இலங்கை A மற்றும் பங்களாதேஷ் A மகளிர் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 2ஆவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் மகளிர் A அணி 7 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றியீட்டியது.
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-0 என பங்களாதேஷ் மகளிர் A அணி கைப்ற்றியது. முன்னதாக, பனாகொடை இராணுவ மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த முதலாவது போட்டி மழையினால் கைவிடப்பட்டது.
கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் நேற்று (10) நடைபெற்ற இப் போட்டியானது சீரற்ற காலநிலை காரணமாக 20 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. இதன்படி, நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை மகளிர் A அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 113 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
மத்திய வரிசையில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய அணித் தலைவி சத்யா சந்தீப்பனி 36 ஓட்டங்களையம், மல்ஷா ஷெஹானி ஆட்டம் இழக்காமல் 25 ஓட்டங்களையும், பியூமி வத்சலா 22 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக் கொடுத்தனர்.
பந்துவீச்சில் பஹிமா காத்துன் 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், ரபியா கான் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
- இலங்கை வரும் பங்களாதேஷ் மகளிர் A அணி
- மகளிர் உலகக் கிண்ண போட்டி அட்டவணை வெளியீடு
- மகளிர் CPL தொடரில் களமிறங்கும் ஹர்ஷிதா சமரவிக்ரம
114 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் A அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
அந்த அணிக்காக டிலாரா அக்தர் 47 ஓட்டங்களையும், முர்ஷிதா காத்துன் 30 ஓட்டங்களையும், நிகார் சுல்தானா ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.
பந்துவீச்சில் சேத்தனா விமுக்தி 20 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும், நிமேஷா மதுஷானி 31 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட T20i தொடரின் முதலாவது போட்டி நாளை (12) கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை A – 113/5 (30.0) கௌஷினி நுத்யங்கா 18, சத்யா சந்தீபனி 36, பியுமி வத்சலா 22, மல்ஷா ஷெஹானி 25*, ரபேயா கான் 2/18, ஃபஹிமா காதுன் 2/10
பங்களாதேஷ் A – 117/3 (18.0) திலாரா அக்டர் 47, முர்ஷிதா காதுன் 30, நிகர் சுல்தானா 24*
முடிவு – பங்களாதேஷ் மகளிர் A அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<