ரஷீத் கானின் மாய சுழலோடு பங்களாதேஷ் உடனான T20 தொடர் ஆப்கான் வசம்

313
Image Courtesy - AFP

நேற்று (05) நடைபெற்று நடைபெற்று முடிந்திருக்கும் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருப்பதுடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரையும் 2-0 எனக் கைப்பற்றி இருக்கின்றது.

இந்தியாவின் டெஹ்ராடுன் நகரில் நடைபெற்று வருகின்ற இந்த T-20 தொடரின் முதல் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் இளவயது வீரர் ரஷித் கானின் சுழலோடு 45 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தான் அணி பங்களாதேஷை தோற்கடித்திருந்தது. இவ்வாறனதொரு நிலையிலேயே தொடரை தீர்மானிக்கின்ற இரண்டாவது T20 போட்டி நேற்று நடைபெற்றது.

ரஷீதின் சுழலுக்கு தடுமாறிய பங்களாதேஷ் அணி ஆப்கானிடம் தோல்வி

பதின்ம வயது சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானின்..

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணியின் தலைவர் சஹீப் அல் ஹசன் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்திருந்தார். இதன்படி முதலில் துடுப்பாடியிருந்த பங்களாதேஷ் அணி போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே தமது முதல் விக்கெட்டினைப் பறிகொடுத்திருந்தது.  ஆரம்ப துடுப்பாட்ட வீரரான லிடன் தாஸ் ஒரு ஓட்டத்தினை மாத்திரம் பெற்ற நிலையில் ஸபூர் சத்ரானின் வேகத்திற்கு இரையாகினார். தொடர்ந்து வந்த பங்களாதேஷ் அணியின் வீரர்களும் சுழல் வீரர்களான மொஹமட் நபி, ரஷித் கான் போன்றோரின் பந்துவீச்சை முகம் கொள்ள முடியாமல் குறுகிய ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பியிருந்தனர்.

எனினும், பங்களாதேஷ் அணிக்காக தமிம் இக்பால் 43 ஓட்டங்களைப் பெற்றுத் தந்திருந்தார். அவ்வணியின் இரண்டு வீரர்கள் (முஸ்பிகுர் ரஹீம், அபு ஹைதர் ரோனி) இருபது ஓட்டங்களைத் தாண்டியிருந்தனர்.

இதன்படி பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களைக் குவித்துக் கொண்டது.

ஆப்கான் அணியின் பந்துவீச்சு சார்பாக ரஷித் கான் வெறும் 12 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்ததுடன், மொஹமட் நபி 2 விக்கெட்டுக்களை தனக்கு சொந்தமாக்கியிருந்தார்.

பின்னர் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 135 ஓட்டங்களைப் பெற பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கான் அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் சமியுல்லாஹ் சென்வாரி 3 சிக்ஸர்கள் 2 பெளண்டரிகள் அடங்கலாக 49 ஓட்டங்களைக் குவித்து தனது தரப்பை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றிருந்ததுடன், மொஹமட் நபி ஆட்டமிழக்காது வெறும் 15 பந்துகளுக்கு 31 ஓட்டங்களை விளாசியிருந்ததது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்த வெற்றிகளுக்குப்பின் பாகிஸ்தான் மகளிரிடம் வீழ்ந்த இலங்கை

மகளிர் ஆசிய கிண்ண டி20 தொடரில் பாகிஸ்தானுடனான போட்டியில்…

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் வலதுகை சுழல் வீரரான மொசாதிக் ஹொசைன் 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

இந்தப் போட்டியின் வெற்றி மூலம் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் உடன் நடைபெற்ற முதலாவது இரு தரப்பு தொடரை வெற்றியீட்டிய அணியாகவும் மாறுகின்றது.

போட்டியின் ஆட்ட நாயகன் விருதை முதல் T20 போட்டி போன்று இம்முறையும் ரஷித் கான் பெற்றுக் கொண்டார். இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான T20 போட்டி டெஹ்ராடூனில் நாளை (07) இடம்பெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

பங்களாதேஷ்134/8 (20) – தமிம் இக்பால் 43(48), முஸ்பிகுர் ரஹீம் 22(18), அபூ ஹைதர் 21(14), ரஷித் கான் 12/4(4), மொஹமட் நபி 19/2(4)

ஆப்கானிஸ்தான் 135/4 (18.5) – சமியுல்லாஹ் சென்வாரி 49(41), மொஹமட் நபி 31(15),  மொசாதீக் ஹொசைன் 21/2(3)

முடிவு ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<