இம்மாத இறுதியில் சீனாவின் செங்கோ நகரில் இடம்பெறவுள்ள சர்வதேச கூடைப்பந்து சம்மேளனத்தின் (FIBA) 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 3X3 கூடைப்பந்தாட்ட தொடருக்கான இலங்கை அணியினர் தம்மைத் தயார்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த காலங்களில் பாடசாலை மட்டங்களில் வெளிப்படுத்திய திறமைக்கு அமைய, யாழ் தீபகற்பத்தின் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவி பாபு பாணுவும் குறித்த தேசிய அணிக் குழாமிற்காகத் தெரிவாகியுள்ளார்.
புதிய சாதனையுடன் பல்கலைக்கழக பளு தூக்கல் சம்பியனாகிய துஷாந்த்
இந்த ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பளு தூக்கல்..
நீண்ட கால யுத்தத்திற்குப் பின்னரான தற்போதைய சூழலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து அதிகளவான வீர வீராங்கனைகள் தேசிய மட்டத்தில் பல போட்டிகளில் பிரகாசிப்பதோடு, தம்மை தேசிய அணியில் பிரதிநிதித்துவப்படுத்தியும் வருகின்றனர்.
அந்த வரிசையில், தற்பொழுது குறித்த கூடைப்பந்து அணியில் இணைவதன் மூலம் பாணுவும் வடக்கிற்கு பெருமை சேர்த்தவர்கள் பட்டியலில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.
சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வம் கொண்ட பாணு பாபு, தொடர்ச்சியாக போட்டிகளை அவதானித்து வந்துள்ளார். இதன் காரணமாக கூடைப்பந்து விளையாட்டில் ஈர்க்கப்பட்ட அவர், தமது பெற்றோரின் விருப்பத்துடன் ஆறாம் தரத்தில் படித்துகொண்டிருந்தபோது முதன் முதலாக கூடைப்பந்து விளையாட்டில் இணைந்துகொண்டார்.
எனினும், ஆரம்ப காலத்தில் அவருக்கு பாடசாலை அணியில் இடம் கிடைத்திருக்கவில்லை. அவ்வாறான ஒரு நிலையிலும், தனது ஆர்வம் மற்றும் கடும் பயிற்சிகளின் பலனாக தொடர்ந்தும் அவ்விளையாட்டில் இணைந்திருந்தமையினால் பிற்காலத்தில் அவருக்கு அணியில் இடம் கிடைத்தது.
இது குறித்து ThePapare.com இடம் கருத்து தெரிவித்த பாணு, “கூடைப்பந்து விளையாடும் விதம் பிடித்திருந்தது. அதற்கமைய நான் ஆறாம் வகுப்பிலிருந்து கூடைப்பந்து விளையாடி வருகின்றேன். முதலில் அணியில் இணைக்கப்படவில்லை. பயிற்சிகளுக்கு மட்டும்தான் சென்றுகொண்டிருந்தேன். என்னுடைய சகோதரிகள் எல்லோரும் விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள். கல்வி மட்டுமல்ல விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதே எனது இலக்கு. ஆனால் சில வேளைகளில் பயிற்சிகளின் பிரத்தியேக வகுப்புகளுக்கு போக முடியாமல் இருகின்றது.
எல்லோருடைய ஒத்துழைப்பும் கிடைக்கின்றபடியால்தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைதிருக்கின்றது. அத்துடன், என்னுடைய சொந்த முயற்சி மற்றும் பயிற்றுவிப்பாளரின் வழிகாட்டல்களின் மூலம் நான் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளேன்” என்று கூறினார்.
எதிர்காலத்தில் திறமைகளை மேலும் வளர்த்து சர்வதேச மட்டத்தில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்த எதிர்பார்த்துள்ள பாணு, தேசிய மட்டத்தில் சிறந்து பிரகாசித்து தாய்நாட்டிக்கு பெருமை சேர்க்க எதிர்பார்த்திருப்பதாகவும் இதன்போது மேலும் தெரிவித்தார்.
கிர்கிஸ்தான் பகிரங்க மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை வீரர்கள் 8 பேர்
எதிர்வரும் (ஜூன் மாதம்) 17ஆம், 18ஆம் திகதிகளில் கிர்கிஸ்தானின் பிஷ்கெக்..
பாணு பாபுவைப்பற்றி கருத்து தெரிவித்த அவரது பயிற்றுவிப்பாளர் புஷ்பராஜ் துவாரகதாஸ், ”கடந்த ஒன்றரை வருடங்களாக பாணுவிற்கு பயிற்சியளித்து வருகின்றேன். இவரிடம் இப்போதுள்ள குறைபாடுகளை நீக்கி சிறந்த விராங்கனையாக உருவாக்கவே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன். அந்த வகையில் எதிர்வருகின்ற போட்டிகளுக்காக அவரை மேம்படுத்தி தயார் படுத்துகின்றேன்.
கடந்த காலங்களில் யுத்த சூழ்நிலை காணப்பட்டதால் எங்களால் எங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த முடியவில்லை. எனினும் இப்போது எமக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.
அவரும் பாணுவை தேசிய அணிக்கு தெரிவுசெய்ய வாய்ப்பினை வழங்கிய யாழ் கூடைப்பந்து சங்கம் மற்றும் இலங்கை கூடைப்பந்து சங்கத்துக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.
இந்நிலையில், சர்வதேச மட்டத்துக்கு செல்லவிருக்கும் பாணு பாபு தன்னை மேலும் பலப்படுத்திக்கொள்ளும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் கடுமையான பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார். சர்வதேச மட்டத்தில் போட்டிகளை எதிர்கொள்ளக் கூடிய தகுதிகளை பாணுவிடம் வளர்த்துவிட பயிற்றுவிப்பாளர் துவாரகதாஸ் பல வழிகாட்டல்களை வழங்கி வருகின்றார்.
இவ்வாறு தேசிய அணிக்கு ஒரு வீராங்கனையை கொடுத்துள்ள கொக்குவில் இந்துக் கல்லூரியின் விளையாட்டுத்துறை தற்பொழுது ஒரு வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது. எனினும், அவர்கள் எண்ணில் அடங்காத குறைபாடுகள் இருக்கின்ற நிலையிலேயே இவ்வாறு திறமைமிக்கவர்களை உருவாக்கி வருகின்றனர்.
இது குறித்து கொக்குவில் இந்துக் கல்லூரியின் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் செல்வரத்தினம் குமரேசன் குறிப்பிடுகையில், ”பல வளப் பற்றாக்குறைகளுக்கு மத்தியில்தான் நாம் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். மாணவர்கள் பயிற்சிகளைப் பெற்றாலும் மைதானத்தின் நிலைமை காரணமாக உடல் ரீதியில் ஆபத்துக்களை எதிர்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன” என்றார்.
இவ்வாறான பல்வேறு இடர்களுக்கு மத்தியிலேயே பாணு பாபு தேசிய ரீதியில் தான் சாதிக்க வேண்டும், அதனூடாக பாடசாலைக்கும் வடக்கிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் பயணித்துக்கொண்டிருகின்றார்.
எனினும், இவ்வாறான மேலும் பல வீரர்கள் நாட்டின் பெருமைக்காக உருவாக வேண்டும் என்றால் விளையாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்து கொடுக்கப்பட வேண்டியது கட்டாயத் தேவையாக உள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கு போன்ற பகுதிகளில் மறைந்துள்ள சிறந்த வீர வீராங்கனைகளை நாட்டிற்கு அறிமுகப்படுத்த இது மேலும் அவசியமாக உள்ளது.
பெரிய இலக்குகளுடன் உள்ள பாணு பாபு எதிர்காலத்தில் பல வெற்றிகளைக் குவித்து அவரது கனவுகள் நனவாக ThePapare.com சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.