ஷாய் ஹோப்பின் சதத்தால் பங்களாதேஷுடனான ஒருநாள் தொடரை தக்கவைத்த மேற்கிந்திய தீவுகள்

409

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷாய் ஹோப்பின் அற்புத சதத்தின் மூலம் பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி நான்கு விக்கெட்டுகளால் வெற்றி ஒன்றை பெற்றுக் கொண்டது.

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்ததோடு இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டி தொடரை தீர்மானிக்கும் ஆட்டமாக மாறியுள்ளது.

மேற்கிந்திய தீவுகளை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பங்களாதேஷ்

டாக்காவில் இன்று (11) பகலிரவு போட்டியாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ஓட்டங்களைப் பெற்றது. இந்நிலையில் ஷாய் ஹோப் 144 பந்துகளில் 12 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 146 ஓட்டங்களை பெற்றதால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி இலக்கை எட்டுவது இலகுவாக அமைந்தது. இது அவரது சிறந்த ஒருநாள் ஓட்டங்களாகவும் இருந்தது.

எனினும் பங்களாதேஷ் அணி தனது ஓட்டங்களை பாதுகாக்க சிறப்பான ஆரம்பத்தை பெற்றது. மஹிதி ஹஸன் மிராஸ் இரண்டாவது ஓவரிலேயே சந்திரபோல் ஹெம்ராஜை LBW முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். தொடர்ந்து டெரன் பிராவோ (27) மற்றும் மார்லன் சாமுவேல்ஸ் (26) சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.  

அணித்தலைவர் மஷ்ரபி மொர்தஸா மற்றும் முஸ்தபீஸ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை சாய்க்க மேற்கிந்திய தீவுகள் அணி 185 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் கண்டது.

எனினும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஷாய் ஹோப் கடைசி வரை போராடியும் கீமோ போல் தேவையான 18 ஓட்டங்களை பெற்றும் மேற்கிந்திய தீவுகளை வெற்றி வரை அழைத்துச் சென்றனர். குறிப்பாக முஸ்தபீஸ் வீசிய 49ஆவது ஓவரில் மூன்று பௌண்டரிகள் பெறப்பட்டது மற்றும் பங்களாதேஷ் வீரர்கள் பிடியெடுப்புகளை தவறவிட்டது மேற்கிந்திய தீவுகளின் வெற்றியை இலகுவாக்கியது.

தனது சொந்த மண்ணில் ஆடும் பங்களாதேஷ் அணிக்கு இந்தப் போட்டி முக்கியமானதாக இருந்தது. அந்த அணியில் ஐந்து சிரேஷ்ட வீரர்களான மஷ்ரபி, ஷகீப் அல் ஹஸன், தமீம் இக்பால், முஷ்பீகுர் ரஹீம் மற்றும் மஹ்மதுல்லாஹ் ஆகியோர் ஒன்றிணைந்து விளையாடும் 100 ஆவது ஒருநாள் போட்டியாக இது இருந்தது. துரதிஷ்டவசமாக அந்த அணி தோல்வியை சந்தித்தது.     

முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட பங்களாதேஷ் அணிக்காக இந்த வீரர்களில் தமீம், முஷ்பீகுர் மற்றும் ஷகீப் ஆகிய மூவரும் பெற்ற அரைச்சதத்தின் மூலமே பங்களாதேஷ் அணி 255 ஓட்டங்களைப் பெற்றது.  

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லிடோன் தாஸ் 5 ஓட்டங்கள் பெற்ற நிலையில் காயத்துடன் அரங்கு திரும்ப அடுத்து வந்த இம்ருல் கைஸ் ஓட்டமேதுமின்றி ஆட்டமிழந்தார். எனினும் தமீம் மற்றும் முஷ்பீக் இரண்டாவது விக்கெட்டுக்கு 111 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

அரைச்சதம் பெற்ற விரைவில் தமீம் ஆட்டமிழந்ததோடு தொடர்ந்து முஷ்பீக் 80 பந்துகளில் 62 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

இனி நாணய சுழற்சி இல்லை; அறிமுகமாகிறது துடுப்பாட்ட மட்டை சுழற்சி

ஷகீப் மற்றும் மஹ்மதுல்லாஹ் (30) மேலும் 61 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்டங்களை மேலும் அதிகரித்தனர். பங்களாதேஷ் அணிக்காக அதிகூடிய ஓட்டங்களை பெற்ற ஷகீப் 6 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 62 பந்துகளில் 65 ஓட்டங்களை குவித்தார்.

ஒஷேன் தோமஸின் பந்தில் கணுக்காலில் காயம் ஏற்பட்டு அரங்கு திரும்பிய நிலையில் மீண்டும் துடுப்பெடுத்தாட வந்த தாஸ் மேலும் மூன்று ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

மேற்கிந்திய தீவுகள் சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஒஷேன் தோமஸ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இரு அணிகளுக்கும் இடையில் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14) சில்ஹெட்டில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

பங்களாதேஷ் – 255/7 (50) – ஷகீப் அல் ஹஸன் 65, முஷ்பீகுர் ரஹீம் 62, தமீம் இக்பால் 50, ஒஷேன் தோமஸ் 3/54

மேற்கிந்திய தீவுகள் – 256/6 (49.4) – ஷாய் ஹோப் 146*, டெரன் பிரவோ 27, ருபெல் ஹொஸைன் 2/57, முஸ்தபீசுர் ரஹ்மான் 2/63    

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<