பங்களாதேஷுக்கு கிரிகெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரின் இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி மேற்கிந்திய தீவுகளின் துல்லியமான பந்து வீச்சில் 19 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 129 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் சிறப்பாக விளையாடிய அணித்தலைவர் ஷகிப் அல் ஹசன் அதிக பட்சமாக 61 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன் ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஷெல்டன் கொட்ரல் 4 விக்கெட்டுகளையும் கீமோ போல் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.
இலங்கை அணியை இன்னலுக்கு தள்ளியுள்ள லேத்தமின் கன்னி இரட்டைச்சதம்
வெற்றி பெறுவதற்கு ஓவர் ஒன்றுக்கு 6.5 ஓட்டங்கள் என்ற இலகுவான ஓட்ட சராசரியே பெற வேண்டிய நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான எவின் லுயிஸ் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோரின் அதிரடியில் 3.1 ஓவரிலேயே மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓட்டங்களை கடந்தது.
அணியின் ஓட்ட எண்ணிக்கை 51 ஆக இருந்த போது லுயிஸ் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். எனினும் தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் புரான் தன் பங்கிற்கு அதிரடி காட்ட அவ்வணி முதல் ஆறு ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 91 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அதிரடியாக விளையாடிய ஷாய் ஹோப் 16 பந்துகளில் அரைச்சதம் பெற்றிருந்தார். இது சர்வதேச டி20 களில் பெறப்பட்ட மூன்றாவது வேகமான அரைச்சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 10.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. அதிக பட்சமாக ஷாய் ஹோப் 55 ஓட்டங்களையும் கீமோ போல் மற்றும் புரான் ஆகியோர் ஆட்டமிழக்காமல் 28 மற்றும் 23 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகளின் பந்து வீச்சாளர் ஷெல்டன் கொட்ரல் தெரிவானார். தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
பங்களாதேஷ் – 129 (19) – ஷகிப் அல் ஹசன் 61, செல்டன் கொட்ரல் 28/4, கீமோ போல் 23/2
மேற்கிந்திய தீவுகள் – 130/2 (10.5) – ஷாய் ஹோப் 55, கீமோ போல் 28*, புரான் 23, சைபுத்தீன் 13/1
முடிவு – மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க