவது அரையிறுதி – சனி மவுன்ட் எதிர் லக்கி ஸ்டார்
இரண்டாவது அரையிறுதி ஆட்டம் கல்முனை சனி மவுன்ட் விளையாட்டுக் கழக அணிக்கும், கல்முனை லக்கி ஸ்டார் அணிக்குமிடையில் இடம்பெற்றது.
இதில் போட்டி ஆரம்பமாகி 26ஆவது நிமிடத்தில் சனி மவுன்ட் வீரா் வை.எம்.சஜீத் பெனால்டி எல்லைக்கு வெளியில் இருந்து மிக வேகமாக அடித்த பந்து கோல் கம்பத்திற்குள் சென்று கோலாக மாறியது. இதனால் 1 -0 என்ற கோல் அடிப்படையில் சனி மவுன்ட் முன்னிலை பெற்றது.
லக்கி ஸ்டார் அணிக்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் கோல் பெற முடியவில்லை. போட்டியின் 37ஆவது நிமிடத்தில் லக்கி ஸ்டார் பின்கள வீரா் முக்கமட் முறையற்ற விதத்தில் விளையாட முற்பட்டதால் மத்தியஸ்தர் சனி மவுன்ட் அணிக்கு பெனால்டி வாய்ப்பை வழங்கினார். எம்.ஆர்.எம். றில்கான் பெனால்டியை வெற்றிகரமாக உதைக்க இரண்டாவது கோலையும் சனி மவுன்ட் கழகம் பெற்றது. இதன் மூலம் 2 -0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் சனி மவுன்ட் தொடர்ந்தும் முன்னிலை பெற்றது.
முதல் பாதி ஆட்டம் முடிவதற்கு இன்னும் 2 நிமிடங்கள் எஞ்சிய நிலையில் அதாவது 43ஆவது நிமிடத்தில் லக்கி ஸ்டார் நட்சத்திர வீரா் ஜே.ஏ.மாஜீத் மிகவும் சிறப்பான முறையில் அடித்து கோல் பெற்றார். இதன் மூலம் லக்கி ஸ்டார் அணி தமது முதலாவது கோலைப் பெற்றுக் கொண்டது.
முதல் பாதி: சனி மவுன்ட் விளையாட்டுக் கழகம் 2 -1 லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம்
இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரண்டு அணிகளும் ஒன்றை ஒன்று சளைக்காமல் வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. போட்டியின் 74ஆவது நிமிடத்தில் லக்கி ஸ்டார் அணிக்கு கோணர் கிக் வாய்ப்பு கிடைத்தது. நட்சத்திர வீரா் மாஜீத் கிடைத்த வாய்ப்பை சிறப்பான முறையில் பயன்படுத்தி கோலாக மாற்ற, லக்கி ஸ்டார் கழகம் இரண்டாவது கோலையும் பெற்றது.
இதன் மூலம் 2 -2 என்ற கோல்கள் அடிப்படையில் போட்டியை லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம் சமநிலைப்படுத்திக் கொண்டது. 80ஆவது நிமிடத்தில் சனி மவுன்ட் வீரா் றில்கான் இரண்டு வீரா்களை பின்தள்ளி கோல் கம்பத்தை நோக்கி அடித்த பந்து கம்பத்திற்குள் சென்று வெற்றிக் கோலாக மாறியது. 3 -2 என்ற கோல்கள் அடிப்படையில் சனி மவுன்ட் கழகம் முன்னிலை பெற்றது.
முழு நேரம்: சனி மவுன்ட் விளையாட்டுக் கழகம் 3 -2 லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம்
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற சனி மவுன்ட் விளையாட்டுக் கழகம் இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.
கோல் பெற்றவர்கள்
சனி மவுன்ட் விளையாட்டுக் கழகம் – வை.எம்.சஜீத் 26’, எம்.ஆர்.எம்.றில்கான் 37’, எம்.ஆர்.எம்.றில்கான் 80’
லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம் – ஜே.ஏ.மாஜீத் 43’, ஜே.ஏ.மாஜீத் 74’
போட்டிக்கு பிரதம மத்தியஸ்தராக எம்.பீ.எம்.ரசீட் கடமையாற்றியதுடன் துணை மத்தியஸ்தர்களாக சீ.எம். அஸ்கர்,எம்.எம். ரக்கீஸ், நான்காவது மத்தியஸ்தராக ஏ. ரிசாட் போட்டி ஆணையாளராக ஜே. பாதுசா ஆகியோர் கடமையாற்றினர்.
வெற்றி பெற்ற சனி மவுன்ட் விளையாட்டுக் கழக பயிற்றுவிப்பாளர் எம்.ஐ.எம்.ஏ.மனாப் கருத்துத் தெரிவிக்கும், ”எமது வீரா்கள் ஆரம்பம் முதல் மிகச்சிறப்பாக விளையாடினர். இறுதிப் போட்டியில் விளையாட தெரிவானதில் மகிழச்சியடைகின்றோம். நிந்தவுர் கென்ட் கிக் சுற்றில் மூன்றாமிடம் பெற்றிருந்தோம். நிச்சயம் இம்முறை கிண்ணத்தைக் கைப்பற்றுவதில் நம்பிக்கை கொண்டுள்ளளோம்” என்றார்.
லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழக பயிற்றுவிப்பாளர் ஏ.எம். பைசால் கருத்துத் தெரிவிக்கும் போது, ”வெற்றி பெறுகின்ற வாய்ப்பு எமது அணிக்கு இருந்தது. கடைசி சந்தர்ப்பத்தில் அது இல்லாமல் போனது. கவலைதான். இருந்தும் எமது வீரா்களின் போராடும் திறன் இச்சுற்றுப் போட்டியில் கூடுதலாக வெளிப்பட்டது பாராட்டுக்குரியதாகும்” என்றார்.
இன்று இரவு 8.00 மணிக்கு இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் கல்முனைப் பிரதேசத்தின் பிர்ளியன்ட் விளையாட்டுக் கழகமும் சனி மவுன்ட் விளையாட்டுக் கழகமும் மோதவுள்ளது.