ரஷ்யாவைச் சேர்ந்த ஏராளமான வீர – வீராங்கனைகள் 2008 மற்றும் 2012-ம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் கனடாவைச் சேர்ந்த மெக்லாரன், ரஷியா வீரர்களின் மாதிரியை மறுபரிசோதனை நடத்தி விசாரணை நடத்தினார். அப்போது சோச்சியில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் ரஷிய வீர-வீராங்கனைகள் அந்நாட்டு அரசு ஒத்துழைப்புடன் ஊக்க மருந்து பயன்படுத்தியுள்ளனர் என்பதைக் கண்டறிந்தார்.
இதனால் ரியோவில் கலந்து கொள்ள ஒட்டுமொத்த ரஷ்ய அணிக்கும் தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ரஷ்யாவிற்கு தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
இந்நிலையில் 24ஆம் திகதி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூடி இதுகுறித்து ஆலோசனை நடத்தியது. இறுதியில் ரஷியா ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளலாம். மேலும், ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அந்தந்த விளையாட்டுத்துறை நடவடிக்கை எடுத்துக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது.
அதன்படி உலக கனோய் பெடரேஷன் ரஷியாவைச் சேர்ந்த ஐந்து வீரர்களுக்கு தடை விதித்துள்ளது. 2012-ல் லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அலெச்சாண்டர் டியான்சென்கோ, ஐரோப்பிய சாம்பியன் அன்ட்ரே க்ரைடோர், ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற அலெக்சே கோரோவாஸ்கோவ், எலேனா அனியுஷினா மற்றும் நடாலியா பொடோல்ஸ்கையா ஆகியோர் தடை விதிக்கப்பட்ட வீரர்கள் ஆவர்.